கருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)

கருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)

     கருந்துளையொன்றுக்கு அருகே செல்லும் அனைத்தும், முடிவில்லா ஈர்ப்புவிசையால் அதன் மையத்திலிருக்கும் ஒருமைப் புள்ளியை (Singularity) நோக்கி இழுக்கப்படும் என்றார் ஸ்டீவன் ஹாக்கிங். ஒளி கூட அதன் ஈர்ப்புவிசையிலிருந்து தப்பிவிட முடியாது. தனக்கு அருகே வரும் எதுவானாலும், அதை உள்ளிழுத்துவிடும். அளவில் பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் கருந்துளையினுள்ளே சென்று, அந்த ஒருமைப் புள்ளியுடன் சங்கமமாகிவிடும். கருந்துளையானது ஆரம்பத்தில் கையளவேயுள்ள மிகமிகச் சிறிய விட்டமுடையதாகத்தான் காணப்படும். அதனுள்ளே விண்வெளியில் உள்ளவை ஒவ்வொன்றாக இழுக்கப்படுவதால், அது படிப்படியாகப் பெரிதாகிப் பிரமாண்டமானதாக மாறிவிடுகின்றது. “மிகச்சிறிய அளவுள்ள கருந்துளைக்குள், எப்படி மிகப்பெரிய கோள்களோ, நட்சத்திரங்களோ புகுந்து கொள்ள முடியும்?” என்று நீங்கள் இப்போது சிந்திக்கலாம். இதற்கான பதிலில்தான் அண்டமும், குவாண்டமும் ஒன்றாக இணையும் செயல் இருக்கிறது. அண்டத்தில் பிரமாண்ட நிலையிலுள்ள நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவற்றுக்கும், குவாண்டம் நிலையில் மிகமிகச் சிறிய அளவிலிருக்கும் உபஅணுத்துகள்களுக்கும் (Subatomic Particles) இடையிலான தொடர்பு கருந்துளையின் மூலம் ஏற்படுகிறது. ‘அண்டமும் குவாண்டமும்’ என்னும் இந்தத் தொடரைக் கூட ஒரு கருந்துளையுடன் நான் ஆரம்பித்ததற்கு இதுவே காரணமாகவும் இருந்தது.

கருந்துளையின் எல்லையாக இருக்கும் ‘நிகழ்வு எல்லை’ வரை யாரும் செல்லலாம் என்று முன்னர் பார்த்திருந்தோம். அந்த எல்லையில் கால் வைக்கும் வரை நமக்கு எதுவும் நடக்கப் போவதில்லை. அந்த எல்லையைத் தாண்டிக் கால்வைக்கும் போது, மீண்டு வரமுடியாமல் கருந்துளையின் மையம் நோக்கி இழுக்கப்படுவோம். அதனாலேயே அந்த எல்லைப் புள்ளி, ‘திரும்பவே முடியாத புள்ளி’ (The Point of no return) என்று சொல்லப்படுகிறது. திரும்பி வரமுடியாத அளவுக்கு இழுக்கக் கூடிய ஆற்றலாக, கருந்துளையின் மையமான ‘ஒருமைப் புள்ளி’ இருக்கிறது. “கருந்துளை மிகச் சிறியதாக இருந்தாலும், அதற்குள் மிகப்பெரிய நட்சத்திரம் எப்படிப் புகுந்து கொள்கிறது?” என்ற கேள்வி நமக்குத் தோன்றியதல்லவா? கருந்துளை சிறிதாக இருந்தாலும் அதன் மையத்தின் ஈர்ப்பு விசையும், அடர்த்தியும் முடிவில்லாததாக இருக்கும். ஒரு மிகச்சிறிய கருந்துளையின் அருகே இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் செல்கிறீர்களென்று வைத்துக் கொள்ளுங்கள். நிகழ்வு எல்லையைத் தாண்டி உங்கள் வலதுகாலை வைக்கிறீர்கள். அப்போது நீங்கள் கற்பனையே செய்ய முடியாத ஈர்ப்பு விசையால் இழுக்கப்படுவீர்கள். முதலில் உங்கள் கால்பகுதியை அந்த ஈர்ப்புவிசை இழுக்க ஆரம்பிக்கும். நீங்கள் அந்த ஈர்ப்பு விசையின் வீரியத்தால் ஒரு மெல்லிய நூலிழை போல காலிலிருந்து தலைவரை நேராக்கப்படுவீர்கள். ஆறடி நீளமுள்ள உங்கள் ஒவ்வொரு பாகமும் அதீத ஈர்ப்புவிசையினால், அணுக்களாகச் சிதைந்து பின்னர் உபஅணுத்துகள்களாகச் சிதைக்கப்பட்டு, காலிலிருந்து தலைவரை நீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டப்பட்டு, பல கிலோமீட்டர்கள் நீளமான ஒரு மெல்லிய நூல் போல மையம் நோக்கி உள்ளே செல்வீர்கள். அதாவது மாவைக் குழைத்து அதை கைகளால் அழுத்தி அழுத்தி மெல்லிய ‘நூடுல்ஸ்’ இழை போல மாற்றுவோமல்லவா? அதுபோல, நீங்கள் மாற்றப்படுவீர்கள். மெல்லிய இழையென்றால், உங்களால் கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு மெல்லிய இழையாக நீட்டப்பட்டு மையம் நோக்கி இழுக்கப்படுவீர்கள். இது போலவே, ஒரு நட்சத்திரமும் மிக மெல்லிய பகுதியாக நீட்டப்பட்டு கருந்துளையினால் உறிஞ்சப்படும்.

உலகிலேயே மிகப்பெரிய கட்டடம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் கட்டடம் சீமெந்துக் கற்களினாலோ, செங்கற்களினாலோ உருவாக்கப்பட்டிருக்கலாம். செங்கற்களும், சீமெந்துக் கற்களும் அணுக்களால் உருவானவை என்பது உங்களுக்குத் தெரியும். அந்தக் கட்டடம் கட்டப்பட்ட கற்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால், அவற்றில் மொத்தமாக ட்ரில்லியன் மடங்கு ட்ரில்லியன் அணுக்கள் இருக்கின்றது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளுங்கள். அந்த ட்ரில்லியன் ட்ரில்லியன் அணுக்களின் பருமன்தான் அந்தக் கட்டடத்தின் பருமனாக இருக்கும். இப்போது, ஒரு அணுவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த அணுவைப் பத்துக் கிலோமீட்டர்கள் பெரிதானது என்று கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். பத்துக் கிலோமீட்டர்கள் பெரிதான அணுவினது அணுக்கரு ஒரு பந்தின் அளவில்தான் இருக்கும். அணுவுடன் ஒப்பிடும் போது அவ்வளவு சிறியது அணுக்கரு. அணுவின் கரு தவிர்ந்து மிகுதி எல்லாமே வெற்றிடம்தான். அதாவது, ஒரு அணுவை எடுத்துக் கொண்டால் அதில் 99.9999 வீதமான பகுதி வெற்றிடமாகத்தான் இருக்கும். எஞ்சிய பகுதியில்தான் அணுவின் அணுக்கரு இருக்கிறது. அந்த அணுக்கருவினில்தான் அணுவின் மொத்த எடையும், உபஅணுத்துகள்களும் இருக்கின்றன. இப்போது, அணுக்கருவை எடுத்துக் கொண்டால், அதனுள் 1% பகுதியில்தான் உபஅணுத்துகள்கள் அனைத்தும் இருக்கின்றன. எஞ்சிய 99% வெற்றிடமாகத்தான் இருக்கின்றது. அணுவும் வெற்றிடம். அணுக்கருவும் வெற்றிடம். இதைச் சரியாக நீங்கள் புரிந்து கொள்வீர்களாயின் நான் சொல்ல வருவது எல்லாமே புரிந்துவிடும்.

உலகிலேயே பெரிதான அந்தக் கட்டடத்தை மீண்டும் எடுத்துக் கொள்வோம். அதன் ட்ரில்லியன் ட்ரில்லியன் அணுக்களில் உள்ள அத்தனை அணுக்கருக்களையும் ஒன்று சேர்த்தால், ஒரு குண்டூசி முனையளவு பருமன் கூட அவற்றிற்கு இருக்காது. அந்த அணுக்கருக்கள் அனைத்தையும் பிளந்து, அவற்றினுள் உள்ள உபஅணுத்துகள்களை மட்டும் ஒன்று சேர்த்தால், கண்ணுக்கே தெரியாத மிகமிகமிகச் சிறிய புள்ளியின் பருமனுடன் அவை இருக்கும். உலகிலேயே பெரிய அந்தக் கட்டடம் உபஅணுத்துகள்களாகச் சிதைக்கப்பட்டால், கண்ணுக்கே தெரியாத ஒரு புள்ளியின் பருமனில்தான் இருக்கும். அந்தக் கட்டடம் கருந்துளையொன்றால் இழுக்கப்பட்டு, அதன் ஒருமை மையத்துடன் சேர்ந்தாலும், மையத்தின் பருமன் அதிகரிக்கவே மாட்டாது. ஒரு நட்சத்திரம் உபஅணுத்துகள்களாகச் சிதைந்தாலும் அவற்றின் மொத்தப் பருமன் கூடக் கண்ணுக்குத் தெரியாத புள்ளியின் அளவாகவே இருக்கும். நட்சத்திரங்களும், கோள்களும் கருந்துளை மையத்தில் ஒன்று சேர்ந்தும், அந்த ஒருமைப் புள்ளி மிகமிகமிகச் சிறிதாகவே இருப்பதன் காரணம் இதுதான். கருந்துளையின் மையப்புள்ளி மிகச்சிறியதாக இருந்தாலும், எல்லையில்லா அடர்த்தியையும், ஈர்ப்புவிசையயியும் கொண்டிருப்பதற்கான காரணமும் இதுதான். இப்படிப்பட்டதொரு நிலையில்தான், அண்டம் உருவாகக் காரணமான, ‘பிக்பாங்’ பெருவெடிப்பிற்கு முன்னர் இருந்த ஒருமைப் புள்ளியும் இருந்தது. அதனால்தான் அதைக் ‘குவார்க் கூழ்’ (Quarck soup) என்றார்கள்.

கருந்துளை மிகச் சிறிதாக இருந்து தனக்கு அருகே வருபவற்றை ஒவ்வொன்றாக விழுங்குவதால், தன் உருவத்தையும் பெரிதாக்கிக் கொள்கிறது. அதிக உணவை உண்பதால் நாம் பெருப்பது போல. கருந்துளைக்கு உணவாக இருப்பவை நட்சத்திரங்களும், கோள்களும், நெபுலாக்களும் ஆகும். நட்சத்திரமாக இருந்தாலென்ன, கோள்களாக இருந்தாலென்ன, நீங்களாக இருந்தாலென்ன, ஒரு நாய்க்குட்டியாக இருந்தாலென்ன அனைத்தும் அணுக்களின் கட்டமைப்பினாலேயே உருவாக்கப்பட்டவை. ஏதோ ஒரு ஒழுங்கற்ற ஒழுங்குடன் கூடிய ஒரு கட்டமைப்பின் மூலம் இவையெல்லாம் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் உருவத்தை நீங்கள் கண்ணாடியில் பார்த்திருப்பீர்கள். நீங்கள் பார்க்கும் உருவம் மேலோட்டமாகப் பார்க்கையில் அழகாக உங்களுக்குத் தெரிந்தாலும் (ஒவ்வொருவரும் அவரவர் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள்), அதில் ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கு இருப்பதைக் கவனிக்கலாம். நீங்கள் ‘செல்கள்’ என்னும் கலங்களால் அடுக்கப்பட்டு உருவாகப்பட்டவர். இந்தச் செல்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தால், நீங்கள் ஒரு சதுரமானவராகவோ, நீள்சதுரமானவராகவோதான் இருப்பீர்கள். ‘நான் சொல்வது புரியவில்லையா? சரி, இப்படிப் பாருங்கள்’. நீள்சதுர வடிவமான செங்கற்களை ஒரு ஒழுங்குடன் மேலே மேலே அடுக்கிக் கொண்டு வாருங்கள். அதாவது நீள, அகல, உயரங்களில் அடுக்கும் செங்கற்கள் ஒரே அளவாக இருக்க வேண்டும். அதைத்தான் ஒழுங்கு என்பார்கள். அப்படி அடுக்கும் போது, உங்களுக்குக் கிடைப்பது ஒரு நீள்சதுரமான உருவமாகத்தான் இருக்கும். ஆனால், அதே செங்கற்களை ஒழுங்கற்ற ஒரு ஒழுங்கில் அடுக்கிக் கொண்டு வந்தால், அழகான வீடு ஒன்று உருவாகும். ஒழுங்கற்ற ஒழுங்கு என்பது என்னவென்று இப்போது புரிகிறதா? இதுபோலத்தான், நீங்களும் செல்களால் ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கில் அடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். முகத்தில் இருக்கும் மூக்கு முன்னோக்கியும், காதுகள் இரண்டு பக்கங்களில் துருத்திக் கொண்டும், கைகள் தனியானதொரு பகுதியாக தோள்களிலிருந்து பிரிந்து வளர்ந்ததும் இந்த ஒழுங்கற்ற தண்மையினால்தான். ஆனாலும், வலது காது உருவாகும் போது, அதேபோல இடது காது உருவாகியதும், வலது கை உருவாகிய போது, அது போலவே இடது கை உருவாகியதும், மொத்தத்தில் உங்களுக்கு ஒரு சமச்சீரான உருவம் கிடைத்தது எல்லாமே கலங்களின் ஒரு ஒழுங்கான அமைப்பின் அடுக்கினால்தான். உங்களை நீங்கள் இனியொரு தடவை கண்ணாடியில் பார்க்கும் போது கவனியுங்கள், உங்கள் உருவத்தில் ஒரு ஒழுங்கும் இருக்கும், அது ஒழுங்கின்மையும் இருக்கும்.

உங்கள் உருவம் ஒழுங்குடனும், ஒழுங்கற்ற முறையிலும் அமைக்கப்பட வேண்டுமென்றால், அதற்கான தகவல்கள் (Informations) உங்கள் மரபணுக்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும். உங்கள் உருவம் என்றில்லை, மிருகங்கள், பறவைகள், கட்டடங்கள், பொருட்கள் எல்லாமே தகவல்களின் அடிப்படையிலேயே உருவாகியிருக்கின்றன. அதிகம் ஏன், நாம் வாழும் பூமி, சூரியன், கோள்கள், நட்சத்திரங்கள் எல்லாமே தகவல்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதைப் பற்றி விரிவாகக் கடந்த பகுதியில் பார்த்திருந்தோம். ஒன்று உருவாவதற்கு அடிப்படையாகத் தேவையானவை உபஅணுத்துகள்களும், அவை அமைக்கப்படத் தேவையான தகவல்களும்தான். இவை இரண்டும் எப்போதும் அண்டத்திலிருந்து அழிந்து போய்விடாது. அணுக்கள் மற்றும் உபஅணுத்துகள்களை எடுத்துக் கொண்டால், அவை ஒன்றிலிருந்து இன்னுமொன்றாக மாற்றப்படுமேயொழிய முற்றாக அழிக்கப்பட முடியாதவை. அது போலத் தகவல்களும் அழிக்க முடியாதவை. ஒரு பொருள் கருந்துளையினுள் நுழையும் போது, அது உபஅணுத்துகள்களாக சிதைக்கப்பட்டு மையம் நோக்கிச் சென்றாலும், அந்தப் பொருள் உருவாக்கப்பட்ட தகவல்கள் நிகழ்வு எல்லையின் மேற்பரப்பில் செய்திகளாகப் பதிவு செய்யப்படுகின்றன என்று நவீன அறிவியலில் சொல்கிறார்கள். ஒரு கருந்துளை உருவாகியது முதல் கொண்டு, அதனுள் செல்லும் அனைத்துப் பொட்களினது (பொருட்களா?) தகவல்களும், கணணியொன்றில் பதிவு செய்யப்படுவது போல, நிகழ்வு எல்லையில் பதிவு செய்யப்படுகிறது. இப்படிப் பதிவுசெய்யப்படும் தகவல்கள் அதிகரிக்க அதிகரிக்க, நிகழ்வு எல்லையின் அளவும் விரிவடைந்து பெரிதாகிக் கொண்டே போகும். இதனால் கருந்துளையின் அளவும் பெரிதாகிறது என்கிறார்கள். பதிவு செய்யப்பட்ட தகவல்கள் கருந்துளையினால் வெளிவிடப்படும் கதிர்வீச்சின் காரணமாக, ஒரு சினிமாப்படத்தைப் போல விண்வெளியின் மேற்பரப்பில் முப்பரிமாணத்தில் ஒளிபரப்புச் செய்யப்படுகின்றது. விண்வெளியின் மேற்பரப்பு இரண்டு பரிமாணங்களையுடையது (2D). அந்த இரண்டு பரிமாண மேற்பரப்பில் ஒளிபரப்பாகும் காட்சிகள் ஹோலோகிராம் (Hologram) போல, மூன்று பரிமாணக் காட்சிகளாகத் (3D) தெரிகின்றன. இப்படிப்பட்ட காட்சிகளாகத்தான் நமது பூமியும், அதில் வாழும் நாமும் ஒளிபரப்புச் செய்யப்படுகிறோம் என்று சொல்கிறார்கள். அதாவது விம்பங்களாகத் தெறிக்க்கப்படும் நாம், உண்மையாக வாழ்வதாகக் கற்பனை செய்து கொள்கிறோம் என்கிறார்கள். நான் இதை எழுதுவதாகவும், நீங்கள் வாசிப்பதாகவும் கூடக் கற்பனையே செய்கிறோம் என்கிறார்கள். அனைத்தும் நிஜமாக நடப்பதாகவே நாம் நினைத்துக் கொள்கிறோம். முன்னர் இருந்த பூமியும், அதில் வாழ்ந்த நாங்களும் எப்பொழுதோ கருந்துளையொன்றினால் விழுங்கப்பட்டுவிட்டோம். ஆனாலும் எங்களைப் பற்றிய தகவல்களும், பூமியைப் பற்றிய தகவல்களும் அந்தக் கருந்துளையின் நிகழ்வு எல்லையில் பதிந்து, இப்போது காட்சிகளாக ஒளிபரப்புச் செய்யப்படுகிறது என்கிறார்கள். ‘என்ன, தலை சுற்றுகிறதா?’ இதை வாசிக்கும் போது உங்களுக்குத் தலை சுற்றினாலும், அதுவும் ஒரு கற்பனயே! இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக் கொளும் மாயை. இந்து மதத்தின் மாயைத் தத்துவம் இதற்குள் பொருந்துவது தற்செயலானதோ தெரியவில்லை. அல்லது மாயைத் தத்துவம் என்ற ஒன்று இருக்கிறது என்பதையும் கற்பனைதான் பண்ணுகிறோமோ தெரியவில்லை. இப்படிப் பார்க்கும் போது எல்லாமே சுலபமாகிவிடும். உங்களுக்கு நெருங்கிய ஒருவர் இறந்தாலும், அதுவும் கற்பனையென்று அமைதியாக இருந்துவிடலாம். இறப்பும் பொய், பிறப்பும் பொய் என்றாகிவிடுகிறது. நவீன அறிவியல் நம்மை ஒரு வழிபண்ணிவிட்டுத்தான் ஓயும் போல.

இப்போது நீங்கள், “ஒருவன் கத்தியால் குத்தினால் வலிக்கிறது, ஒரு பெண்ணை/ஆணைப் பார்க்கும் போது பரவசமான உணர்வுகள் தோன்றுகிறது, பசிக்கிறது, நோய் வருகிறது. இந்த உணர்வுகள் எல்லாமே பொய்தானா? நன்றாகத்தான் கதையளக்கிறார்கள் இவர்கள்” என்று நினைப்பீர்கள். ‘காட்சி வேண்டுமானால் மாயையாய் இருக்கலாம். உணர்வுகள் எப்படி மாயையாக இருக்கும்?’ என்று நீங்கள் நினைப்பதில் தப்பு இல்லை. ஆனால், அதற்கும் அறிவியல் தகுந்த காரணத்தைச் சொல்கிறது.

நமக்கு நடைபெறும் சம்பவங்கள் எப்படிக் கற்பனையான ஒரு காட்சியாக இருக்க முடியும் என்பதற்கு அறிவியல் சொல்லும் காரணத்தையும், இரண்டு பரிமாணத்தில் ஒளிபரப்பாகும் காட்சி எப்படி முப்பரிமாண ஹோலோகிராமாகத் தெரிகிறது என்பதையும் அடுத்த பகுதியில் நாம் பார்க்கலாம்.

-ராஜ்சிவா-

திரிஷாவும் திவ்யாவும் (Blackhole Information) – அண்டமும் குவாண்டமும் (5)

திரிஷாவும் திவ்யாவும்


நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவம், பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கு நடந்திருக்கும். அதை அந்தக் கணத்தில் நீங்கள் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். ஆனாலும் அப்போது அது உங்களுக்கு ஒரு ஆச்சரியத்தையும், ஆற்றாமையையும் தந்திருக்கும். ‘என்ன இது? நான் நினைப்பது தப்பா? அல்லது இவர்கள் நினைப்பது தப்பா?’ என்று அந்த ஒரு நொடியில், கேள்வியொன்று உங்களுக்குள் உருவாகி மறைந்திருக்கும். ஆனாலும் அந்தக் கணத்திலேயே அதைப் பெரிதுபடுத்தாமல் மறந்து போய்விடுவீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் மறந்து போவதற்கு அது ஒரு சின்ன விசயமே கிடையாது. நவீன அறிவியலில், அதாவது குவாண்டம் இயற்பியலில் மிகமுக்கிய இடத்தைப் பிடிக்கும் நிகழ்வு அது. ‘நான் இப்போது எதைப் பற்றிப் பேசுகிறேன்’ என்றுதானே யோசிக்கிறீர்கள்? சொல்கிறேன், ஆனால் அதற்குக் கொஞ்சம் அறிவியல் பார்க்க வேண்டும். நீங்கள் தயார்தானே?

 

நீங்கள் உங்கள் நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ ஒரு தமிழ்த் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அந்தப் படத்தில் திரிஷா நடித்துக் கொண்டிருப்பார். படத்தில் திரிஷாவின் காரக்டர் அன்றாடம் நாம் காணும் ஒரு பெண்னின் காரக்டராக இருக்கும். படத்தில் திரிஷவைப் பார்த்தவுடன், ‘அட! நம்ம திவ்யா மாதிரியே அச்சு அசலாகத் திரிஷா இருக்கிறாரே!’ என்று உங்களுக்குத் தோன்றும். ‘திவ்யா’ என்பது உங்கள் உறவுப் பெண்ணாகவோ, நட்பு வட்டாரத்தில் இருக்கும் பெண்ணாகவோ, உங்கள் கனவில் அடிக்கடி வந்து தொந்தரவு செய்யும், நீங்கள் விரும்ப விரும்பும் ஒரு பெண்ணாகவோ இருக்கலாம். திரிஷா, திவ்யா மாதிரி இருப்பது உங்களுக்குப் பெரிய ஆச்சரியத்தைத் தரும். அந்தத் திரைப்படத்தில் திரிஷாவின் அனைத்து முகபாவனைகளும் திவ்யாவையே ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும். அதை மனதுக்குள் வைத்திருக்காமல் அங்கிருப்பவர்களிடம், “திரிஷாவைப் பார்க்க அப்படியே திவ்யா மாதிரி இருக்கு, இல்லையா?” என்று சொல்வீர்கள். அப்போது, உங்களைச் சுற்றியிருக்கும் அனைவரும் உங்களை ஒரு வினோத ஜந்து போலப் பார்ப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொருவிதமான அபிப்பிராயம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் உங்களைத் தவிர, படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் எவருக்கும் திரிஷா, திவ்யா மாதிரியே தெரிய மாட்டார். ஒரு அசப்பில் கூட திவ்யா போலத் தெரியாது. அனைவரும் உங்களை ஏளனம் செய்வார்கள். “போயும் போயும் திவ்யாவைத் திரிஷா போல இருக்கு என்று சொல்கிறாயே!” என்று கலாய்ப்பார்கள். ஆனால் உங்களுக்கு அதற்கு அப்புறமும் திவ்யா மாதிரியே, திரிஷா தோன்றிக் கொண்டிருப்பார். இது உங்களுக்கு ஆச்சரியமாகவும் இருக்கும். ‘திவ்யாவில் இருக்கும் ஏதோ ஒருவித அபிமானம்தான், திரிஷா போலத் திவ்யாவை இவனுக்குக் காட்டுகிறது’ என்று அவர்கள் நினைப்பார்கள். நீங்களோ உங்கள் கணிப்பில் மாற்றமில்லாமல் இருப்பீர்கள். இது போலச் சம்பவங்கள் பலருக்குப் பல சமயங்களில் நடந்திருக்கும். ஒருவரைப் பார்க்கும் போது, வேறு ஒருவரைப் போல இருப்பதாக தோன்றுவது அடிக்கடி நடப்பதுதான். ஆனால் மற்றவர்களிடம் கேட்டால், அப்படி இல்லவேயில்லை என்று மறுப்பார்கள்.

 

இந்தச் சம்பவங்களில் என்ன நடக்கிறது? இங்கு யாரில் தப்பு இருக்கிறது? உங்கள் பார்வையிலா? அல்லது உங்கள் நட்புகள், உறவினர்கள் பார்வையிலா? அல்லது ஒருவரில் இருக்கும் அதீத ஈடுபாட்டின் வெளிப்பாடா? இது பார்வை சார்ந்த விசயமே இல்லாத வேறு ஒன்றா? இங்கு யார் சொல்வது பொய்? யார் சொல்வது உண்மை? நவீன அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா? ‘நீங்கள் சொல்வதும் உண்மை. உங்கள் நண்பர்கள் சொல்வதும் உண்மை’ என்கிறது நவீன அறிவியல். ‘அது எப்படிச் சாத்தியம்’ என்ற கேள்வி இப்போது உங்களுக்குத் தோன்றும். திவ்யா, திரிஷா மாதிரி இருப்பதும், இல்லாமல் இருப்பதும் ஒன்றாகச் சாத்தியமாக முடியாதே! இரண்டுமே உண்மையாக இருக்க எப்படி முடியும்? இந்தக் குழப்பமான இடத்தில்தான், அறிவியல், ஆச்சரியமான கருத்து ஒன்றைச் சொல்கிறது. ‘நீங்கள் பார்த்து, உங்கள் மனதில் பதிந்து வைத்திருக்கும் திரிஷாவின் உருவத்தை, மற்றவர்களின் மனது அப்படியே பதிந்து வைத்திருப்பதில்லை. உங்களுக்குத் திரிஷா எப்படித் தெரிகிறாரோ, அதே தோற்றத்தில் மற்றவர்களுக்கு தெரிய மாட்டார்’. அதாவது ஒரு பொருளோ, ஒரு உருவமோ ஒருவருக்குத் தெரிவது போல, அடுத்தவருக்குத் தெரியாது. திரிஷாவைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும், தனித்தனியாக வெவ்வேறு வடிவத்திலான திரிஷாக்களே தெரிந்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு திரிஷாவுக்கும் நுண்ணிய வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் நாம் ஒரே திரிஷாவைப் பார்ப்பதாகத்தான் நினைத்துக் கொள்கிறோம். நான் பார்க்கும் திரிஷாவைத்தான் நீ பார்க்கிறாய் என்று எங்கும் நம்மால் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. என்ன புரிகிறதா?

 

நவீன இயற்பியலின்படி, குறிப்பாக குவாண்டம் இயற்பியலின்படி, பூமியில் இருக்கும் அனைத்தும் தகவல்களாகவே (Information) அமைக்கப்பட்டிருக்கின்றன. நான், நீங்கள், அந்த நாற்காலி, வீட்டின் அருகே இருக்கும் கோவில் என எல்லாமே, இன்பார்மேசன்களின் மூலம் அடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை என்கிறது அறிவியல். இது நிச்சயம் புரிந்து கொள்ள முடியாத சிக்கல்தான் இல்லையா? ஒரு உதாரணம் மூலம் இதைப் பார்க்கலாம். ஒரு வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வீடு முழுவதுமே செங்கற்களால் கட்டப்பட்டவை என்றும் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டின் வெளியே நின்று அதன் அமைப்பைப் பார்க்கும் போது, அது விதவிதமான வடிவங்களில் நவீனமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதை நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் அவையெல்லாம் பல செங்கற்களின் ஒழுங்கான அமைப்பின் மூலம் உருவானது என்பது தெரியும். ஒவ்வொரு செங்கல்லும் செவ்வக வடிவில் காணப்பட்டாலும், அவற்றை வைத்து அடுக்கிக் கட்டப்பட்ட வீடு, வளைந்து அழகிய வடிவத்தில் காணப்படும். இப்போது, இந்தச் செங்கற்களை ஒழுங்காக அடுக்குவதற்கு எது உதவியது என்று பார்த்தால், அந்த வீடு கட்டுவதற்கென்று ‘வரைவு’ ஒன்று, இதற்கென்றே படித்துப் பட்டம் பெற்ற ஒருவரால் வரையப்பட்டிருக்கும். அந்த வரைவு, கணணி மூலமாக கணித விதிகளின்படி வரையப்பட்டிருக்கும். அந்த வரைவை அடிப்படையாக வைத்தே அந்த வீடு கட்டப்பட்டிருக்கும். இந்த வரைவை எடுத்துக் கொண்டால், அந்தக் கட்டடம் அமைப்பதற்கான சகல தகவல்களையும் (informations) அது கொண்டிருக்கும். அதாவது, அமைக்கப்படும் அந்த வீடும் இந்தத் தகவல்களைக் கொண்டதாகத்தான் இருக்கும். புரிகிறதா?

இது போலத்தான் ஒரு மனிதனும். ‘கலம்’ (Cell) என்று சொல்லப்படும் மிகச் சிறிய ஒன்றினால் உருவாக்கப்பட்டிருக்கிறான். நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும் கலங்களின் கட்டட அமைப்பே மனிதன். மனிதன் இந்த வகையில் அமைக்கப்பட வேண்டும் என்ற தகவல்களை அவனுள் இருக்கும் மரபணுக்கள் (DNA) வைத்திருக்கும். சொல்லப்போனால், DNA யில் இருக்கும் இன்பார்மேசன்களின் வெளிப்பாடுதான் ஒரு மனிதன். இது போலத்தான் அனைத்துமே! அணுவிலிருந்து அண்டம் வரை அனைத்தும் ஒரு வகைத் தகவல்களின் அடிப்படையிலேயே அதனதன் உருவங்களை எடுத்திருக்கின்றன. இப்போது கணணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நாம் பார்க்கும் படங்கள், காணொளிகள், பாடல்கள், பேச்சுக்கள், எழுத்துகள் எல்லாமே 0, 1 என்னும் பைனரி வகைத் தகவல்களாகவே கணணிக்குள் இருக்கின்றன. கணணியில் நீங்கள் பார்க்கும் அழகான ஒரு போட்டோ, இரண்டேயிரண்டு கணித இலக்கங்களால் உருவாக்கப்பட்ட தகவல்கள் என்றால் நம்பவே முடியாமல் இருக்கிறதல்லவா? கணணியை விடுங்கள். தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி, சாட்லைட் என அனைத்துமே மின்காந்த அலைகள் என்று சொல்லப்படும் தகவல்களதான். உங்கள் வீட்டுக்குள் இருக்கும் தொலைக்காட்சியில் தெரியும் கமலஹாசன் நடப்பார், இருப்பார், சிரிப்பார், நடிப்பார் எல்லாமே செய்வார். இவையெல்லாம் மேலே பறந்து கொண்டிருக்கும் சாட்லைட் மூலமாக ஒளிபரப்பப்படும் மின்காந்த அலைகள்தான் (Electromagnetic wave). அந்த அலைகளில் கமலஹாசன் தகவல்களாக மாறி, தானும் ஒரு அலையாக நம் வீட்டின் தொலைக்காட்சியிலும் நடக்கிறார், சிரிக்கிறார், வருகிறார்.

அண்டம் முழுவதும் இருக்கும் திடப்பொருட்கள் அனைத்துமே ஒரு தகவல்களின் கட்டமைப்பின் மூலமே கட்டியமைக்கப்பட்டிருக்கின்றன. தகவல்களின் ஒழுங்கமைப்புத்தான் என்னையும், உங்களையும், நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த ‘உயிர்மை’ இதழையும் வடிவமைத்திருக்கிறது. நவீன அறிவியல் இதைத்தான் தெளிவாகச் சொல்கிறது. இதை மையமாக வைத்துத்தான் காலப் பிரயாணத்தின் (Time Travel) சாத்தியத்தையும் கணித ரீதியாக நவீன அறிவியல் நிறுவவும் செய்கிறது. இப்போதும் புரியவில்லை என்றால், ஒரு சின்ன உதாரணத்தைச் சொல்கிறேன். நீங்கள், உங்கள் காதலிக்கு ஒரு அழகிய கண்ணாடியிலான தாஜ்மஹால் உருவப் பொம்மையைப் பரிசாக வாங்கிச் செல்கிறீர்கள். அதைக் கைகளில் கொடுக்கும் போது, அவள் அடையப் போகும் மகிழ்ச்சியையும் உணர்ச்சியையும் சிந்தித்துக் கொண்டே செல்வதால், எதிரே இருக்கும் விளக்குக் கம்பத்தைக் கவனிக்காமல் அதில் மோதிவிடுகிறீர்கள். கையிலிருந்த தாஜ்மஹால் நிலத்தில் விழுந்து சிதறுகிறது. அதன் கண்ணாடிச் சிதறல்கள் நிலம் முழுவதும் பரவிக் கிடக்கின்றது. ஆனால் உங்களிடம் இறந்தகாலத்துக்குப் பயணம் செல்லக் கூடிய ஒரு கருவி (Time Machine) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிகமெல்லாம் வேண்டாம், சில நிமிடங்கள் மட்டும் இறந்த காலத்திற்குப் பின்னோக்கிச் செல்லும் சக்தி உள்ள கருவி அதுவாக இருந்தால் மட்டுமே போதும். அந்தத் தாஜ்மஹால் பொம்மை சிதறிய அந்தக் கணத்திலிருந்து ஒரு நிமிடம் பின்னாடி பயணம் செல்கிறீர்கள் என்̀று வைத்துக் கொள்ளுங்கள். திரைப்படங்களில் காட்டுவார்களே ‘ஸ்லோ மோஷன்’, அதுபோல மெதுமெதுவாக அந்த ஒரு நிமிடம் பின்னோக்கி நகர்கிறது என்று சிந்தியுங்கள். அப்போது என்ன நடக்கும்? கீழே எங்கெல்லாமோ சிதறி விழுந்து கிடக்கும் தாஜ்மஹாலின் ஒவ்வொரு சின்னத் துண்டுகளும், மெதுமெதுவாகச் சேர்ந்து தாஜ்மஹால் உருவம் பெற்று, உங்கள் கைகளை நோக்கி மேலே நகரத் தொடங்கும். நிச்சயம் இந்தக் காட்சியை உங்களால் கற்பனை பண்ண முடியும். விழுந்துடைந்த அதே வடிவத்தில் மீண்டும் அதே தாஜ்மஹால் எப்படி உருவாக முடியும் என்று பார்த்தால், அவையெல்லாம் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட தகவல்களின் மீளமைப்பு என்பது புரியும். இந்தச் சம்பவத்தில் நடந்த அனைத்தும் சாத்தியம்தான் என்று நவீன குவாண்டம் இயற்பியம் கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்கிறது. அதை முழுமையான இயற்பியல் கணிதச் சமன்பாடுகள் மூலம் சமப்படுத்தி, ‘இது முடியும்’ என்று திடமாகச் சொல்கிறது. இதை எந்த விஞ்ஞானியும் இதுவரை மறுக்கவே இல்லை. ‘என்ட்ராபி’ (Entropy) என்னும் ஒரு விளைவினால் ஏற்படும் தொடர் சிக்கலினால்தான் இது சாத்தியம் இதுவரை முடியாமல் இருக்கிறது. இந்த விளைவு சரிசெய்யப்படும் பட்சத்தில் காலப் பயணம் பற்றிய பல முடிவுகளுக்கு நாம் எப்பொதோ வந்திருக்கலாம். ‘என்ட்ராபி’ என்றால் என்னவென்று நான் இங்கு விளக்க முயற்சித்தால், ‘தர்மோ டைனமிக்ஸ்’ (Thermodynamics) என்றெல்லாம் போக வேண்டியிருக்கும். அது ரொம்ப நீளமாயிருக்கும். அதனால் இந்த ‘என்ட்ராபி’ பற்றித் தனிக் கட்டுரையாகப் பின்னர் எழுதுகிறேன்.

இப்போது தாஜ்மஹால் சிதறிய சம்பவத்துக்கு நாம் மீண்டும் வரலாம். முழுமையாக இருந்த ஒரு தாஜ்மஹால் கண்ணாடிப் பொம்மை, ஏதோ ஒரு தகவலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருந்ததால்தான், அது சிதறி விழுந்த பின், காலத்தினூடாகப் பின்னோக்கிப் பிரயாணம் செய்யும் போது அந்தத் தகவல்கள் மீண்டும் பெறப்பட்டு ஒரு தாஜ்மஹாலாக உருவாகலாம். அதாவது ஒன்றாக இருந்த தகவல்கள் நிலத்தில் விழுந்து எங்கெல்லாமோ சிதறி, மீண்டும் ஒழுங்கான வடிவத்துடன் தாஜ்மஹாலாக மாறுகிறது. இது தகவல்களாக இல்லாமல் இருந்திருக்கும் பட்சத்தில், அவற்றை நம்மால் ஒன்றாகச் சேர்த்திருக்கவே முடியாது. தகவல்கள் அடிப்படையில் சேர்க்கப்படாமல் இருந்திருக்கும் பட்சத்தில், தாஜ்மஹாலின் அடிப்பாகம் மேலேயும், தூண்கள் கிடையாகவும், கோபுர உச்சி சுவரிலுமாகத் தாஜ்மஹால் உருவாகியிருக்கும். சொல்லப் போனால், அது தாஜ்மஹாலாகவே இருக்காது. இந்தச் சம்பவத்தினூடாக அறிவியல் சொல்ல வருவது என்னவென்றால், நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாமே தகவல்கள்தான். நான் நானாக இருப்பதற்கும், திரிஷா திரிஷாவாக இருப்பதற்கும், திவ்யா திவ்யாவாக இருப்பதற்கும் காரணம், நாமெல்லாம் தகவல்களால் வடிவமைக்கப்பட்டிருப்பவர்கள் என்பதுதான். இப்போது நீங்கள் திவ்யாவைப் பார்க்கும் போது, என்ன நடைபெறுகிறது என்பதையும் கொஞ்சம் கவனியுங்கள். திவ்யாவில் பட்டுத் தெறித்து வரும் ஒளியானது உங்கள் கண்களினூடாகச் சென்று விழித்திரையில் விழுந்து, மீண்டும் அது மூளைக்கு அனுப்பப்பட்டுத் திவ்யா உங்களுக்குத் திவ்யாவாகத் தெரிகிறார். இதில் நடப்பது என்ன? திவ்யா என்னும் தகவல் கட்டமைப்பு, ஒளி அலைகளால் வருடப்பட்டு, ஒளி அலைகள் தகவல்களாக நம் கண்களூடாக மூளைக்குச் செல்கிறது. அதுமட்டுமில்லாமல், விழித்திரையில் தலைகீழாக விழும் விம்பம், நியூரான்கள் மூலமாக மின்னலைகள் என்னும் தகவல்களாக மாற்றப்பட்டுத்தான் மூளைக்குள் கொண்டு செல்லப்படுகின்றன. அதாவது, இணையத்தில் நீங்கள் ஒரு திரைப்படத்தை ‘தரவிறக்கம்’ (Download) செய்வது போல, ‘திவ்யா’ என்னும் தகவல்கள் உங்கள் மூளைக்குள் டவுன்லோட் செய்யப்படுகிறது. இப்போது யோசித்துப் பாருங்கள். நீங்கள் காணும் காட்சிகள் அனைத்தும், நமது மூளை என்னும் மிகப்பெரிய கணணிக்கு டவுன்லோட் செய்யப்படும் தகவல்கள்தான் என்பது புரியும்.

ஒவ்வொரு தனிநபரின் மூளையின் கணிப்புத் திறனும், இன்னுமொருவரின் கணிப்புத் திறன் போல இருக்கவே இருக்காது. அவற்றிற்கிடையில் மிகப்பெரிய வித்தியாசங்கள் இருக்கும். ஒருவருக்கு டவுன்லோட் ஆவதைப் போல இன்னுமொருவருக்குத் தகவல்கள் டவுன்லோட் ஆவதே இல்லை. மனிதனின் கண்பார்வையின் திறன், நிறக்குருடு, மூளையின் திறன் என்பன, எப்போதும் மனிதனுக்கு மனிதன் வேறுவேறாகத்தான் இருக்கும். இதனால்தான், உங்களுக்குத் திரிஷா திவ்யாவாகவும் மற்றவர்களுக்கு அப்படி இல்லாமலும் இருக்கிறது. இருவருமே டவுன்லோட் செய்யும் தகவல்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், நமக்கே தெரியாத பல நுண்ணிய வித்தியாசங்கள் அவற்றுள் இருந்து கொண்டே இருக்கும். இதுதான் இந்தப் பிரச்சனைக்கான அடிப்படைக் காரணமாக அமைகிறது. இப்போது யோசித்துப் பாருங்கள். உங்கள் நண்பன் மிகவும் அழகாயிருப்பான். ஆனால் அவன் அழகேயில்லாத ஒரு பெண்னை உருகி உருகிக் காதலிப்பான். இது போல, அழகான பெண்கள், அழகேயில்லாத ஆணை விழுந்து விழுந்து காதலிப்பார்கள். ஆனால் ‘இவனுடைய அழகிற்குப் பார், இவளைப் போய்ப் பிடித்திருக்கிறானே!’ என்று மற்றவர்கள் நினைப்பார்கள். அவனுக்கோ அவள் தேவதையாகத் தெரிவாள். இந்த எஃபக்டுக்கும் காரணம் நான் மேலே சொன்னதுதான். ஒருவருக்கு மிகவும் அழகாகத் தெரியும் ஒருவர், மற்றவருக்கு அழகில்லாமல் தெரிவதன் காரணத்தில் பொத்தாம் பொதுவில் காதலிப்பவர்களைக் குற்றம்சாட்டுவது எவ்வளவு தப்பு என்பது தெரிகிறதா? எல்லாமே தகவல்களின் டவுன்லோட் செய்யும் மாயம்.

 

உண்மையைச் சொல்லப் போனால், மேலே சொல்லப்பட்ட சம்பவங்களை நான் சொல்வதற்குக் காரணமே வேறு. திவ்யாவும், திரிஷாவும் மிகப்பெரிய அறிவியல் சிக்கல் ஒன்றின் அடிப்படையைச் சொல்லப் பயன்படுத்தப்பட்டவர்கள். சமீபத்தில் அறிவியலில் பெரும் விவகாரமாகவும், விவாதமாகவும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு அறிவியல் போரைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். ‘அண்டத்தில் எங்குமே கருந்துளைகள் (Blackholes) இல்லை’ என்று . உலக இயற்பியல் வரலாற்றில் மிகமுக்கியமானவரும், நவீன இயற்பியலில் பெயர் பெற்றவரும், கடந்த பல தசாப்தங்களாக கருந்துளைகளைப் பற்றி ஆராய்ந்து வருபவருமான ‘ஸ்டீவன் ஹாக்கிங்’ (Stephen Hawking) அவர்கள் சொன்ன புரட்சிகரமான கருத்துத்தான், நான் திவ்யாவையும், திரிஷாவையும் இங்கு இழுக்கக் காரணமானது. நாஸா உட்படப் பல ஆராய்ச்சி மையங்களில், பல லட்சக்கணக்கான கருந்துளைகளைக் கண்டுபிடித்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், ஸ்டீபன் ஹாக்கிங்கின் இப்படியானதொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அவர் இப்படி ஒரு முடிவுக்கு வந்ததற்குக் காரணம் ஒரு போர் (War). கத்தியின்றி, இரத்தமின்றி நடைபெறும் அறிவியல் போர் அது. ஒருபுறம் ஸ்டீபன் ஹாக்கிங்கும், மறுபுறம் ‘லெனார்ட் சஸ்கிண்ட்’ (Leonard Susskind) என்னும் இன்னுமொரு அறிவியல் மாமேதைக்கும் இடையில் நடக்கும் போர். சஸ்கிண்ட் என்பவரும் சாதாரணமானவரல்ல. உலகப் புகழ்பெற்ற ஸ்ட்ரிங்க் தியரியின் (String Theory) கட்டமைப்பாளர்களில் ஒருவர். இவர்கள் இருவரும் கருந்துளையில் நடைபெறும் மிகமுக்கிய நிகழ்வு ஒன்றைப் பற்றித்தான் முரண்படுகிறார்கள். அதனாலேயே இந்தப் போரும் நடந்து கொண்டிருக்கிறது.

 

ஸ்டீபன் ஹாக்கிங், ‘கருந்துளைக்குள் சென்று விழும் எந்தப் பொருளானாலும், அதன் மையத்தை நோக்கி இழுக்கப்பட்டு இல்லாமல் போய்விடும்’ என்கிறார். ஆனால் சஸ்கிண்டோ, ‘அண்டத்தில் எதையும் அழிக்க முடியாது. திடப்பொருளாக இருந்தாலென்ன, சக்தியாக இருந்தாலென்ன அவை இன்னுமொன்றாக மாற்றப்பட்டு அண்டத்திலேயே இருக்குமேயொழிய, இல்லாமல் போகாது’ என்கிறார். இதையொட்டி சஸ்கிண்ட் சொன்ன புரட்சிகரமான இன்னுமொரு கருத்துத்தான் நான் இந்தக் கட்டுரையையே எழுதக் காரணமானது. சஸ்கிண்ட் சொல்கிறார், ‘கருந்துளைக்குள் சென்று விழும் பொருட்கள், கருந்துளையின் அதியுயர் வெப்பக் கதிர்களால் சிதைக்கப்பட்டு, அவை தகவல்களாக (Informations), கருந்துளையின் எல்லையாக இருக்கும் ‘நிகழ்வு எல்லையில்’ (Event Horizon) பதிந்திருக்கும்’ என்கிறார். இப்படிப் பார்க்கும் போது சஸ்கிண்ட் சொன்னதை விட, ஹாக்கிங் சொன்னதையே ஏற்றுக் கொள்ள நீங்கள் விரும்புவீர்கள். ஆனால், அதிகமான அறிவியல் விஞ்ஞானிகள் சஸ்கிண்ட் சொன்னதையே ஏற்கின்றனர்.

சஸ்கிண்ட் இத்துடன் நிறுத்திவிடவில்லை. ‘சினிமாப்படத்தை ஒளிபரப்பும் புரஜெக்டர் சாதனம் போல, நிகழ்வு எல்லையானது, தன்னுள் பதிந்து வைத்திருக்கும் தகவல்களை, ஹோலோகிராம் படக் காட்சிகள் போல விண்வெளியில் ஒளிபரப்புகிறது. அது ஒளிபரப்பும் திரைப்படக் காட்சிகள்தான் நானும், நீங்களும், அமெரிக்க ஜனாதிபதியும், பூமியில் இருக்கும் அனைத்துப் பொருட்களும் என்கிறார். பூமியில் நாம் பார்க்கும் எதுவுமே உண்மையில்லை. நாம் அனைவருமே கருந்துளைகள் தெறிக்க விடும் மாயைத் தோற்றங்கள். இந்த ப்ளாக்ஹோல்களின் Even Horizon வெளிவிடும் தகவல்களால் (Informations) வெளிப்படும் தோற்றங்களைத்தான், நாம் நிஜமாக நடப்பதாகக் கற்பனை பண்ணிக் கொண்டு ஏமாறுகிறோம். அதாவது வாழ்வதாக நாம்  நினைப்பதே பொய்’ என்று கிலியைக் கிளப்புகிறார். இதில் அவர் குறிப்பிட்ட ‘தகவல்களை’ (Informations) விளக்குவதற்காகத்தான், திரிஷா இந்தக் கட்டுரையில் வந்தார்.

-ராஜ்சிவா-

உறக்கத்தில் கொல்லும் ஒரு அரக்கன் – ஸ்லீப் அப்னியா (Sleep Apnea)

உயிர்மை மாத இதழில் வெளிவந்த என் கட்டுரை இது. நம்மில் பலருக்கு இந்த நோய் இருந்தும், அது இருக்கிறதென்று தெரியாமலே வாழ்த்து வருகின்றோம். என்னை மையமாக வைத்து, இந்த நோயைப் பற்றி எழுதியிருக்கிறேன். இதில் ‘நான்’ என்பது. நானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது என் நண்பராகவோ அல்லது வேறு ஒரு நபராகவோ கூட இருக்கலாம். இதைப் படித்த பலர் பர்சனலாக யோசித்து, எதிர்வினையாற்றுகிறார்கள். இங்கு யாருக்கு இந்த நோய் இருந்தது என்பதல்லப் பிரச்சனை. நோய் மட்டுமே பிரச்சனை. இனித் தொடர்ந்து படியுங்கள்.

 

-ராஜ்சிவா-

உறக்கத்தில் கொல்லும் ஒரு அரக்கன் – ஸ்லீப் அப்னியா (Sleep Apnea)

     நீங்கள் ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, நித்திரையின் போது குறட்டை விடுபவரா? உங்கள் குறட்டையின் சத்தத்தால் அருகில் படுத்திருப்பவர் தன் தூக்கத்தை இழக்கிறாரா? இதனால் நீங்களும் மனச் சோர்வடைகிறீர்களா? அப்படியெனில் நான் இனிச் சொல்லப் போவதை நீங்கள் மிகவும் கவனமாகப் படிக்க வேண்டும். சரி, நீங்கள் குறட்டை விடுவதில்லையா? பரவாயில்லை. உங்கள் வீட்டில் இருக்கும் உங்கள் அப்பாவோ, அம்மாவோ, சகோதரனோ, சகோதரியோ. துணையோ, நண்பனோ குறட்டை விடுபவரா? அப்படியிருந்தாலும் நீங்கள் இதைப் படிக்க வேண்டும். ‘குறட்டை விடாமல் அமைதியாய் உறங்குவது எப்படி?’ என்றோ, ‘குறட்டையைத் தடுக்கப் பத்து வழிமுறைகள்’ என்றோ உங்களுக்குப் பாடம் சொல்லித்தரப் போவதில்லை நான். ஆனால் அதைவிடப் பெரிய விசயம் ஒன்றைச் சொல்லப் போகிறேன். குறட்டையுடன் சம்மந்தப்பட்ட மிகமுக்கியமான விசயம் ஒன்றைப் பற்றிச் சொல்லப் போகிறேன். அதுவும் தமிழர்களான நம்மில் பலர் அறிந்தேயிராத முக்கிய விசயம் அது.  நவீன மருத்துவத்துடன் சம்மந்தப்பட்ட, அறிவியலின் அருமையான கண்டுபிடிப்பு அது. “அட! என்னதான் அது” என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன்.

 

ஊரில் அல்லது கிராமத்தில் வாழும் உறவினர் ஒருவர் திடீரெனப் பக்கவாத நோயால் (Paralysis) பாதிக்கப்பட்டு, எழுந்திருக்க முடியாமல் படுக்கையில் விழுந்துவிடுவார். அல்லது இரவு படுக்கைக்குச் சென்றவர் காலையில் எழுந்திருக்கவே மாட்டார். படுக்கையிலேயே இறந்திருப்பார். அப்படி இறந்தவரைப் பரிசோதனை செய்த மருத்துவர், ‘அவர் மாரடைப்பால் இறந்திருக்கிறார்’ என்று அறிக்கை தருவார். உறவினர்களிலும், அயலவர்களிலும் அடிக்கடி நடக்கும் சம்பவங்கள் இவை. இந்தச் சம்பவங்கள் சம்பவிப்பதற்கு அதிகபட்சமாகக் காரணமாக இருப்பது ஒன்று. அதுவே மேலே சொல்லப்பட்ட குறட்டை பற்றி விரிவாகப் பார்ப்பதற்குக் காரணமாகவும் இருக்கிறது. அந்த ஒன்றைப் பற்றிதான் நாம் இங்கு விரிவாகப் பார்க்கப் போகிறோம். அதன் பெயர் ‘ஸ்லீப் அப்னியா’ (Sleep Apnea).

     ’ஸ்லீப் அப்னியா’ என்னும் இந்தப் பெயரை நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள். ஆனால் நம்மில் பலருடன் தொடர்புபட்டது இந்தப் பெயர். இந்த ஸ்லீப் அப்னியா, நாம் அறியாமலே நமக்குள் இருந்து, நம்மையே அழிக்கக் காத்திருக்கும் ஒரு நோய். ஸ்லீப் அப்னியா நோய் உள்ளவர்கள் அதைக் கவனிக்காத பட்சத்தில் உறக்கத்திலேயே உயிரை விட்டுவிட அதிகளவு சாத்தியங்கள் உண்டு. இல்லையெனில் பாரதூரமான உடல் பாதிப்புகளுக்கு அது நம்மை இட்டுச் செல்லும். “அவ்வளவு கொடுமையான நோயா இந்த ஸ்லீப் அப்னியா?” என்று நீங்கள் கேட்டால், இதைப் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளினால் ஏற்படும் நோய்களுடனோ, உடல் உறுப்புகளின் பாதிப்புகளால் உருவாகும் நோய்களுடனோ ஒப்பிட முடியாது. உறக்கத்தின் போது, நம் உடலின் செயல்பாடுகளில் நடைபெறும் குளறுபடியால் உருவாகும் ஒருவித வினோத நோய் இது. ஆனாலும் அதிகளவு ஆபத்தானது. இந்த நோய் பற்றி நான் இங்கு சொல்வதற்கு விசேச காரணம் ஒன்றும் உண்டு. இந்த நோய் எனக்கும் வந்தது. ‘அட! என்ன இது? புதுக்கதையாக இருக்கிறதே!’ என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆமாம்! இந்த நோய் எனக்கு வந்ததும் ஒரு கதைதான். இந்த நோய் எனக்கு வந்த கதையையும், இந்த நோயின் கதையையும் சேர்த்து இங்கு நாம் பார்க்கப் போகிறோம். இறுக்கமாக அல்ல, ஜாலியாகவே பார்க்கலாம்.

 

அடிப்படையில் நான் மிகவும் சுறுசுறுப்பானவன். இளைஞனாக இருக்கும் போது, இறுக்கமான உடலமைப்புடன் ஒரு விளையாட்டு வீரனாக விளங்கியவன். ஆனால், கடந்த சில காலமாக நான் மிகவும் சோம்பலாகக் காணப்பட்டேன். நன்றாக நித்திரை செய்து எழுந்தாலும், மீண்டும் நித்திரை செய்ய வேண்டும் என்னும் அளவுக்கு களைப்பாக உணர்ந்தேன். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அப்படியே தூங்க ஆரம்பித்தேன். அதிகம் ஏன், ஆபீஸில் சில சமயங்களில் நின்று கொண்டே தூங்கினேன் என்றால் பாருங்கள். விளைவு…. என் உடலின் எடை மனுஷ்ய புத்திரனும், பிரச்சனையும் போல, நாளொரு மேனியும் பொழுதொரு கிலோவாக வளரத் தொடங்கியது. நிலைமை உணர்ந்து சிறிது கவலையானேன். உடன் வைத்தியரைப் பார்க்க வேண்டுமெனத் தீர்மானித்தேன். என் குடும்ப வைத்தியர் ஒரு ஜேர்மனியர். இளமையானவர். தன் சிரிப்பினாலேயே நோய்களைத் தீர்த்துவிடுவாரோ என்று, நோயாளிகளை நினைக்க வைப்பவர்.

 

எனக்குச் சமீபமாக நடைபெறும் சம்பவங்களை நான் அவருக்கு விவரிக்கலானேன். நான் சொன்னவற்றை மிகவும் அமைதியாகக் கேட்டார். பின்னர் யோசனையுடன் மூக்கின் மேல் விரலைக் கொண்டு சென்று, மூக்கில் மேலாகப் பறந்த ஈயைத் தட்டிவிட்டு, என்னை வெட்டப் போகும் ஆட்டைப் பார்ப்பது போலப் பரிதாபமாகப் பார்த்தார். எனது குடும்ப வைத்தியர் ஒரு பாசக்கார வைத்தியர். ஆனால், அன்று அவரது பார்வையில், தன் வாடிக்கை நோயாளியை நிரந்தரமாக இழக்கப் போகும் வியாபாரியின் ‘லுக்’ இருந்ததை நான் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்ற சங்கடமும் அவரது பார்வையில் தெரிந்தது. சில நொடிகளில் தன்னைச் சுதாரித்துக் கொண்ட வைத்தியர் ஜேர்மன் மொழியில், “மிஸ்டர் சிவா, உங்களுக்கு ‘ஸ்லீப் அப்னியா’ என்னும் நோய் இருப்பதாக நான் சந்தேகப்படுகிறேன்” என்றார். அவர் சொன்னது முழுமையாகப் புரியாத நிலையில், “டாக்டர், எனக்கு ஸ்லீப் தெரியும். அது என்ன அப்னியா?” என்றேன்.

 

ஒன்றும் தெரியாத ஒரு அப்பாவி தன் வலையில் மாட்டிவிட்ட சந்தோசத்தில், ‘ஸ்லீப் அப்னியா’ என்றால் என்னவென்று எனக்கு அரை மணி நேரம் அவர் கொடுத்த விளக்கத்தை, நான் அப்படியே எழுத முடியாது. ஓடிவிடுவீர்கள். எனவே சில வரிகளில் அவர் சொன்னதைச் சுருக்கமாகச் சொல்கிறேன். ‘நாம் நித்திரை கொள்ளும் போது, மூச்சு விடுவதை நம்மையறியாமலே சில செக்கன்களுக்கு நிறுத்தி விடுகிறோம். அதாவது, ஆழ்ந்த நித்திரையின் போது, நமது நாக்குடன் சேர்ந்திருக்கும் தாடைப்பகுதி சற்றுக் கீழே இறங்கி, சுவாசிக்கும் காற்று உடலில் செல்லும் வழியை முழுவதுமாக அடைத்துவிடுகிறது. அதனால், பல நொடிகளுக்கு மூச்செடுக்காமல் இருந்துவிடுகிறோம். இதன் விளைவாக, நமது இரத்தத்தில் உள்ள ஆக்சிசன் வாயுவின் அளவு குறைந்து, மூளையில் மின்னல்கள் போல அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டு, நித்திரை கொண்டாலும் மூளை விழித்துக் கொண்டு, இதயத்தின் செயற்பாடு படிப்படியாக பலவீனமாகி, ஒருநாள் அது நிறுத்தப்பட்டு, மாரடைப்பால் இறந்து விடுவோம், அல்லது மூளையில் ஏற்படும் அதிர்ச்சி அலைகளின் தாக்கத்தால் பக்கவாதத்தில் விழுவோம். அவ்வளவுதான். வெரி சிம்பிள்’.

 

எனக்கு விளக்கம் கொடுத்துவிட்டு, என்னைச் சோகமாகப் பார்த்த வைத்தியரின் பார்வையில், ‘என்ன சைஸில் எனக்கு பெட்டி எடுக்கலாம்’ என்ற சேதி அடங்கியிருந்ததை நான் உடனடியாக அறிந்து கொண்டேன். “இப்ப நான் என்ன செய்ய…..?” என்று ‘தம்பி’ பட மாதவன் ஸ்டைலில் நானும் வைத்தியரைக் கேட்டேன். அதற்கு அவர், “நீங்க ஒன்றும் செய்ய முடியாது மிஸ்டர் சிவா. நான்தான் ஏதாவது செய்ய வேண்டும்” என்று சொல்லிவிட்டு, தொலைபேசியை எடுத்து எண்களை அழுத்த ஆரம்பித்தார். யாருடனோ மிகவும் பொறுப்புடன் அமைதியாகப் பேசிய பின் என்னிடம் சொன்னார், “மிஸ்டர் சிவா, உங்களுக்கு வந்திருப்பது ஒரு சிக்கலான நோய். அதை நாங்கள் சரியான வகையில் அளவிட்டு அறிய வேண்டும். இதற்கென மிகவும் பிரத்தியேகமான பரிசோதனைச் சாலைகளுடன் கூடிய சிறந்த வைத்தியசாலைகள் இருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, ஜேர்மனியிலேயே மூன்றே மூன்று வைத்திசாலைகள்தான் உண்டு. அதிலும் அதிர்ஷ்டவசமாக எனது நண்பன் ஒருவன் அந்த வைத்தியசாலைகளில் ஒன்றில், வைத்தியராகப் பணிபுரிகிறான். அவனுடன்தான் இப்போது போனில் பேசினேன். சாதாரணமாக அந்த வைத்தியசாலைக்கு அனுமதி கிடைப்பதற்கு நீங்கள் மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால் எனது நண்பன் மூலம் உங்களுக்கு எதிர்வரும் பதினைந்தாம் திகதி அட்மிட்டாக இடம் எடுத்து விட்டேன். என்ன, வைத்தியசாலை இங்கிருந்து 200 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது. தூரம்தான் என்றாலும் நீங்கள் அங்கு செல்லத்தான் வேண்டும்”  என்று கட்டளை போலச் சொன்னார். ‘செய் அல்லது செத்து மடி’ என்று மட்டும்தான் அவர் சொல்லவில்லை.

 

“சென்று…..?” என்று ஈனஸ்வரமாக இழுத்தேன்.

“அங்கே ஒரு ‘ஸ்லீப் லாபரட்டரி’ ஒன்று உண்டு. அதில் நீங்கள் நித்திரை கொள்ள வேண்டும்”

“அந்த நித்திரையை நான் இங்கு எங்கும் கொள்ள முடியாதா டாக்டர்” என எதுவும் தெரியாத மாதிரி வைத்தியரைப் பார்த்துக் கேட்டேன்.

 

முட்டாள் ஒருவனை முதல் முறையாகப் பார்ப்பது போல, முகபாவனையை மாற்றிய வைத்தியர் தொடர்ந்து சொன்னார்,

“அந்த வைத்தியசாலையில், நீங்கள் நித்திரை செய்வதைப் பலவிதமான கோணங்களில், பலவிதமான கருவிகள் மூலமாக அளப்பார்கள், வீடியோ மூலமாகப் படம்பிடிப்பார்கள். அந்த அளவீட்டின் மூலம், இந்த நோய் உங்களுக்கு எந்த அளவிற்கு பாதித்து உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்” என்றார். சவப்பெட்டி ஒன்று என் மனதுக்குள் வந்து சட்டெனப் பயமுறுத்தியதால், மறுப்பேதும் சொல்லாமல் உடன் சம்மதித்தேன். மீண்டும் சந்திக்கலாம் என்று (சந்தேகத்துடனேயே) அவர் கைகொடுத்து வழியனுப்பி வைத்தார்.

200 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வைத்தியசாலையை நோக்கி என் பிரயாணம் ஆரம்பமாகியது. நகர்ப்புறங்கள் கழிந்து, படிப்படியாகச் செல்ல வேண்டிய அந்த இடத்தை அண்மிக்க, இயற்கை அழகு நம்மை அரவணைத்து முத்தமிட்டது. அழகான மலைகள் பரந்திருக்கும் பகுதியில், ரம்மியமாக அமைந்த இடங்களினூடாக எனது கார் அந்த வைத்தியசாலையை நோக்கிச் சென்றது. இறுதியில் ஒரு மலையைச் சுற்றிச் சுற்றி மேலே ஏற ஆரம்பித்தேன். மலை உச்சியின் முடிவில், கறுப்பு நிறத்தில் உயர்ந்த கோட்டை ஒன்று காணப்பட்டது. அந்தக் கோட்டையின் வாசலை அடைந்தேன். வைத்தியசாலையே அந்தக் கோட்டைக்குள்தான் அமைந்திருந்தது. மிகவும் கட்டுப்பாடான ஒருவித கிருஸ்தவ அமைப்பினால் அந்த வைத்தியசாலை நடத்தப்பட்டு வருகிறது என்பதை அங்கு சென்றதும்தான் கவனித்தேன். வைத்தியசாலைக்கு அருகிலேயே புராதனமான பெரிய சர்ச்சொன்றும் காணப்பட்டது. கருத்த அங்கி அணிந்து கொண்டு முகத்தையும் மூடியவாறு, முக்காடிட்ட நிலையில் வித்தியாசமான உடை அணிந்தபடி பலர் அங்கும் இங்குமாக நடமாடினர். தவறுதலாக ஹாலிவூட்டில் தயாரிக்கப்படும் பயங்கரப் படப்பிடிப்பின் செட் ஒன்றுக்குள் வந்து விட்டேனோ என்ற சந்தேகம் வந்தது. விசாரித்ததில், அவர்கள் அனைவரும் ஒரு வித்தியாசமான வழியைப் பின்பற்றும் கிருஸ்தவப் பாதிரிமார்கள் என்றும், வைத்தியசாலையுடன் இணைந்து அவர்களுக்குரிய பயிற்சிக் கல்லூரியும் இருக்கிறது என்றும் அறிந்து கொண்டேன். வாழ்க்கையில் முதல் முறையாக் இப்படிப்பட்டவர்களைக் கண்டதாலும், அந்த இடம் இருந்த தனிமையான அமைப்பினாலும், ஏதோ இனம் புரியாத ஒருவகைப் பய உணர்ச்சி என் வயிற்றினூடாகப் பரவியது.


வைத்தியசாலைக்குள் நுழைந்தேன். உள்ளே எனக்குப் பெரிய அதிசயம் காத்திருந்தது. வெளியே பழைய கோட்டை போலத் தெரிந்த கட்டடம், உள்ளே ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் போலக் காட்சியளித்தது. எனது மனம் ஓரளவு நிம்மதியான நிலைக்கு வந்தது. பதிவுகள் செய்யப்பட்ட பின்னர், சகல வசதிகளுடன் கூடிய பெரிய அறையொன்று எனக்குத் தரப்பட்டது. அழைத்துச் சென்ற தாதி உட்பட, மணியடித்தால் ஓடி வந்து சேவை செய்ய,  தாதிகள் கூட்டமே அங்கு காத்திருந்தது. எனக்குரிய ஆரம்ப வைத்திய நடைமுறைகள் அனைத்தும் நடந்து முடிந்தன. எல்லாம் முடிந்ததும் தலைமை வைத்தியர் என் அறைக்குள் வந்தார். நலம் விசாரித்தார். சம்பிரதாயச் சோதனைகளையும், கேள்விகளையும் முடித்து விட்டு, ‘அன்று இரவு, நித்திரை கொள்ளும் சோதனைச் சாலைக்கு நான் செல்ல வேண்டுமெனவும், அங்கு என்னை ஒரு தாதி அழைத்துச் செல்வார் எனவும், நான் எப்போது நித்திரை கொள்ள ஆயத்தமோ, அப்போது அறிவித்தால் என்னை அழைத்துச் செல்வார்கள் எனவும், பரிசோதனைகள் முடிந்ததும் நாளைக்கே நான் மீண்டும் வீட்டிற்குச் திரும்பிவிடலாம்’ எனவும் கூறி, மாலை வணக்கத்துடன் கைகுலுக்கி விடை பெற்றார்.

 

ஏற்கனவே பயணக் களைப்பில் இருந்ததால், அப்போதே நித்திரை கண்களில் நின்று விளையாடியது. கட்டிலில் படுத்துச் சிறிது கண்ணயர்ந்துவிட்டு எழுந்து பார்க்க, நேரம் இரவு ஒன்பது மணியை தாண்டி விட்டிருந்தது. பதறியபடி மணியை அடித்துத் தாதியை அழைத்தேன். மிகவும் அழகான தாதி ஒருவர் வந்து, என்னை நித்திரை சோதனைக்கு அழைத்துச் சென்றார். மாடல் அழகிகள் டி.வியில் மட்டும் வருவதில்லை, தாதி உருவத்திலும் வருவார்கள் போல. விமான நிலையங்களில் இருப்பது போல, ஒளி வெள்ளத்துடன் கூடிய மிக நீண்ட ஹாலில், வெகு தூரம் நடந்து சென்று ஒரு சோதனைச் சாலையை அடைந்தோம். அங்கே இன்னுமொரு மாடலிடம், ச்சே…! தாதியிடம் என்னை ஒப்படைத்துவிட்டு அவர் செல்ல, கவலையுடன் இரவு வணக்கம் சொல்லி அவரிடம் இருந்து விடைபெற்றேன்.

 

அந்தப் புதிய தாதி என்னை அன்புடன் நலம் விசாரித்தார். பெயரை அறிந்து கொண்டார். மங்கிய இருட்டான ஒரு தனியறைக்கு என்னை அழைத்துச் சென்றார். ஜன்னலருகே அமைந்த ஒரு கட்டிலில் என்னைப் படுக்கச் செய்தார். என் உடைகளைக் களைந்துவிட்டு, தலை முதல் கால்வரை அந்தத் தாதி எனக்கு…………..!

 

நீங்கள் நினைப்பது போல எதுவும் இல்லை. அவர் தலைமுதல் கால்வரை, உடல் முழுவதும் பல விதமான வயர்களால் என்னை இணைக்க ஆரம்பித்தார். அப்போதுதான் நிமிர்ந்து அறையைப் பார்த்தேன். சுற்றிவரப் பலவிதமான கருவிகள். சுவரின் நான்கு மூலைகளிலும் நவீன வீடியோக் காமராக்கள். என்னென்னவோ சிவப்பு ஒளிக்கீற்றுகள். மங்கலான இருட்டில் அனைத்தும் மின்னிக் கொண்டிருந்தன. வயர்களை இணைத்து முடிந்ததும் தாதி சொன்னார், “நான் விளக்குகளை அணைத்து விட்டு சென்றதும் நீங்கள் நித்திரை கொள்ளலாம். அடுத்து இருக்கும் அறையிலிருந்து நாங்கள், காமராக்கள் மூலமாகவும், கருவிகள் மூலமாகவும் நீங்கள் நித்திரை செய்வதை அவதானிப்போம். உங்களுக்கு எதுவும் தேவையெனின், இந்த பட்டனை அழுத்தினால், நான் உடன் வருவேன்” என்று சொல்லிவிட்டு. நல்ல இரவுடன் விடைபெற்றார்.

நான் நித்திரைக்கு முயற்சித்தேன். முடியவில்லை. வழக்கமாக படுத்தவுடன் வரும் நித்திரை வரமறுத்தது. ஆயிரம் வயர் சுற்றிய அபூர்வ சிந்தாமணியான நான் எப்படி உறங்குவது? வயர்களை அணைத்தபடி உறங்குவது, இதுதான் முதல்முறை  என்பதால், நித்திரை வரமாட்டேன் என்று அடம்பிடித்தது. அப்படி, இப்படி உடலை அசைத்துத் தூங்க முயற்சி செய்தேன். அப்போது அறைக் கதவு தட்டப்பட்டு, அந்தத் தாதி அறைக்குள் நுழைந்தார். நுழைந்தவர், ‘எனக்கு ஏன் நித்திரை வரவில்லை’ என்பது தனக்குப் புரிகிறது என்றும், அதை யோசிக்காதது தன் தவறுதான் என்றும் சொல்லி, அதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டு, கட்டிலுக்கு அருகே இருந்த ஜன்னலை நன்றாகத் திறந்து விட்டார். திரைச் சீலையையும் விலக்கி விட்டார். அத்துடன் அவர், “இப்போது நல்ல காற்று வரும். இனி நீங்கள் நிம்மதியாகத் தூங்கலாம்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் ‘நல்ல இரவு’ சொல்லி விடைபெற்றாள்.

 

அவள் சென்றதும் படுக்கையில் படுத்தபடி எனக்கருகே ஆவெனத் திறந்திருந்த ஜன்னலூடாக வெளியே பார்க்கத் திரும்பினேன்.

அய்யோ…..! அங்கே நான் கண்ட காட்சி………..!!

பிரகாசமான சந்திர வெளிச்சத்தில், ஆயிரம் சிவப்பு நிறத்திலான மெழுகுவர்த்திகள் காற்றில் சலசலத்தபடி வரிசையாக எரிய, கறுப்பு மனிதர்கள் எழுந்து நிற்பது போல, வரிசையாக அடுக்கப்பட்ட கல்லறைகள் என்னைப் பார்த்துச் சிரித்தன. அதாவது சவ அடக்கம் செய்யும் இடம். நான் இதற்கு முன்னர் சவ அடக்கம் செய்யும் இடத்திற்குச் சென்றிருக்கிறேன். ஆனால் சவ அடக்கம் செய்யும் இடத்தில் படுத்ததில்லை. கடும் இருட்டில் இவ்வளவு சமீபமாக, சாவாதனமாக நான் இதுவரை சவக்காடுகளைப் பார்த்ததுமில்லை. நான் உறங்கும் அறையை ஒட்டியபடியே தாழ்வான மிகச் சிறிய சுவரொன்று பிரிக்க கைக்கெட்டும் தூரத்தில் கல்லறைகள். ‘க்ளோஸ்டர்’ என்று சொல்லப்படும் சர்ச்சிற்குச் சொந்தமான அடக்கம் செய்யும் இடம் அது. அவர்களுக்கு அது ஒரு புனிதமான இடம். ஆனால், எனக்கு…?

என்னில் இணைத்த வயர்களெல்லாம் குடல்களாகி வாய்க்குள் வந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. கண்னை மூடியபடி என்னை நானே தேற்றிக் கொண்டேன். பயம் கொள்வது ஆணுக்கு அழகில்லையல்லவா? மனதை ஒரு நிலைப்படுத்தினேன். நித்திரை கொள்ள முயற்சித்தேன். ஆனால் கண்ணைத் திறந்து அங்கே பார் பார் என்று மனம் கெஞ்சிக் கொண்டே இருந்தது. முக்காடிட்ட அந்த பாதிரிமார்களின் உருவங்களும், கோட்டையும், நான் பாஅர்த்த ‘றாகுலா’ படங்களும் ஞாபகத்தில் வருவதைத் தடுக்க முடியவில்லை. விடுயும் வரை நான் நித்திரை கொண்டேனா? இல்லையா? என எனக்கே தெரியவில்லை.

 

விடிந்ததும் தலைமை வைத்தியர் என்னைச் சந்தித்தார். கம்யூட்டர்களில் தெரிந்த வரைவுகளைப் பார்த்தார். புருவம் மேலும் கீழுமாக ஏறி இறங்கியது. அப்புறம் அவர் சொன்னார், “மிஸ்டர் சிவா, கிடைத்த தரவுகள் ஏனோ ஒழுங்கற்றவையாக இருக்கின்றன. எனக்கே இது சற்றுக் குழப்பமாக இருக்கிறது. சில சமயங்களில் கருவிகளின் ஒழுங்கற்ற தொழில்பாட்டால் இவை நடக்கச் சாத்தியம் உண்டு. அது ஏன் என்று எனக்குத் தற்சமயம் புரியவில்லை? எப்படி இருந்தாலும் இந்த முடிவுகளில் எனக்குத் திருப்தியில்லை. மீண்டும் ஒரு முறை நீங்கள் இங்கே வந்து சோதிக்க வேண்டும்” என்றார். அப்போது நான், “அந்த அறை கல்லறைகளோடு சேர்ந்து இருக்கும் வரை உங்களுக்குச் சரியான ரீடிங்குகள் கிடைக்க வாய்ப்பில்லை டாக்டர்” என்று அவருக்குச் சொல்லவில்லை. என் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

 

அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வைத்தியசாலையை விட்டு வெளியே வர, அந்த இயற்கை அழகு ஏனோ என்னை வசீகரிக்கவில்லை. என் கார் வீடு நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கியது…..!

 

இந்த இடத்தில், ‘இந்தக் கதையில் வரும் பெயர், சம்பவங்கள் யாவும் கற்பனையே! யாரையும் குறிப்பன இல்லை’ என்று நான் போட வேண்டும். ஆனால், இப்போது அது முக்கியமல்ல. நம்மை மிரட்டும் இந்த ஸ்லீப் அப்னியா நோயைப் பற்றிய முழு விபரத்தையும் அறிவதே முக்கியமானது. அதையும் நாம் விளக்கமாகப் பார்த்துவிடலாம்.

 

சாதாரணமாக மனிதன் ஒருவன் சுவாசிக்கும் போது, அவன் வாயின் மூலமாகவும், மூக்கின் மூலமாகவும் காற்றை உள்ளே எடுத்து வெளியே விடுகிறான். இந்த மூச்சுக் காற்று சுவாசப் பையை அடையும். மூக்கு, வாய், தொண்டை ஆகியவற்றினூடாகக் காற்றுச் செல்லும் குழாய் போன்ற அமைப்பை பாரிங்ஸ் (Pharynx) என்றழைப்பார்கள். விழித்திருக்கும் நிலையில், நாம் சுவாசிக்கும் காற்று எந்தத் தடையுமில்லாமல், ஆக்சிசனுடன் சுவாசப் பையை அடைகிறது. ஆனால் நித்திரை கொள்ளும் போது, தொண்டைக் குழாய்ப் பகுதியில் இருக்கும் சவ்வுகள் வளர்திருக்கும் நிலையிலும், உள்நாக்கு என்று சொல்லப்படும் டான்சில்ஸ் (Tonsils) பெரிதாக வளர்ந்த நிலையிலும், இந்தச் சுவாசக் காற்றுச் செல்லும் பாதை குறுகியதாக அடைபட்டிருக்கும். இந்தக் குறுகிய பகுதியினூடாக மூச்சுக் காற்றுச் செல்லும் வேளையில்தான், மனிதன் குறட்டை விடும் செயல்பாடுகள் அதிகமாக காணப்படுகின்றன. சாதாரணமாக ஒரு சுகதேகி நித்திரை செய்யும் போது, நூறு சதவீதம் ஆக்ஸிசன், மூச்சுக் காற்றினூடாக உள்ளே செல்லும். ஆனால், மேலே சொல்லப்பட்ட காரணங்களினால் குறட்டை விடுபவர்களுக்கு அதை விட மிகக்குறைந்த சதவீதத்திலேயே ஆக்ஸிசன் உடலை அடையும். உணவுச் சமிபாட்டுக்கும், உடல் தொழிற்பாட்டுக்கும் இந்த ஆக்ஸிசன் மிகவும் முக்கியமானது. ஆக்ஸிசன் இரத்தத்தில் குறையும் போது, சமிபாடு மந்தமாக நடைபெறுவதால், சமிபாடடையாத உணவுகள் கொழுப்பாகச் சேமிக்கப்பட ஆரம்பிக்கும். இதனால் உடலின் எடை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கும். அத்துடன் உடலில் மிகவும் சோர்வான நிலையில் எப்போதும் காணப்படும். ஸ்லீப் அப்னியாவின் ஆரம்ப நிலையாக இதைக் கருதலாம்.

 

ஆனால், இதைவிடக் கடுமையான ஸ்லீப் அப்னியாவும் உண்டு. இதை Obstructive Sleep Apnea என்பார்கள். சிலர் நித்திரை கொள்ளும் போது, அவர்களின் நாக்கு, வாய் போன்ற உறுப்புகள் சற்றே கீழ் நோக்கி அழுத்தப்படும். அப்போது, இந்தப் பாரிங்ஸ் என்னும் குழாய் முற்றாக நெருக்கப்பட்டு, மூடப்பட்டுவும்.  சிறிதளவேனும் மூச்சுக் காற்று உள்ளே செல்ல முடியாதவாறு அது அடைபட்டுக் கொள்கிறது. இப்படி முற்றாக மூச்சுக் காற்று உள்ளே வராமல் அடைபட்டு இருப்பதால், நாம் சுவாசிப்பதை பல நொடிகளுக்கு நிறுத்திவிடுகிறோம். சுவாசிக்காமல் மனிதன் உயிர் வாழ முடியாது அல்லவா? சுவாசப் பைக்கு ஆக்ஸிசன் வரவில்லை என்றதும், அந்தச் செய்தி மூளைக்கு அனுப்பப்படுகிறது. அப்போது மூளை நம்மை நித்திரையிலிருந்து எழுப்பிவிடுகிறது. ஆனாலும் நாம் உறக்கத்தில் இருப்பதாகவே நினைத்துக் கொள்ளுவோம். இப்படி நித்திரை கொள்ளும் போது, மூச்சுக் காற்றுக்காக நம்மை எழுப்பிவிடும் செயல், பல நூறு தடவைகள் நடைபெறும். நானூறு தடவைகளுக்கு மேலே நடைபெறுவது என்பதெல்லாம் சாதாரணம். ஒரு முழு இரவுத் தூக்கத்தின் போது, நானூறு தடவைகளுக்கு மேல் நாம் தூக்கத்திலிருந்து எழுந்து மீண்டும் தூங்கினால், உண்மையில் அது ஒரு முழுமையான தூக்கமாக இருக்க முடியாது. அதை ஒரு விழிப்பு நிலையென்றே சொல்லலாம். ஆனாலும் தூங்கிக் கொண்டிருப்பதாக நாம் நினைப்பதுதான் வேதனை. இதனால் விடிந்து எழுந்ததும் அந்த நாள் முழுவதும் நித்திரைக் கலக்கத்துடனே இருந்து கொள்வோம். எந்த இடத்திலும் அந்த நேரத்திலும் தூங்க ஆரம்பிப்போம். அமெரிக்காவில் அதிகப்படியான கார் விபத்துகளுக்கு இந்த ஸ்லீப் அப்னியாவும் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. காரில் செல்லும் போது, நித்திரை கொள்வதால்தான் அதிக விபத்துகள் அங்கே நடக்கின்றன.

 

சுவாசம் தடைப்பட்டு ஆக்ஸிசன் சுவாசப் பைக்குச் செல்லாமல் விடும் போது மூளைக்குச் செய்தி போகின்றது என்று பார்த்தோமல்லவா? அந்தக் கணங்களில் மூளையில் சிறிய மின்னல் போன்ற அதிர்ச்சித் தாக்குதல் எப்போதும் தோன்றிக் கொண்டே இருக்கும். இந்த மின்னதிர்ச்சி பல காலம் தொடர்ச்சியாக ஏற்படும் நிலையில், திடீரென ஒருநாள் அது பக்கவாத நோய்க்கு அழைத்துச் சென்று விடுகின்றது. அது போல, ஆக்ஸிசன் குறைந்த இரத்தோட்டத்தின் காரணத்தினால், சீரற்ற இதயத் துடிப்புகளும் ஏற்பட ஆரம்பிக்கிறது. இதுவும் என்றாவது ஒருநாள் மரணத்துக்கு இட்டுச் செல்கிறது. ஒருவர் அதிகமாகக் குறட்டை விடுவதும், அதிகாலையில் எழுந்ததும் தலையிடி போன்ற உணர்வு இருப்பதும், பகல் நேரத்தில் நித்திரை கொள்ள விரும்புவதும், மிகவும் சோர்வாக இருப்பதும், உடல் எடை அதிகரித்துச் செல்வதும், உடன் கோபமடையும் தன்மையுடையவராக இருப்பதும், கவனக் குறைவுகள் ஏற்படுவதும் இந்த நோயின் முக்கிய அடையாளங்களாக கருதப்படுகின்றன.

 

ஸ்லீப் அப்னியாவைக் கவனிக்காமல் விட்டுவிடுவதால், உயர் இரத்த அழுத்த நோய், இதயக் கோளாறுகள், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, ஊட்டம் குறைந்த இரத்தம், பக்கவாதம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் உருவாகலாம். இதன் அதிகபட்ச முடிவாக இறப்பும் ஏற்படலாம். ஆனால், இதைச் சரியாக கவனித்து அதற்குரிய வைத்தியத்தைச் செய்து வருபவர்கள் என்றும் சுகதேகியாக வாழலாம். பொருளாதார வசதிகள் உள்ள நாடுகளான மேற்குலக நாடுகளில், ஸ்லீப் அப்னியா நோய் உள்ளவர்களுக்கென, காற்றை செலுத்துக் கொண்டே இருக்கும் சிறிய பெட்டி போன்ற கருவியைக் கொடுகின்றனர். இந்தக் கருவியை CPAP (Continuous Positive Airway Presure) என்று சொல்வார்கள். இந்தக் கருவியுடன் இணைக்கப்பட்ட ஒரு மாஸ்க்கைப் (Mask) பொருத்தியபடியே ஸ்லீப் அப்னியா நோயுள்ளவர்கள் எப்போதும் உறங்க வேண்டும். தொடர்ச்சியாகக் காற்று அந்தக் கருவிமூலம் கிடைப்பதால், மூச்சுத் தடைப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தக் கருவி ஒரு அடி நீளமும், அரை அடி அகலமும் கொண்ட மிகச் சிறிய கருவியாகும். இதை வீட்டில் வைத்தே பயன்படுத்தலாம். இதன் மூலம் எத்தனையோ இறப்புகளையும், பக்கவாத தாக்குதல்களையும் தடுத்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற வசதியற்ற நம் நாடுகளில் வசிப்பவர்கள், உடனடியாகத் தங்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு வழி செய்தே ஆகவேண்டும். அத்துடன் புகைத்தல், மதுவருந்துதல் பழக்கம் இருந்தால் உடன் நிறுத்திவிட வேண்டும். நித்திரை செய்யும் போது, எப்போதும் பக்கவாட்டிலேயே சரிந்து படுக்க வேண்டும். முடிந்தால், டான்ஸில்ஸ் போன்றவற்ரை ஆபாரேசன் மூலமாக நீக்கி மூச்சுக் காற்று வர வழி வகை செய்யலாம்.

 

இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு நம்மக்களிடையே கொஞ்சமும் இல்லாததால், நான் சொன்னதை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்த நோய் பற்றி இணையத்தின் மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ அறிந்து கொள்ளும் போது நிச்சயம் அதிர்ச்சியே காத்திருக்கும். இந்த நோயைப் பற்றிய அறியாமையினாலும், அலட்சியத்தினாலும் நம் உறவுகளில் பலரை நாம் இழந்திருக்கிறோம் என்பதைக் கூட நாம் அறிந்து கொள்ளவில்லை என்பதுதான் நிஜம். இனியாவது விழித்துக் கொள்வோம்.

-ராஜ்சிவா-

நட்சத்திரம் ஒன்றின் இறப்பு – அண்டமும் குவாண்டமும் (4)

நட்சத்திரம் ஒன்றின் இறப்பு – அண்டமும் குவாண்டமும் (4)

அண்டப் பெருவெளியில் ஒவ்வொரு நொடியும், எங்கோ ஒரு நட்சத்திரம் பிறந்து கொண்டும், இன்னுமொரு நட்சத்திரம் இறந்து கொண்டும் இருக்கின்றன. மனிதர்களின் வாழ்க்கையைப் போலவே ஒரு நட்சத்திரங்களும் பிறந்து, பின்னர் வளர்ந்து, பல காலம் வாழ்ந்து, அதன் பிறகு இறக்கின்றன. இயற்கை நடத்திக் கொண்டிருக்கும் அதிசய நிகழ்வு இது. பிறப்புகளினாலும் இறப்புகளினாலும் தன்னை ஒரு சமநிலைக்கு உட்படுத்தி வைத்துக் கொள்கிறது இயற்கை. ஒரு நட்சத்திரம் இறக்கும் போது, ‘சுப்பர் நோவா’ (Super Nova) என்னும் பிரமாண்ட நிலையை அடைந்து, திடீரென வெடித்து இறக்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் ஒரு தகவல்களாகத் தெரிந்து கொள்வதோடு நின்றுவிடாமல், ‘ஒரு நட்சத்திரம் இறக்கும் போது, அங்கே என்ன நடைபெறுகிறது?’ என்ற கேள்விக்கான பதிலாகத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். அது தெரிந்திருக்கும் பட்சத்தில்தான், அதன் அடுத்த கட்டமாகவுள்ள கருந்துளைகள் பற்றிய முழுமையான அறிவையும் நாம் பெற்றுக் கொள்ள்லாம். கருந்துளைகள் பற்றிய பல விளக்கங்களையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். அதனால், நட்சத்திரம் ஒன்று இறக்கும் போது, அங்கு என்ன நடக்கிறது என்பதை நாம் விளக்கமாகப் பார்க்கலாம்.

ஒரு நட்சத்திரம் முக்கியமாக மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது. 1.நடுவே இருக்கும் ‘கோர்’ (Core) என்று சொல்லப்படும் அதன் மையம், 2.கதிர்வீச்சு மண்டலம் (Radiative Zone), 3.’ஒளிக் கோளம்’ (Photosphere). இது தவிர்ந்து வேறு சில பகுதிகள் இருந்தாலும், இவையே நமக்கு முக்கியமானவை. ‘கோர்’ என்பது ஒரு செர்ரிப் பழத்தினுள் அதன் விதை எப்படி இருக்குமோ, அப்படி நட்சத்திரத்தின் நடுவே அமைந்திருக்கும். ஒரு பழத்திற்கான அடிப்படைச் சத்துக்களையும், சக்திகளையும் ஒரு விதை எப்படி வழங்குமோ, அப்படிக் ‘கோர்’ என்பதும் நட்சத்திரம் எரிவதற்குரிய சக்திகளை வழங்குகிறது. ‘கதிர்வீச்சு மண்டலம்’ என்று சொல்லப்படும் பகுதி, கோரைச் சுற்றிக் காணப்படும் பகுதி. நட்சத்திரத்தின் எரியும் சக்தியால் உருவாகும் கதிர்வீச்சின் ஆற்றல்கள் மெல்நோக்கிக் கடத்தப்படும் இடம் இதுதான். ‘ஒளிக் கோளம்’ என்றழைக்கப்படும் Photosphere என்பது, நட்சத்திரத்தின் வெளியே இருக்கும் மேற்பகுதியாகும். இங்கிருந்துதான் கதிர்வீச்சு சக்தி, ஒளியாகவும், வெப்பக் கதிர்களாகவும் மாறி விண்வெளிக்கு உமிழப்படுகிறது.

நட்சத்திரத்திரம் ஒன்று மிகப் பெரிதாக எரிந்து, வெப்பத்தையும், வெளிச்சத்தையும் வெளிவிடும் செயல்பாட்டில்  நடக்கும் அடிப்படை நிகழ்வு, ஐதரசன் ஹீலியமாக மாறுவதுதான். நட்சத்திரத்தின் கோருக்குள் ஐதரசனின் அணுக்கருக்கள் (Nucleus) ஒன்றாகச் சேர்ந்து நிறைந்திருக்கும். ஐதரசன் அணுக்கருவை எடுத்துக் கொண்டால், அது ஒரேயொரு புரோட்டானை மட்டுமே கொண்டிருக்கும். ஐதரசன் அணுக்கருக்கள் ஒன்றாகத் திரண்டிருக்கும் போது, அங்கே ஒரு நிகழ்வு நடைபெற ஆரம்பிக்கிறது. அந்த நிகழ்வின் பெயர் ‘அணுக்கருப் பிணைப்பு’ (Nuclear Fusion). மனிதனின் வரலாற்றில், அதிக சக்தியைப் பெறுவதற்கு மூலகாரணியாக அணுசக்தி விளங்குகிறது. அணுசக்தி மூலமாகவே அணு உலைகளில் தடையில்லா மின்சாரம் பெறப்படுகின்றது. அணுவின் கருக்களில் இரண்டு விதமான விளைவுகளை ஏற்படுத்துவதன் மூலம் நாம் அளவிட முடியாத சக்தியைப் பெற்றுக் கொள்ளலாம். அந்த விளைவுகளில் ஒன்று ‘அணுக்கருப் பிணைப்பு’ (Nuclear Fusion) மற்றது ‘அணுக்கருப் பிளவு’ (Nuclear Fission). சரியாகக் கவனியுங்கள் ஒன்று ‘Fusion’ மற்றது ‘Fission’. இரண்டு வெவ்வேறு அணுக்கருக்களை ஒன்றாகப் பிணைத்து ஒரே அணுக்கருவாக மாற்றும் செயலையே ‘பியூஸன்’ (Fusion) என்பார்கள். அதே நேரத்தில் ஒரு அணுக்கருவைப் பிளந்து, இரண்டு வெவ்வேறு அணுக்கருக்களாகப்  பிரித்தெடுப்பது ‘பிஸன்’ (Fission) எனப்படும். இரண்டு அணுக்கருக்களை ஒரு அணுக்கருவாகச் சேர்க்கும் போதோ அல்லது ஒரு அணுகருவை இரண்டு அணுக்கருக்களாகப் பிரிக்கும் போதோ அளவிட முடியாத சக்தியும் சேர்ந்து வெளிவிடப்படுகிறது. இதை வாசிக்கும் நீங்கள் தமிழகத் தமிழனாக இருந்தால், அணுவில் நடக்கும் ‘பியூஸன்’, ‘பிஸன்’ ஆகிய இரண்டைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். காரணம், அணுசக்தி என்பது விரும்பியோ, விரும்பாமலோ தமிழகத் தமிழர்களின் வாழ்வுடன் ஒன்றாகக் கலந்துவிட்டது. அணு உலையில் ஏற்படும் கதிர்வீச்சினால் மக்களுக்கு ஆபத்து என்று கூறிக் கூடங்குளத்தில் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது ஆபத்தா? இல்லையா? என்று ஆராய்வதைத் தற்போது சற்றுத் தள்ளி வைத்துவிட்டு, அணுக்கருப் பிளவின் போதும், அணுக்கருப் பிணைப்பின் போதும் என்ன நடக்கிறது என்பதை மட்டும் இப்போது நாம் அறிந்து கொள்ளலாம்.

 

யூரேனியம்238 (Uranium-U238) என்னும் ஒரு தனிமத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் அணுக்கருவுக்குள் 92 புரோட்டான்களும், 146 நியூட்ரான்களும் உண்டு (92+146=238). யூரேனியத்தின் அணுக்கருவுக்குள் இருக்கும் புரோட்டான்களும், நியூட்ரான்களும் ‘திட அணுக்கருவிசை’ (Strong Nuclear Force) என்னும் மிகப் பலமான விசையினால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப் பலமான விசையினால் ஒட்டப்பட்டிருக்கும் புரோட்டான்களையும், நியூட்ரான்களையும், நாம் ஏதோ ஒரு வழியினால் உடைப்போமேயானால், அவை ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிளவுபடும். அப்போது பிரமாண்டமான சக்தி வெளிவிடப்படும். ஆனால் U238 ஐ அப்படி உடைப்பது மிகவும் கடினம். ஆனால் யூரேனியத்தில், ‘யூரேனியம்235′ (U235) என்ற ‘ஐசடோப்’ (Isotop) ஒன்று உண்டு. அதாவது U235 இற்கு 92 புரோட்டான்களும், 143 நியூட்ரான்களும் இருக்கும். 3 நியூட்ரான்கள் இதில் குறைவாகக் காணப்படும். இந்த யூரேனியம்235 இன் அணுக்கரு, யூரேனியம்238 இன் அணுக்கருவைப் போல பலமானது அல்ல. மிகவும் பலஹீனமானது. யூரேனியத்தின் ஐசடோப்பான U235 இன் அணுக்கருவை, மிகை வேகத்துடன் ஒரு நியூட்ரானால் மோதும் போது, அந்த யூரேனியம் அணுக்கரு சிதறடிக்கப்பட்டு, இரண்டாகப் பிளவுபடும். அப்படிப் பிளவுபடும் போது, புதிய தனிமங்களான பேரியமும்(Ba), கிரிப்டோனும்(Kr) உருவாகின்றன. கூடவே மூன்று நியூட்ரான்களுடன் பெரிய அளவில் சக்தியும் வெளிவரும். வெளிவிடப்பட்ட மூன்று நியூட்ரான்கள், மேலும் மூன்று U235 அணுக்கருவில் மோத, மூன்று மடங்கு சக்தியும், ஒன்பது நியூட்ரான்களும் வெளிவரும். இது சங்கிலி போலத் தொடர்ச்சியாக நடைபெற்று, மிகக்குறுகிய நேரத்தில் மிகப் பெரிய சக்தியை வெளிக் கொண்டுவருகிறது. இந்தச் சக்தி வெப்பமாக மாறி, அதன் மூலம் நீர் ஆவியாகி, அந்த நீராவி சக்கரம் ஒன்றைச் சுழற்றுவதால் மின்சாரத்தைப் பெறுகிறோம். இங்கு நடைபெற்ற நிகழ்வு ‘அணுக்கருப் பிளவு’ (Nuclear Fission). ஆனால் நட்சத்திரங்களின் உள்ளே நடைபெறுவது ‘அணுக்கருப் பிணைப்பு’ (Nuclear Fusion).

நட்சத்திரம் ஒன்று பிறக்கும் போது, ஐதரசன் அணுக்கருக்களைக் கொண்டுதான் உருவாகிறது. இந்த ஐதரசன் அணுக்கருக்கள் ஒரு கட்டத்தில் ஒன்றுடன் ஒன்று சேர ஆரம்பிக்கின்றன. ஐதரசனின் அணுக்கருவுக்குள் ஒரேயொரு புரோட்டான் மட்டுமே இருக்கும் என்று சொல்லியிருக்கிறேன். இரண்டு ஐதரசன் அணுக்கருக்கள், அணுக்கருப் பிணைப்பின் மூலம் ஒன்று சேர்வதால், ‘டுட்டேரியம்’ (Duetarium) என்னும் ஐதரசனின் ஐசொடோப் உருவாகின்றது. அதாவது இரண்டு ஐதரசன் அணுக்கருக்களில் இருந்த, இரண்டு புரோட்டான்களும் ஒன்று சேர்ந்து, ஒரு நியூட்ரான் உருவாகி, ஒரு புரோட்டானையும், ஒரு நியூட்ரானையும் கொண்ட ‘டுட்டேரியம்’ என்னும் புதிய ஐசடோப் பிறக்கிறது. இதன் தொடர்ச்சியாக, ‘டுட்டேரியம்’ மேலுமொரு ஐதரசன் அணுக்கருவுடன், அணுக்கருப் பிணைப்பினால் ஒன்று சேர்கிறது. அப்போது, ‘ட்ரிடியம்’ ( Tritium) என்னும் ஐதரசனின் மேலுமொரு புதிய ஐசொடோப் தோன்றுகிறது. இந்த ‘ட்ரிடியம்’ என்பது ஒரு ப்ரோட்டானையும், இரண்டு நியூட்ரான்களையும் கொண்டிருக்கும். தொடர்ச்சியாக ட்ரிடியமும், டுட்டேரியமும் அணுக்கருப்பிணைப்பின் மூலம் ஒன்று சேர, ஐதரசன் இல்லாத வேறு ஒரு புதிய தனிமமான ஹீலியம் (Helium- He) உருவாகிறது. இங்கு ஹீலியம் உருவாகும் போது, ஒரு நியூட்ரான் வெளிவந்து, கூடவே பிரமாண்டமான சக்தியும் வெளிவிடப்படும். இவையெல்லாம் கணநேரத்தில் நடந்துவிடும். இதுவும் ஒரு சங்கிலித் தொடர் நிகழ்வாக (Chain reaction) நடைபெறுவதால், மாபெரும் சக்தி வெளிவந்து கொண்டே இருக்கும். கோர் ஒன்றிற்குள் நடக்கும் இந்தத் தொடர் விளைவினால் ஏற்படும் சக்தியின் மிகைவெப்பத்தில், கதிர் வீச்சு மண்டலத்திற்குள் கதிர்வீச்சுச் சக்தி பெருகி, நட்சத்திரம் வாழ்வதற்கு வழியமைத்துக் கொள்ளும். அங்கு நட்சத்திரத்தின் வெப்ப நிலை 100 பில்லியன் சதம பாகையாக இருக்கும். நட்சத்திரத்தின் கோருக்குள் எந்த அளவுக்கு ஐதரசன் அணுக்கருக்கள் இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு ஒரு நட்சத்திரம் எரிந்து கொண்டேயிருக்கும். சூரியனைப் போல இருபத்தியைந்து மடங்கு பெரிதாக உள்ள நட்சத்திரமொன்றில் ஐரசன் கிட்டத்தட்ட 700 மில்லியன் வருடங்களுக்கு எரியும். எந்த வாழ்வுக்கும் ஒரு முடிவு வந்தே தீர வேண்டுமல்லவா? நட்சத்திரங்களுக்கும் அந்த நிலை வரும்.

 

பல பில்லியன் ஆண்டுகள் தொடர்ச்சியாக எரிந்து கொண்டிருக்கும் நட்சத்திரத்தில் ஐதரசன் அணுக்கருக்கள் தீர்ந்து போக ஆரம்பிக்கும். அப்போது, ஐதரசன் அணுக்கருக்களுக்கு ஏற்பட்ட பியூஸன் தொடர்ந்து ஹீலியம் அணுக்கருக்களுக்குள் ஏற்பட ஆரம்பிக்கும். ஐதரசன், ஹீலியமாக மாறியது போல, ஹீலியம், கார்பனாக மாற ஆரம்பிக்கும், இது போலவே, கார்பன் ஒக்சிசனாகவும், ஒக்சிசன் சிலிக்கானாகவும், இறுதியாக சிலிக்கான் இரும்பாக மாறும். இரும்புதான் பியூஸனின் இறுதி நிலை. இரும்பு எந்த அணுப்பிணைப்புக்கும் ஆளாகாது. அதனால் ஒரு நட்சத்திரத்தின் முழுக் கோரும் இறுதியாக இரும்பு அணுக்கருக்களாக மாறும். இங்கு நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு டன் எடையுள்ள இரும்பு ஒரு மீட்டர் அகலம், ஒரு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் உயரமான கட்டியாக இருக்கலாம். ஆனால், ஒரு டன் எடையுள்ள இரும்பின் அணுக்கருவை மட்டும் ஒன்று சேர்த்தால், அவை ஒரு ஊசியின் முனையளவை விடச் சிறியதாகவே இருக்கும். என்ன நம்ப முடியவில்லையா? நாம் பயன்படுத்தும் இரும்பானது, இரும்பு அணுவால் (Fe) ஆனது. இரும்பு அணுவானது, அணுக்கருவையும், அதைச் சுற்றும் எலெக்ட்ரான்களையும் கொண்டது. எலெக்ட்ரானுடன் சேர்ந்த முழு அணுவையும் , அணுக்கருவையும் ஒப்பிட்டால், ஒரு கிரிக்கெட் மைதானத்தையும், அந்த மைதானத்தின் நடுவே விழுந்து கிடக்கும் கிரிக்கெட் பந்தையும்  ஒப்பிடுவது போல. அவ்வளவு சிறியது அணுக்கரு. ஆனால், இரும்பின் முழு நிறையும் அணுக்கருவினில்தான் இருக்கின்றது. சுற்றியிருக்கும் எலெக்ட்ரான்களுக்கு நிறை கிடையாது. இப்போது இப்படிச் சிந்தித்துப் பாருங்கள். நூறு கிரிக்க்கட் மைதானங்களின் மொத்த எடையும், நூறு கிரிக்கட் பந்துகளின் எடைக்குள் இருக்கின்றன என்றால், அந்தக் கிரிக்கட் பந்துகள் எவ்வளவு எடையாக இருக்க வேண்டும்? நூறு கிரிக்க்கெட் பந்துகளை ஒன்று சேர்த்தால் வரு சின்னப் பந்தில் அந்த நூறு மைதானங்களின் எடையே அடங்கியிருக்கின்றன. இது போலத்தான் நட்சத்திரத்தின் கோர் இரும்பாக மாறியதும் அதன் எடை நினைக்க முடியாத அளவு அதிகரித்துப் போயிருக்கும். இரும்பின் அணுக்கருக்கள் மட்டும் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய கோளக் கட்டியாக மாறினால், அதன் எடை மில்லியன் பில்லியன் பில்லியன் டன்களாக அதிகரித்துக் காணப்படும்.

நட்சத்திரத்தின் கோருக்குள் ஐதரசன் பியூஸன் நடைபெறும் போது, கதிர்வீச்சு மண்டலத்தின் (Radiative Zone) கதிர்வீச்சினால் நட்சத்திரம் உயிர்ப்புடன் இருக்கும். ஐதரசன் தீர்ந்து போகும் போது, கதிர்வீச்சு மண்டலத்தினுள் வெற்றிடம் தோன்ற ஆரம்பிக்கும். இது தொடர்ந்து நடைபெறும் போது, நட்சத்திரத்தின் மேற்பரப்புப் பகுதியான ‘ஒளிக் கோளம்’ (Photosphere) மிகப் பெரிதாக ஊத ஆரம்பிக்கும். இப்படி நட்சத்திரம் ஊதுவதையே சுப்பர் நோவா நிலையென்கிறோம். நட்சத்திரத்தின் மேற்பரப்பு ஒரு பக்கம் பெரிதாகிக் கொண்டிருக்க, நடுப்பகுதியில் வெற்றிடம் தோன்ற, மையக் கோரின் எடை அதிகரிக்கத் தொடங்கும். கோர் முழுமையான இரும்பாக மாறியதும் ஏற்படும் எடையின் அதிகரிப்பால், ஈர்ப்பு விசையும் முடிவில்லாமல் அதிகரிக்கத் தொடங்கும். அதிக ஈர்ப்புவிசை உள்ளிழுக்க அதனால் ஏற்படும் திடீர்ச் சுருக்கத்தின் தூண்டுதல் (Trigger), நட்சத்திரத்தைப் படீரென வெடிக்கப்பண்ணுகிறது. இந்த நடவடிக்கைகளெல்லாம் மிகச் சிறிய காலப்பகுதியில் நடந்து விடுகின்றன. அதாவது ஒரு நொடிக்குக் குறைவான நேரத்தில் நடந்துவிடுகிறது.

 

ஒவ்வொரு நட்சத்திரமும் எவ்வளவு பருமனைக் கொண்டிருக்கின்றனவோ, அதைப் பொறுத்து அந்த நட்சத்திரம் இறக்கும் போது, வெவ்வேறு வகையாக வடிவங்களாக மாறுகின்றன. நட்சத்திரங்களின் பருமன், சூரியனுடன் ஒப்பிட்டே அளக்கப்படுகிறது. சூரியன் நட்சத்திரங்களில் மிகச் சிறியது. சூரியனின் பருமனுடைய ஒரு நட்சத்திரம் இறந்து போகுமானால், அது ‘வெள்ளைக் குள்ளன்’ (White Dwarf) என்னும் நிலையை அடையும். சூரியனை விடப் பல மடங்கு பருமனுள்ள நட்சத்திரங்கள், அவற்றின் பருமனுக்கேற்ப ‘சுப்பர் நோவா’ (Super Nova), ‘ஹைபர் நோவா’ (Hyper Nova) நிலையை அடைந்து, நியூட்ரான் நட்சத்திரங்களையும், கருந்துளைகளையும் உருவாக்கும். சூரியனைப் போல 100 மடங்கு பருமனுள்ள நட்சத்திரத்தின் மையக் கோர், மொத்தமாக இரும்பு அணுக்கருவாக மாறுகின்றது என்பதைக் கற்பனை பண்ணிப் பாருங்கள். அதன் கோர் மட்டுமே எவ்வளவு பெரிதென்று யோசியுங்கள். அவ்வளவு பெரிய கோர் முழுவதும் இரும்பின் அணுக்கருவால் நிரம்பியிருந்தால், அது எவ்வளவு எடையுடன் இருக்கும் என்பது புரிகிறதா? மனிதனால் கற்பனையே பண்ண முடியாத பாரத்துடன் அந்த நட்சத்திரத்தின் கோர் இருக்குமல்லவா? அதனாலேயே ஈர்ப்புவிசையிலும் முடிவற்ற நிலையை அடையத் தொடங்கும். இந்த நிலையில் வெடிக்கும் போது எல்லையற்ற ஈர்ப்புவிசையுடன் கூடிய கருந்துளை உருவாகின்றது. அந்தக் கருந்துளை தன்னுள் அனைத்தையும் உள்வாங்கி விழுங்கிக் கொள்கிறது. அதன் இழுவை விசையில், ஒளி கூட தப்ப முடியாமல் உள்ளே சென்றுவிடுகின்றது.

இதுவரை கண்டுபிடித்ததிலிருந்து, ‘VY Canis Majoris’ என்ற நட்சத்திரமே அண்டத்தில் மிகப் பெரிய நட்சத்திரமாக அறியப்படுகிறது. இது ஒரு ‘சிவப்பு இராட்சச நட்சத்திரம்’ (red hypergiant) ஆகும்.

 

சூரியனைப் போல 1500 மடங்கு பெரியது. இந்த நட்சத்திரம் வெடிக்குமானால், அண்டத்திலேயே பெரிய கருந்துளையொன்று இதன் மூலம் உருவாகும். நட்சத்திரங்கள் பெரிதாக இருந்தால், அவற்றின் வாழும் காலமும் குறைந்து போகும். ஒரு நட்சத்திரம் வெடித்துக் கருந்துளை உருவாவதற்கான விளக்கங்களைப் பார்த்தோம். அப்படிப் பார்க்கும் போது, ‘ஐசடோப்’ என்ற சொல் அடிக்கடி குறுக்கிட்டது. ‘ஐசடோப்புகள் என்றால் என்ன?’ என்று ஒரு கேள்வி உங்களுக்குத் அப்போது தோன்றியிருக்கலாம். அதனால் ஐசோடோப் என்றால் என்ன என்பதையும் நாம் பார்த்துவிடலாம்.

ஐதரசன் வாயுவைப் (H2) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இரண்டு ஐதரசன் அணுக்கள் (2H) ஒன்று சேர்வதால் உருவாவது ஐதரசன் வாயு. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களில் (Elements) அணு எண்ணிலும், அணு நிறையிலும் குறைந்தது ஐதரசன் அணுதான். பூமியில் உள்ள பொருட்கள் எல்லாம் அணுக்களால் ஆனவை என்பதை, நீங்கள் சின்னக் குழந்தையாக இருக்கும் போதே அறிந்து கொண்டிருப்பீர்கள். அணுக்கள், இலத்திரன் (Electron), நியூட்ரான் (Neutron), புரோட்டான் (Proton) ஆகியவற்றால் ஆனவை என்பதும் உங்களுக்குத் தெரியும். புரோட்டானும், நியூட்ரானும் அணுவின் கருவில் இருப்பவை. எலெக்ட்ரான் அந்த அணுக்கருவைச் சுற்றிக் கொண்டிருப்பது. எலெக்ட்ரான் எதிரேற்றமும் (-), புரோட்டான் நேரேற்றமும் (+), நியூட்ரான் ஏற்றம் ஏதும் இல்லாமல் பூச்சியமாகவும் இருக்கும். இதில் எலெக்ட்ரானுக்கு நிறை இல்லை. ஆனால் புரோட்டானுக்கும், நியூட்ரானுக்கு தலா 1 என்னும் நிறை இருக்கிறது. ஒரு அணுவின் கருவில் இருக்கும் புரோட்டான்களின் எண்ணிக்கை அந்த அணுவின் ‘அணு எண்’ (Atomic Number) என்றழைக்கப்படுகிறது. தனிமங்களின் அணு எண்கள் மாறுபடும் போது, அவை வெவ்வேறு தனிமங்கள் ஆகின்றன. அதாவது ஒவ்வொரு தனிமத்துக்குமெனத் தனித்தனியாக ஒரு அணு எண் இருக்கிறது. ‘அணு எண் 1′ என்றால் ஐதரசன் அணு என்றும், ‘அணு எண் 2′ என்றால் ஹீலியம் என்றும் தனிமங்களின் அணு எண்களுக்கேற்ப மாறிக் கொண்டே போகும். இதுவரை 118 தனிமங்களைப் பூமியில் நாம் கண்டுபிடித்திருக்கிறோம். அணு எண்கள் போலவே அணு நிறையும் கணக்கிடப்படுகிறது. ஒரு அணுவின் அணுக்கருவுக்குள் இருக்கும் புரோட்டான்களையும், நியூட்ரான்களையும் ஒன்று சேர்த்தால் வருவது அந்த அணுவின் ‘அணு நிறை’ (Atomic Mass) எனப்படுகிறது. ஒரு தனிமத்துக்கு குறித்த எண்ணிக்கையில் புரோட்டான்கள் இருப்பது போல, குறித்த எண்ணிக்கையில் நியூட்ரான்களும் இருக்கும். அபூர்வமான நிலையில் சில தனிமங்கள், மாறுபட்டு நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கொண்டிருக்கும். உதாரனமாக, ‘லிதியம்’ (Lithium) என்னும் தனிமத்துக்கு 3 புரோட்டான்களும், 4 நியூட்ரான்களும் இருக்கும். அதாவது அதன் ‘அணு நிறை 7′ ஆகும். ஆனால் ‘அணு நிறை 6′ கொண்ட லிதியமும் உண்டு. அதாவது 3 புரோட்டான்களும், 3 நியூட்ரான்களும் அதில் காணப்படும். இந்த இரண்டு வெவ்வேறு அணு நிறைகளைக் கொண்ட லிதியங்களும்  ‘ஐசடோப்புகள்’ (Isotopes) என்று சொல்லப்படுகின்றன. இப்போது, ஐசோடோப்புகள் என்றால் என்னவென்று நிச்சயம் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். சரி, புரியாவிட்டாலும் ஒன்றும் கெட்டுப் போவதில்லை. இங்கு சொல்லப்பட்டவை உங்களுக்குப் புரிந்தால் மிகவும் மகிழ்ச்சியே! ஒரு பேச்சுக்கு இவை புரியவில்லையென்றாலும் எந்தக் கவலையும் தேவையில்லை. இவை தெரியாமலே நாம் தொடரைத் தொடர்ந்து செல்லலாம்.

பிற்குறிப்பு: இது ஒரு தகவலுக்காகத்தான். Fusion க்கும் Fission க்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். ‘ஐதரசன் குண்டு’ (Hydrogen Bomb) பியூஸனினால் உருவாகும் சக்தியை வெளிப்படுத்துகிறது. ‘அணு குண்டு’ (Atom Bomb) பிஸனினால் உருவாகும் சக்தியை வெளிப்படுத்துகிறது. இவையிரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? ஒரே அளவுள்ள ஐதரசன் குண்டு, அணு குண்டை விடஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது. இரண்டம் உலக மஹா யுத்தத்தில் பாவிக்கப்பட்ட மொத்தக் குண்டுகளின் சக்தி, ஒரு ஐதரசன் குண்டின் ஐந்தில் ஒரு பங்குக்கே சமன். ஒரு கிலோகிராம் ஐதரசனை, ஹீலியமாக மாற்றும் போது ஏற்படும் சக்தி, இருபதாயிரம் டன்கள் நிலக்கரி எரிவதால் உருவாகும் சக்திக்குச் சமன். இப்போது பியூஸன் நடைபெறும் நட்சத்திரத்தின் சக்தி புரிகிறதா?

 

(தொடரும்)

 

-ராஜ்சிவா-

நிகழ்வு எல்லை (Event Horizon) – அண்டமும் குவாண்டமும் (3)

நிகழ்வு எல்லை (Event Horizon) – அண்டமும் குவாண்டமும் (3)

 

முற்குறிப்பு: இது கருந்துளையைப் பற்றி மட்டும் ஆராயும் ஒரு கட்டுரை அல்ல. இது ஒரு தொடர். காதல் கதையை, துப்பறியும் கதையை, பயங்கரக் கதையைத் தொடராக எழுதலாம். அது போல, முழுமையான அறிவியலை ஏன் தொடராக எழுதக் கூடாது என்று நான் நினைத்து எழுதும் ஒரு தொடர். அறிவியலை மட்டுமே கையிலெடுத்து இந்தத் தொடரை எழுதுகிறேன். அதிலும் விசேசமாக, நவீன அறிவியலில் மிகவும் சிக்கலானதும், கடுமையானதும் என்று நினைக்கப்படும், குவாண்டம் (Quantum) அறிவியலைப் பற்றியது இந்தத் தொடர். அறிவியலை நேரடியாக எழுதும் போது, கல்லூரியில் பாடம் கற்பது போன்ற வறட்சியான, சலிப்பான உணர்வு தோன்றிவிடும். அதைச் சரியாகக் கவனத்தில் எடுத்து, அலுப்பின்றித் தொடரைக் கொண்டு செல்ல வேண்டும். இது எனக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால். உங்களது ஆர்வதை அதிகரித்து மேலும் மேலும் வாசிக்கத் தூண்டும் வகையில் அறிவியலைத் தந்தால் மட்டுமே இந்தத் தொடரை நீங்கள் தொடர்ந்து வாசிப்பீர்கள். அதனால், ‘அண்டமும் குவாண்டமும்’ என்னும் இந்தத் தொடரை எழுதிச் செல்வது எவ்வளவு சிரமம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இந்தத் தொடர் நவீன அறிவியலின் முக்கியமான அனைத்தையும் தொட்டுச் செல்லும். எனவே, நான் ‘தொடரும்’ என்று போடுவதால் அதையிட்டு சலிப்படைதீர்கள். நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவையெல்லாவற்றையும் ஒன்றிரண்டு அத்தியாயங்களில் சுருக்கமாகச் சொல்லிவிட முடியாது. அப்படிச் சொல்லிவிட்டால், அது ஒரு ஏமாற்று வேலையாகிவிடும். தயவுசெய்து தொடர்ந்து படித்து வாருங்கள். இவையெல்லாவற்றையும் தாண்டி, இந்த விசயங்களைத் தெரிந்து கொண்டீர்களென்றால், புதியதோர் அதிசய உலகத்தின் கதவு உங்களுக்காகத் திறந்து கொள்ளும். நம்பவே முடியாத ஆச்சரியமான தகவல்களும், அவற்றுக்கான காரணங்களும் மெல்ல மெல்லப் புரிய ஆரம்பிக்கும். நவீன அறிவியலின் ஆச்ச்சரிய உலகின் மர்ம முடிச்சுகள் எல்லாம் உங்கள் முன் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கும். எனவே கொஞ்சம் நிதானமாக நான் சொல்லப் போவதைப் படித்து, என்னுடன் கைகோர்த்து வாருங்கள். என்ன, தயார்தானே…?

சூரியனைப் போலப் பல மடங்கு பெரிதாகவுள்ள ஒரு நட்சத்திரம், இறக்கும் நிலை வந்ததும் வெடித்துச் சிதறும். அப்போது அங்கே ஒரு கருந்துளை (Blackhole) பிறக்கிறது. உதாரணமாக, சூரியனைப் போல ஐம்பது மடங்கு பெரிய நட்சத்திரம் ஒன்று பல மில்லியன் வருடங்களாக எரிந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நட்சத்திரத்தின் எரியும் சக்தி படிப்படியாகத் தீர்ந்துகொண்டு வரும். நட்சத்திரத்திரம் எரிவதற்கு அடிப்படைச் சக்தியாக இருப்பது ஐதரசன்(H). நட்சத்திரத்தின் கோருக்குள் (Core) இருக்கும் ஐதரசன், ‘நியூக்ளியர் பியூஸன்’ (Nuclear Fusion) காரணமாக ஹீலியமாக(He) மாறும். இப்படி மாற்றமடையும் போது பிரமாண்டமான சக்தி வெளிவரும். இரண்டு அணுக்கருக்கள் ஒன்றாக இணைந்து, வேறொரு அணுவாக மாறுவதையே ‘நியூக்கிளியர் பியூஸன்’ என்கிறார்கள். தமிழில் ‘அணுக்கருப் பிணைப்பு’ என்று சொல்லலாம். ஐதரசன், ஹீலியமாக மாறும்போது உருவாகும் சக்தியால் ஏற்படும் கதிர்வீச்சையே ஒளியாகவும், வெப்பமாகவும் வெளியே அனுப்புகிறது நட்சத்திரம். ஒரு கட்டத்தில் கோருக்குள் இருக்கும் ஐதரசன் அனைத்தும் ஹீலியமாக மாறும் நிலை வரும். அப்போதும் ‘அணுக்கருப் பிணைப்பு’ தொடர்ந்து நடைபெறுவதால் ஹீலியம், கார்பனாக(C) மாறத் தொடங்கும். ஐதரசன் எப்படி ஹீலியமாக மாறியதோ, அதேபோல ஹீலியமும், கார்பனாக மாற ஆரம்பிக்கும். இப்போதும் அதிகளவு சக்தி வெளிவரும். ஐதரசன், ஹீலியமாக மாறுவதற்கு எட்டு மில்லியன் வருடங்கள் எடுக்கலாம். ஆனால், ஹீலியம் முழுவதும் கார்பனாக மாறுவதற்கு சுமார் அரை மில்லியன் வருடங்களே போதுமானது. இத்துடன் ‘அணுக்கருப் பிணைப்பு’ முடிந்து விடுவதில்லை. தொடர்ந்து கார்பன் நியானாகவும்(Ne), நியான் ஒட்சிசனாகவும்(O), ஒட்சிசன் சிலிக்கானாகவும்(Si), சிலிக்கான் இரும்பாகவும்(Fe) படிப்படியாக மாறுகின்றன. இவற்றுக்கெல்லாம் முன்னரைப் போல அல்லாமல், மிகச்சிறிய கால இடைவெளிகளே போதுமானது. இறுதியாக உள்ள சிலிக்கான் அனைத்தும் இரும்பாக மாறுவதற்கு ஒரேயொரு நாள் மட்டுமே எடுக்கும். இரும்புதான் இறுதியானது. இரும்பு, ‘அணுக்கருப் பிணைப்பு’ மூலமாக எதுவாகவும் மாறாது. அதனால் அந்த நட்சத்திரத்தின் கோரானது, முழுமையான இரும்பாக மாறும் நிலையை அடையும். இங்கு ஒன்றைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். இரும்பு (Iron) என்றால், சாதாரணமாக ‘இரும்பு’ என்று நீங்கள் நினைப்பது அல்ல. இரும்பின் அணுக்கருக்கள்தான் (Iron Nucleus) இங்கு ஒன்றாகச் சேர்ந்து காணப்படுகின்றன. உங்கள் உள்ளங்கையளவேயான சாதாரண இரும்பை நிறுத்துப் பார்த்தீர்களானால், அது ஒரு கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கலாம். ஆனால், அதே உள்ளங்கை அளவில் இரும்பின் அணுக்கருக்களை மட்டும் எடுத்து நிறுத்துப் பார்த்தால், அவை பல ஆயிரம் டன்கள் எடையாக இருக்கும். சாதாரண இரும்புக்கும், இரும்பின் அணுக்கருவுக்கும் ஏன் இவ்வளவு எடை வித்தியாசம் என்பதை விரிவாக, இதன் தொடர்ச்சிக் கட்டுரையில் எழுதியிருக்கிறேன். உள்ளங்கையளவு இரும்பு அணுக்கருக்கள் பல ஆயிரம் டன்கள் எடையாய் இருக்கும் போது, ஒரு நட்சத்திரத்தின் மையப் பகுதியான ‘கோர்’ முழுமையாக இரும்பாக மாறினால் எவ்வளவு எடையிருக்கும் என்பதை நீங்களே கற்பனை பண்ணிப் பாருங்கள். இப்போது புரிகிறதா, ஒரு நட்சத்திரம் இறக்கும் போது ஏன் அதன் மையப்பகுதி அளவில்லாத எடையைக் கொண்டிருக்கிறது என்பது? அந்த அளவில்லா எடை காரணமாகவே, அது முடிவற்ற ஈர்ப்புவிசையையும் பெற்றுக் கொள்கிறது. கோர் முழுவதும் இரும்பாக மாறிய நிலையை ஒரு நட்சத்திரத்தினால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அதிக எடையினால் அப்போது கோருக்குள் ஒரு நிலைகுலைவுத் தண்மை ஏற்படுகிறது. ஒரு நொடிக்கும் குறைவான குறித்த கணத்தில் நட்சத்திரம் படீரென வெடித்துச் சிதறுகிறது. அதனால், அங்கே முடிவில்லாச் சக்தியும், எடையும், ஈர்ப்பு விசையும் கொண்ட கருந்துளையொன்று தோன்றுகிறது.

கருந்துளையின் அளவிடமுடியாத எடையின் காரணமாக, அதன் மையம் ‘புனல்’ போன்ற வடிவத்துடன் கிழ்நோக்கி அமிழ்ந்த நிலையில், விண்வெளியில் (Space) காணப்படும். கருந்துளையின் மையம் மிகச்சிறிய புள்ளியாகவே இருக்கும். அந்தப் புள்ளியை ‘ஒருமை மையம்’ (Singularity) என்பார்கள். இந்த ஒருமை மையத்தின் ஈர்ப்பு விசையானது முடிவிலியாக (Infinity) இருக்கும். இதன் ஈர்ப்பு விசையிலிருந்து எதுவுமே தப்பிவிட முடியாது. எதுவும் என்றால் அண்டத்தில் உள்ள எதுவுமே! தனக்கு அருகே இருக்கும் அனைத்தையும், தன் ஈர்ப்பு விசையால் உள்ளே இழுத்துக் கொள்ளும். ஒளிகூட இதிலிருந்து தப்ப முடியாது. பலருக்கு ‘ஒளியைக் கூடக் கருந்துளையானது உள்ளிழுத்துக் கொள்கிறது’ என்று சொல்லும் போது, அதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. அண்டத்தில் உள்ள அனைத்திலும் அதிவேகமாகச் செல்லக் கூடியது ஒளிதான். இதை நாம் ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம். இந்த உதாரனத்தினால், கருந்துளையின் பல தண்மைகளை நாம் இலகுவில் புரிந்து கொள்ளலாம். இதுவும் நாம் முற்பகுதியில் எடுத்துக் கொண்ட நீர்வீழ்ச்சி உதாரணம்தான். உலகிலேயே மிகவும் வேகமாக நீந்தக் கூடிய இருபது நீச்சல் வீரர்களை ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களில் ஒருவன், உலகில் உள்ள அனைவரையும் விட அதிவேகமாக நீச்சல் செய்யக் கூடியவனாக இருப்பான். இவர்கள் அனைவரையும் மலையுச்சியிலிருந்து நீர்வீழ்ச்சியாகக் கீழே விழப் போகும் காட்டாறு ஒன்றுக்கு அழைத்துச் செல்லலாம். அந்தக் காட்டாறு நினக்கவே முடியாத வேகத்தில் பாய்ந்தபடி ஒடிக்கொண்டிருக்கிறது. சிறிது தூரத்தில் அது நீர்வீழ்ச்சியாகக் கீழே விழுகிறது. இந்த இருபது நீச்சல் வீரர்களையும் அந்த ஆற்றில் தள்ளிவிடுகிறோம். அனைவரும் ஆற்றின் திசைக்கு எதிரான திசையில் தங்களால் முடிந்தவரை நீந்த ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அந்த ஆறு எதையும் இழுக்கும் சக்தி வாய்ந்த அளவுக்கு நீரின் இழுவையைக் கொண்டிருக்கிறது. எல்லாரும் ஆற்றின் திசையில் அடித்துக் கொண்டு செல்லப்படுகிறார்கள். ஆனால், நீர்வீழ்ச்சியின் அருகே சென்றதும் கீழே விழுந்து விடுவோம் என்னும் பயத்தில் அனைவரும் தங்கள் சக்தி அனைத்தையும் பிரயோகித்து எதிர்த் திசையில் வேகமாக நீந்துகின்றனர். நீர் கீழே விழும் இடத்துக்கு மிக அருகே, குறிப்பிட்ட எல்லையில் ஆற்றின் இழுவை மேலும் அதிகமாகிறது. ஒருவனைத் தவிர அனைவரும் அப்படியே நீர்வீழ்ச்சியை நோக்கி இழுக்கப்பட்டு கீழே விழுகிறார்கள். ஆனால் உலகிலேயே அதிவேகமாக நீந்தக் கூடிய நீச்சல் வீரன் மட்டும் தன் பலம் கொண்டவரை எதிர்த்து நீந்துகிறான். தன் இறுதி முடிவு நெருங்கிவிட்டதை அறிந்து, அதிக சக்தியை வரவழைத்து நீந்துகிறான். அப்போது அவன் நீர்வீழ்ச்சி கீழே விழும் இடத்துக்குச் சிறிது முன்னால் இருக்கும் அந்த எல்லையில் இருக்கிறான். அந்த இடத்தில், அவன்  நீந்தும் வேகமும், ஆறு கீழே விழுவதால் ஏற்படும் வேகமும், அதாவது ஆற்றின் இழுவைச் சக்தியும் சமமாக இருக்கிறது. அப்போது என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அந்த நீச்சல் வீரன் கீழே விழாமலும், எதிர்த் திசைக்குச் செல்லாமலும் ஒரே இடத்தில் நின்று நீந்திக் கொண்டே இருப்பான். காரணம் எதிரெதிரான இரண்டு வேகமும் அந்தப் புள்ளியில் சமமாகிறது. அதனால், அதி வேகத்தில் நீந்தும் அந்த உலக நீச்சல் வீரனின் வேகம் அந்தப் புள்ளியில் பூச்சியமாகிவிடுகிறது. ஆற்றின் கரையில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவன் ஒரே இடத்தில் நின்று கொண்டே நீந்துவது போலத் தெரியும். எப்பொழுதும் அப்படியே நீந்திக் கொண்டிருக்க முடியாதல்லவா? அதனால், ஒரு கட்டத்தில் அந்த எல்லைப் புள்ளியைக் கடக்கும் நீச்சல் வீரனால் அதற்குமேல் நீர்வீழ்ச்சியின் எதிர்ப்பைத் தாங்க முடியாமல் கீழே விழுந்துவிடுகிறான். யாரும் தப்ப முடியாத நீர்வீழ்ச்சி அது.

     இப்போது, இந்த நீர்வீழ்ச்சியையும், உலகமகா நீச்சல் வீரனையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நீர்வீழ்ச்சிதான் கருந்துளை. நீரைக் கீழ்நோக்கி இழுப்பது கருந்துளையின் மையமான ஒருமைப்புள்ளி. உலகமகா நீச்சல் வீரன்தான் ஒளி. நீச்சல் வீரனான ஒளிக்கு, மூன்று இலட்சம் கிலோமிட்டர்கள் ஒரு நொடிக்கு நீந்த முடியும். ஆனால் அந்த கீழ்நோக்கி இழுக்கும் நீர்வீழ்ச்சியான கருந்துளையின் ஒருமைப்புள்ளியின் இழுவை வேகமோ அதைவிடப் பல மடங்கு அதிகம். காட்டாறின் வேகம், நீர்வீழ்ச்சியிலிருந்து நீர் கீழே விழுவதற்கு சற்று முன்னே ஒரு குறித்த எல்லையில் அதிகரிக்க ஆரம்பிக்கும் அல்லவா? அந்த இடம்தான் கருந்துளையின் ‘நிகழ்வு எல்லை’ என்று சொல்லப்படும் ‘Event Horizon’. அந்த எல்லையில் உலகமகா நீச்சல் வீரனின் வேகமும் சக்தியும், நீர்வீழ்ச்சியின் வேகத்துக்கும் சக்திக்கும் சமமாக இருந்தது என்று பார்த்தோம். அங்கு நீச்சல் வீரனின் வேகம் அந்தப் புள்ளியைப் பொறுத்தவரை பூச்சியமாகிறது என்றும் பார்த்தோம். இப்போது, நீச்சல் வீரனை ஒளியென்று எடுத்தால், நிகழ்வு எல்லையில் ஒளியின் வேகம் பூச்சியமாகிறது. அதாவது, ‘நிகழ்வு எல்லையில்’ அண்டத்திலேயே அதியுயர் வேகத்தில் செல்லக் கூடிய ஒளியானது பூச்சியமாகி, உறைந்து போய்விடுகிறது. ஒளிதான் அண்டத்தில் காலத்தை நிர்ணயிக்கும் ஒன்றாக இருக்கிறது. அத்துடன் காலம் (Time), வேகம், தூரம் என்னும் அனைத்துமே ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை என்று உங்களுக்குத் தெரியும். வேகமும், தூரமும் பூச்சியமாகும் போது, காலமும் அங்கு பூச்சியமாகிவிடுகிறது. அதாவது கருந்துளையின் ‘நிகழ்வு எல்லை’ என்னும் இடத்தில் காலம் பூச்சியமாகி உறைந்துவிடுகிறது. புரிகிறதா? எதிர் நீச்சல் செய்ய்யும் நீச்சல் வீரனைப் பொறுத்தவரை தான் அதிவேகமாக நீச்சல் செய்வதாகவே நினைத்துக் கொள்வான். அவனைப் பொறுத்தவரை அவன் அதிகளவு வேகத்துடனே நீந்திக் கொண்டிருப்பான். ஆனால் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு, அவன் நீந்தாமல் ஓரிடத்தில் நிற்பது போலவே இருக்கும். இது போலத்தான், கருந்துளையின் நிகழ்வு எல்லையில் காலம் உறைந்து போயிருக்க, அண்டத்தில் உள்ள ஏனைய இடங்களில் காலம் வழமை போலவே நகர்ந்து கொண்டிருக்கும். கருந்துளையின் நிகழ்வு எல்லைப் புள்ளியில் நுழையும் ஒளி, அந்தப் எல்லையைத் தாண்டியதும் ஒருமைப் புள்ளியை நோக்கி இழுக்கப்பட்டுவிடும். ‘கருந்துளையில் ஒளி கூடத் தப்பிவிட முடியாது’ என்று கூறுவது இதனால்தான். அதனுடன் சேர்ந்து கருந்துளையின் நிகழ்வு எல்லையில் காலம் பூச்சியமாகிவிடுகிறது என்பதையும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். இப்போது நான் சொன்னது மட்டும் உங்களுக்குப் புரிந்திருக்குமானால், உலகிலேயே மிகவும் சிக்கலான ஒரு கோட்பாட்டைப் புரிந்தவராகிவிடுவீர்கள். இதைப் புரியவைக்கப் பலர் தலையால் மண்கிண்டுகிறார்கள். நான் கூடச் சரியான முறையில் புரிய வைத்தேனோ தெரியவில்லை. ஆனாலும் புரியும் என்று நம்புகிறேன்.

‘கருந்துளையில் காலம் உறைகிறது என்பதை நாம் சரியாகப் புரிந்து கொள்வோமானால், ‘பிக்பாங்’ பெருவெடிப்பின் போது ‘காலம்’ (Time) எப்படி உருவாகியது என்பதையும் நம்மால் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்’ என்கிறார் பிரபல இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங். கருந்துளைகளுக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்குக்கும் நிறையவே சம்மந்தம் உண்டு. ஸ்டீபன் ஹாக்கிங் தன் வாழ்க்கையில் பெரும்பாண்மையான காலத்தை, கருந்துளைகளைப் பற்றி ஆராய்வதிலேயே செலவிட்டார். கருந்துளை பற்றி இவர் வெளியிட்ட கணிதச் சமன்பாடு ஒன்று இயற்பியல் வரலாற்றில் மைல்கல்லாக அமைந்தது. தன் இளம் வயது முதல் சக்கர நாற்காலியிலேயே கழித்து வரும் ஹாக்கிங்கை நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றே கொள்ளலாம். கருந்துளை பற்றிப் பல கருத்துகளை வெளியிட்டவர் ஸ்டீபன் ஹாக்கிங். இதுவரை அவர் வெளியிட்ட கருந்துளை பற்றிய கருத்துகள், ஏனைய விஞ்ஞானிகளுக்குப் பல முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உதவியாக இருந்தது. கருந்துளை பற்றித் தெரிந்து வைத்திருக்கும் போது, ஸ்டீபன் ஹாக்கிங் பற்றியும் சுருக்கமாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

     இயற்பியலிலும், கணிதவியலிலும் சிறந்தவரான ஹாக்கிங், நம்மைப் போலச் சாதாரண மனிதனாகத் தற்போது இல்லை. ’Neuro Muscular dystrophy’ (Amyotrophic Lateral Sclerosis – ALS) என்னும் உடலியல் பக்கவாத நோயினால் உடலுறுப்புகள் படிப்படியாகச் செயலிழக்கப்பட்டு, இன்று சக்கர நாற்காலியில் அசையவே முடியாத நிலையில் இருக்கிறார். இவரால் அசைக்கக் கூடிய அங்கங்கள் கண்ணும், புருவமும் மட்டுமே. ஆனாலும் அவர் சிந்திப்பது மட்டும் வற்றிப் போகவில்லை. அது மேலும் விரிவடைந்து கொண்டே செல்கிறது. இப்போதும் அவர் பல ஆராய்ச்சிகளைக் கண்டுபிடித்து, வெளியிட்டுக் கொண்டேதான் இருக்கிறார். அவர் சிந்திப்பதையும், கண்டுபிடிப்பதையும் நம்முடன் பகிர்ந்து கொள்வதற்கெனப் பிரத்தியேகமாக ஒரு கணணி உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர் சொல்ல வருவதை கண் மற்றும் புருவத்தின் அசைவுகளால் கணணி மூலமாக, ஒலியாக வெளிக் கொண்டு வருகிறார்கள்.

     ஹாக்கிங்கின் புத்திசாலித்தனம் எவ்வளவு அதிசயமோ, அதுபோல அவர் நம்முடன் கண்மூலம் பேசுவதும் அதிசயம்தான். ஹாக்கிங், விண்வெளியியல் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப்பெரியது. இதில் கருந்துளை பற்றிய ஆய்வு முக்கியமானது. இவர் எழுதிய ‘A Brief History of Time’ என்ற நூல் மிகவும் பிரபலமானது. பிரபஞ்சம் உருவானதற்குக் காரணமான ‘பிக் பாங்’ (Big Bang) குறித்த கருத்தையும், மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தையும் இந்த நூலில் அவர் எளிமையாக விளக்கியுள்ளார். இங்கிலாந்தின் ‘சன்டே டைம்ஸ்’ இதழின் சிறந்த புத்தக வரிசையில் தொடர்ந்து 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது இந்தப் புத்தகம். கருந்துளை பற்றிய பல விபரங்கள் இந்த நூலில் இருக்கின்றன. இந்த நூல் போலவே இவர் எழுதிய ‘The Grand Design’ என்ற இன்னுமொரு நூலும் மிகப் பிரபலமானது. இதில் அவர் புரட்சிகரமான கருத்தொன்றைச் சொல்லியிருந்தார். ”இந்த அண்டத்தை யாரும் வந்து உருவாக்க வேண்டிய அவசியமே இல்லை. அதுவாகவே தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்த அண்டம் முற்றிலும் இயற்பியல் சார்ந்ததே” என்று அந்த நூலின் மூலம் சொல்கிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது உங்களுக்குப் புரியும் என்றே நினைக்கிறேன்.

     இனி நாம் மீண்டும் நிகழ்வு எல்லைக்கு வரலாம். ஹாக்கிங்கிற்கும், சஸ்கிண்டுக்கும் இடையில் ஒரு அறிவியல் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது என்று முதல் பகுதிகளில் கூறியிருந்தேன். நாற்பது வருடங்களுக்கு முன்னர் கருந்துளை பற்றி ஹாக்கிங் சொன்ன கருத்து ஒன்றின் தொடர்ச்சியாகத்தான் அந்த யுத்தம் ஆரம்பமாகியது. கருந்துளைகளில் வந்து விழும் அனைத்தும் அதன் மையம் நோக்கி நகர்த்தப்பட்டுவிடும் என்று ஹாக்கிங் சொல்லியிருந்தார். கருந்துளையின் மையம் என்பது ஒருமைப் புள்ளி. அந்த ஒருமைப் புள்ளியுடன் அனைத்தும் சேர்ந்து, அவை அப்படியே இல்லாமல் போய்விடும் என்றார். சமயத்தில் கருந்துளைகளும் இல்லாமல் மறைந்து போய்விடும் என்றும் சொல்லியிருந்தார். இப்படி ஹாக்கிங் சொல்லியிருந்த கருத்தே, சஸ்கிண்ட் அவரை எதிர்ப்பதற்கான யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது. உதாரணமாக, நாம் வாழும் பூமி கருந்துளையின் உள்ளே சென்றுவிடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். பூமியென்று சொன்னால், பூமியில் உள்ள கட்டடங்கள், மனிதர்கள், மிருகங்கள், மலைகள், ஆறுகள், ராஜ்சிவா, இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள், கணணி என அனைத்துமே கருந்துளைக்குள் சென்றுவிட்டால், அது அப்படியே ஒருமை மையத்தில் மறைந்துவிடும் என்றார் ஹாக்கிங். ஆனால், சஸ்கிண்ட் இதை எதிர்த்தார். “அண்டத்தில் உள்ள அனைத்துமே ஒரு கட்டமைப்பின் மூலம் உருவானவை. பூமியை எடுத்தால், மேலே நான் சொன்னவை அனைத்தும் ஒருவித கட்டமைப்புகளுடன் உருவானவை. அந்தக் கட்டமைப்பில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அந்தக் கட்டமைப்பும், ஒழுங்கும் தகவல்களைக் (Informations) கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. அண்டத்தில் எந்தத் தகவல்களையும் இல்லாமல் அழிக்க முடியாது. ஒரு தகவலை இன்னுமொரு தகவலாக மாற்ற முடியுமேயொழிய அவற்றை அழிக்க முடியாது. ஆகவே ஹாக்கிங் சொன்னது போல, கருந்துளைக்குள் செல்லும் தகவல்களும் அழிய முடியாது. அண்டம் ஒரு சமநிலையிலேயே இயங்குகிறது. சமநிலையில் இயங்கும் அண்டத்தில், குவாண்ட இயற்பியலின்படி எந்தத் தகவல்களும் அழிந்து போகாது. இல்லாமல் போவதாக நாம் நினைக்கும் எல்லாத் தகவல்களையும் நவீன இயற்பியலால் மீளப் பெறமுடியும். எனவே ஹாக்கிங் சொன்னது மாபெரும் அறிவியல் தவறு” என்றார் சஸ்கிண்ட்.

சஸ்கிண்ட் கூறியதை உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொண்டார்கள். அதிகம் ஏன், ஹாக்கிங் கூட ஏற்றுக் கொண்டார். சஸ்கிண்டின் எதிர்ப்பை கணக்கிலெடுத்து, தனது தவறைத் திருத்தும் வகையில் வேறு ஒரு கருத்தையும் ஹாக்கிங் முன்வைத்தார். ஆனால் அதில் அவர் முழுமையாகத் திருப்தியடையவில்லை. அதனால், மீண்டும் ஒரு புதுக் கருத்தைச் சமீபத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் ஹாக்கிங்கின் கருத்துகள் பலரை ஏமாற்றமடைய வைத்தது.

 

“அட! இது என்ன? தகவல் அது, இது என்கிறீர்கள். ஒன்றுமே புரியவில்லை. என்ன நடந்தது என்று விளக்கமாகக் கூறுங்கள்” என்றுதானே நினைக்கிறீர்கள். அடுத்த பகுதியில் நிச்சயம் சொல்கிறேன்.

(தொடரும்)

-ராஜ்சிவா-

விண்வெளியில் கருந்துளை – அண்டமும் குவாண்டமும் (பகுதி 2)

விண்வெளியில் கருந்துளை – அண்டமும் குவாண்டமும் (பகுதி 2)


பூமியில் இருந்துகொண்டு, தலையை உயர்த்தி மேல் நோக்கி நாம் பார்க்கும் போது, இரண்டு விதமான வானங்களைப் பார்க்கின்றோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பகலில் நாம் காணும் நீல வானமும், இரவில் நாம் காணும் கருப்பு வானமும் வேறு வேறானவை என்ற உண்மையை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? பலர் இந்த வித்தியாசத்தைத் தங்கள் வாழ்நாளில் புரிந்து கொண்டதே இல்லை. தலைக்கு மேலிருக்கும் வானம்தானே என்று, அது பற்றிக் கொஞ்சமும் சிந்திக்காமல் அலட்சியமாக விட்டுவிடுகிறோம் நாம். உண்மையைச் சொல்லப் போனால், இரவு வானத்துக்கும், பகல் வானத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் மண்ணுக்கும், மலைக்கும் இடையே உள்ள வித்தியாசம். ஆங்கிலத்திலும், தமிழிலும் ‘Sky’ மற்றும் ‘வானம்’ ஆகிய சொற்களை இரவு, பகல் இரண்டு வானங்களையும் குறிப்பதற்கு, ஒரே சொல்லாகப் பயன்படுத்துகிறோம். ஆனாலும், நாம் பகலில் பார்க்கும் வானம் பூமியிலிருந்து வெறும் 300 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கிறது. இரவு வானமோ பல லட்சம் ஒளிவருடங்கள் தூரம் வரை செல்கிறது. நம் பூமி, தனக்கென உருவாக்கி வைத்திருக்கும் பாதுகாப்புக் கவசமான அட்மாஸ்பியரில் (Atmosphere), சூரிய ஒளி தெறித்துச் சிதறும் பரப்பையே நாம் ‘வானம்’ (Sky) என்கிறோம். அந்த நீலநிற வானத்தினூடாக மேலே நம்மால் சூரியனையும், சந்திரனையும், சில கோள்களையும் தவிர வேறு எதையும் பார்க்க முடிவதில்லை. இதெல்லாம் சூரிய ஒளி இருக்கும் வரைதான். சூரிய ஒளி மறைந்து இருட்டானதும் நாம் பார்ப்பது விண்வெளியை (Space). விண்வெளியில் பல ஆயிரம் ஒளிவருடங்களுக்கு அப்பால் உள்ளவற்றைக் கூட, நம் வெற்றுக் கண்களால் பார்க்க முடிகிறது.

நம் கண்களுக்குத் தெரியும் விண்வெளி, முழுமையான அண்டத்தின் (Universe) மிகச் சிறிய ஒரு பகுதிதான். அண்டமென்பது மிகப்பெரியது. கிட்டத்தட்ட 92 பில்லியன் ஒளிவருடங்கள் பரந்து விரிந்திருப்பது. இன்னும் விரிந்து கொண்டே இருப்பது. இங்கு ஒளிவருடம் என்றால் என்ன என்ற கேள்வி சிலருக்கு வரலாம். ஒளியானது ஒரு செக்கனில் 300000 கிலோமீட்டர்கள் தூரத்துக்கு பயணம் செல்லக் கூடியது. அவ்வளவு வேகம். அண்டத்திலேயே மிகை வேகத்துடன் செல்லக் கூடிய ஒன்று ஒளிதான். இதுவரை உள்ள அறிவியலின்படி, ஒளியை மிஞ்சி எதுவுமே வேகமாகச் செல்ல முடியாது. சரியாகக் கவனியுங்கள் இந்த ஒளியானது ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் செல்லும். அப்படியாயின் இது நிமிடத்துக்கு எவ்வளவு தூரம் செல்லும், மணிக்கு எவ்வளவு தூரம் செல்லும், அப்படியே ஒரு வருடத்துக்கு எவ்வளவு தூரம் செல்லும் என்று பார்க்கும் போது கிடைக்கும் கிலோ மீட்டர்களின் அளவுதான் ஒரு ஒளிவருடம். நீங்களே ஒரு பேனாவை எடுத்துப் பெருக்கிப் பாருங்கள். அப்படி 92 பில்லியன்கள் ஒளிவருடங்கள் தூரத்துக்கு அகண்டிருக்கிறது நம் பேரண்டம். கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவு இது. நாம் வாழும் பூமியோ வெறும் 12750 கிலோமீட்டர்கள் அகலமானது. அண்டத்துடன் ஒப்பிடும் போது பூமி ஒன்றுமேயில்லை. உங்கள் வலதுகையை நீட்டி, சுட்டுவிரலால் வானை நோக்கி சுட்டிக்காட்டுங்கள். உங்கள் விரல் சுட்டிக்காட்டும் அந்தச் சின்னஞ் சிறிய பகுதியில் மட்டும் பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அண்டம் எவ்வளவு பெரிது என்பது இப்போது புரிகிறதல்லவா? இந்த அண்டத்தில் பூமியைப் போன்ற கோள்கள், சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் மட்டுமில்லாமல், வேறு பலவும் இருக்கின்றன. காலக்ஸிகள் (Galaxies), நெபுலாக்கள் (Nebulas), க்வேஸார்கள் (Quasars), பல்சார்கள் (Pulsars) என்று பல விதமானவை இருக்கின்றன. இதில் ஒன்றுதான் கருந்துளைகள் (Blackholes). இந்தக் கருந்துளைகள் பற்றித்தான் நாம் கடந்த பதிவில் பார்க்க ஆரம்பித்தோம். கருந்துளை என்பது பற்றிச் சொன்ன போது, ‘நிகழ்வு எல்லை’ (Event Horizon) என்ற கருந்துளையின் நுழைவாயிலைப் பற்றியும் சொல்லியிருந்தேன். இதை வைத்து ஸ்டீபன் ஹாக்கிங்கும், லெனார்ட் சஸ்கிண்டும் நடத்தும் யுத்தம் பற்றியும் சொன்னேன். இனி இவற்றைப் பற்றி விரிவாக, விளக்கமாக நாம் பார்க்கலாம்.

 

விண்வெளி என்பது நாம் நினைப்பது போல, முப்பரிமாண வடிவத்தில் உள்ளதல்ல. தட்டையானது. அலையில்லாத ஒரு கடலில் நீரின் மேற்பரப்பு எப்படிப் பரந்து விரிந்து காணப்படுகிறதோ, அப்படித்தான் விண்வெளியும் இருக்கும். கடலின் மேற்பரப்பு நீரால் ஆனது போல, விண்வெளியும் மெல்லிய சவ்வு போல, அதாவது ஒரு பலூனின் மென்சவ்வு போலக் காணப்படும். இந்த விண்வெளியின் மேற்பரப்பில்தான், நான் மேலே சொன்ன நட்சத்திரங்கள். காலக்ஸிகள், நெபுலாக்கள், க்வேஸார்கள், கருந்துளைகள் என அனைத்தும் இருக்கின்றன. நீரின் மேற்பரப்பில் பூக்களைத் தூவிவிட்டால் எப்படி அந்த மேற்பரப்பில் பூக்கள் மிதந்து கொண்டிருக்குமோ, அப்படி இவையெல்லாம் விண்வெளியில் காணப்படுகின்றன. விண்வெளியில் காணப்படும் இவை சாதாரணமானவை அல்ல. மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய எடையைக் கொண்டவை. அவற்றின் எடைக்கு ஏற்ப, விண்வெளியின் மேற்பரப்பும் கீழ் நோக்கி அமிழ்ந்திருக்கும். ஒரு பலூனை விரல்களால் அழுத்தும் போது ஏற்படும் வட்டவடிவப் பள்ளம் போல அவை அமிழ்ந்திருக்கும். இப்படித்தான் கருந்துளையும் விண்வெளியில் அமைந்திருக்கிறது. கருந்துளையானது ‘நிகழ்வு எல்லை’ (Event Horizon), ‘ஒருமை’ (Singularity) என்று இரண்டு மிக முக்கிய பகுதிகளைக் கொண்டது. நிகழ்வு எல்லையை மேல்பகுதியிலும் சிங்குலாரிட்டி என்று சொல்லப்படும் மிகச்சிறிய மையப்பகுதியைக் கீழ்ப்பகுதியாகவும் கொண்டு, ஒரு கூம்பு (Cone) வடிவத்தில் விண்வெளியின் மேற்பரப்பை கீழ்நோக்கி அமிழ்த்தியவாறு கருந்துளை காணப்படும். கருந்துளைக்கு இந்தக் கூம்பு வடிவம் எப்படி வந்தது என்று விளக்குவது கொஞ்சம் சிரமம் என்றாலும், அதையும் நாம் பார்த்துவிட வேண்டும். அதற்கு கருந்துளையாகும் ஒரு நட்சத்திரத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.


விண்வெளியில் நெபுலாக்கள் (Nebula) வாயுக்களையும் (Gas), தூசுகளையும் (Dust) அடர்த்தியாகக் கொண்டிருக்கும். இது ஒரு காலக்ஸியின் அளவுக்கு பிரமாண்டமானதாகக் காணப்படும். இந்த வாயுக்களும், தூசுகளும் ஈர்ப்பு விசையினால் ஒன்று சேர்வதால், அங்கு ஒரு குழந்தை நட்சத்திரம் பிறக்கும். குழந்தை நட்சத்திரங்களை சினிமாக்களில் மட்டும் பார்த்த உங்களுக்கு, இதைக் கேட்க கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கும். இந்தக் குழந்தை நட்சத்திரம் படிப்படியாக வளர்ந்து ஒரு முழு நட்சத்திரமாகிறது. இப்படி லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் நெபுலாக்களின் மூலம் தினம் தினம் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு நொடியும் விண்வெளியில் நட்சத்திரங்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன. இயற்கை என்பது எப்போதும் தனக்குள் ஒரு வட்டத்தை வைத்திருக்கிறது. இந்த வட்டத்தின் மூலம்தான் அது தன் சமநிலையையும் பாதுகாத்துக் கொண்டுவருகிறது. ஒருபுறம் நட்சத்திரங்கள் பிறந்து கொண்டிருக்க, மறுபுறம் நட்சத்திரங்கள் வயதாகி இறந்து கொண்டிருப்பது நடக்கும். பிறப்பதும் இறப்பதும் மனிதனுக்கு மட்டுமில்லை, நட்சத்திரங்களுக்கும் இருக்கிறது. அது மட்டுமில்லாமல், ஒரு நட்சத்திரம் இறக்கும் போது, ஏற்படும் பிரமாண்ட வெடிப்பின் மூலம் நெபுலாக்களும் உருவாகின்றன. நட்சத்திரங்கள் நெபுலாக்களில் பிறக்கின்றன. நட்சத்திரங்கள் இறந்து நெபுலாக்களை உருவாக்குகின்றன. இது ஒரு அழகான வட்டம் இலையா? நட்சத்திரங்கள் நெபுலாக்களில் பிறப்பது என்பது ஒரு அழகான நிகழ்வு. அதைத் தெரிந்து கொள்ளும் போது உண்மையில் மகிழ்ச்சியடைவீர்கள். ஆனால் இந்தக் கட்டுரையில் அது பற்றி நான் எழுதப் போவதில்லை. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். ஆனால் நட்சத்திரம் ஒன்று இறப்பது பற்றி இங்கு நான் விவரித்தே ஆகவேண்டும். காரணம் ஒரு நட்சத்திரத்தின் இறப்பின் உபநிகழ்வாகத்தான் கருத்துளை ஒன்றின் பிறப்பும் நடைபெறுகிறது.

விண்வெளியில் முக்கியமாகச் சொல்லக்கூடிய இரண்டு விதமான திடப்பொருட்கள் உண்டு. ஒன்று எரிந்து கொண்டிருக்கும் திடப்பொருள். மற்றது எரியாமல் இருக்கும் திடப்பொருள். எரியாமல் இருப்பவற்றை நாம் கோள்கள் என்கிறோம். நம் பூமியும் ஒரு கோள்தான். இவற்றுடன் துணைக்கோள்கள் என்று சொல்லப்படும் சந்திரன்களும் உண்டு. ஆனால் எரிந்து கொண்டிருப்பவற்றை நட்சத்திரம் என்கிறோம். பூமிக்கு மிக அண்மையில் இருக்கும் நட்சத்திரம் நம் சூரியன்தான். சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதைப் பலர் சிந்திப்பதேயில்லை. நம் சூரியன், பால்வெளிமண்டலம் (Milkyway Galaxy) என்னும் நட்சத்திரக் கூட்டத்தில் ஒரு நட்சத்திரமாக இருக்கிறது. இந்தப் பால்வெளி மண்டலத்தில் மட்டும் 200 முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன என்று குத்துமதிப்பாகக் கணித்துள்ளனர். எப்படிப் பார்த்தாலும் 300 பில்லியன்களுக்குக் குறையாது. சமீபத்தில் ஜேர்மனில் எடுக்கப்பட்ட கணிப்பின்படி மில்க்கிவே காலக்ஸியைப் போல, 500 பில்லியன் காலக்ஸிகள் அண்டத்தில் இருக்கின்றன. இப்போது சிந்தித்துப் பாருங்கள் அண்டத்தில் மொத்தமாக எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று. நட்சத்திரங்கள் அனைத்தும் அவற்றின் பருமனைப் பொறுத்து வேறுபடுகின்றன. சூரியன் நம்முடன் தொடர்புபட்டிருப்பதால், ஏனைய நட்சத்திரங்களின் பருமனை சூரியனுடன் ஒப்பிட்டே அளவிடுகின்றனர். நட்சத்திரங்கள் அனைத்துமே என்றாவது ஒருநாள் எரியும் சக்தி தீர்ந்து போகும் போது, இறந்து போகின்றன. அப்படி இறந்து போகும் நட்சத்திரங்கள், அவற்றின் பருமைனைப் பொறுத்து, ‘வெள்ளைக் குள்ள நட்சத்திரமாகவோ (White Dwarf), நியூட்ரான் நட்சத்திரமாகவோ (Neutron Star), கருந்துளையாகவோ (Blackhole), பிரமாண்டக் கருந்துளையாகவோ (Supermassive Blackhole) மாறும். சூரியனைப் போல பருமனில் பத்து மடங்குக்கு இருக்கும் நட்சத்திரங்கள் இறக்கும் போது, ‘சுப்பர் நோவா’ என்னும் நிலையை அடைந்து வெடிப்பதன் மூலம் ‘நியூட்ரான் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. ஆனால் சூரியனின் பருமனை விட நூறு மடங்களவில் இருக்கும் நட்சத்திரங்கள் இறக்கும் போது, ஹைப்பர் நோவா என்னும் நிலையை அடைந்து வெடிப்பதால் கருந்துளைகள் தோன்றுகின்றன. சூரியனைப் போல ஆயிரம் மடங்கு எடையுள்ள நட்சத்திரங்கள் வெடிக்கும் போது, பிரமாண்டக் கருந்துளைகள் உருவாகின்றன. இப்படியொரு பிரமாண்டமான கருந்துளைதான், மில்க்கிவே காலக்ஸியின் நடுவிலும் உள்ளது என்று கண்டுபிடித்திருக்கிறர்கள். சொல்லப் போனால், ஒவ்வொரு காலக்ஸியும் ஒரு பிரமாண்டமான கருந்துளையை மையமாகக் கொண்டு இருக்கும் என்கிறார்கள்.

ஒரு நட்சத்திரம் ஏன் இறக்கிறது. அது இறக்கும் போது சுப்பர்னோவாவாகிப் பெரிதாகி, திடீரென ஏன் வெடிக்கிறது என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அது தெரியும் பட்சத்தில்தான், ஒரு கருந்துளையின் நிகழ்வு எல்லையில் என்ன நடைபெறுகிறது என்பதையும், கருந்துளையின் ஈர்ப்பு சக்தியால் ஒளிகூடத் தப்ப முடியாமல் எப்படி உள்ளே இழுக்கப்படுகிறது என்பதையும், இந்தக் கட்டுரையின் முதலாம் பகுதியின் இறுதியில் நாம் விட்டுச் சென்ற கேள்விகளுக்கான பதில்களையும் விளங்கிக் கொள்ள முடியும்.

கருந்துளைகளைப் பற்றி ஏதோ ஒரு அறிவியல் செய்தியாக நினைத்து நாம் அறிந்து கொள்ள நினைக்கலாம். ஆனால், கருந்துளைதான் நாங்கள், நாங்கள்தான் கருந்துளை என்னும் நிலைமைக்கு நம்மை நவீன அறிவியல் கொண்டுவந்து விட்டிருக்கிறது. நம் வாழ்வுக்கும் கருந்துளைக்கும் நிறையவே சம்மந்தம் இருக்கிறது என்கிறார்கள். அது என்ன சம்மந்தம் என்பதைப் படிப்படியாக நாம் அறிந்து கொள்வோம்.

(தொடரும்)

-ராஜ்சிவா-

கருந்துளைகள் இருக்கின்றனவா? – அண்டமும் குவாண்டமும் (பகுதி 1)

கருந்துளைகள் (Blackholes) இருக்கின்றனவா? – அண்டமும் குவாண்டமும் (பகுதி 1)

‘குவாண்டம்’, ‘குவாண்டம்’ என்று அறிவியலில் இப்போது அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் அப்படியென்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தாலும் கூட, அதைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், பலருக்குக் குவாண்டம் (Quantum) என்றால் என்னவென்று தெரியாது என்பதுதான் உண்மை. இன்றைய உலகிலும், இனி வரப்போகும் உலகிலும், குவாண்டம் தன் பங்கை முழுமையாகச் செலுத்தப் போகிறது. குவாண்டம் இல்லாமல் இனி எதுவுமே இல்லை என்ற நிலையும் வரப்போகிறது. வரப்போகிறது என்ன, வந்துவிட்டது. எனவே ‘குவாண்டம் என்றால் என்ன?’ என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவர்களாகிறோம். இந்த நிலையில், குவாண்டத்தைத் தமிழில் முடிந்தளவுக்கு ஏன் புரியவைக்கக் கூடாது என்று நினைத்து, அதை ஒரு தொடர் போல எழுதினால் என்ன என்ற முடிவில், ‘அண்டமும் குவாண்டமும்’ என்ற பெயரில் எழுத விரும்புகிறேன். இந்தக் கடுமையான, சிக்கலான அறிவியலை என்னால் முடிந்த அளவுக்கு இலகுவாகவும், எளிமையாகவும் உங்களுக்குத் தரலாம் என்று நினைக்கிறேன். இதற்கு நிச்சயம் உங்கள் ஆதரவு இருக்கும் என்றே நான் நம்புகிறேன். குவாண்டம் என்றால் என்ன? என்னும் அடிப்படைக் கேள்வியிலிருந்து, குவாண்டம் எந்த நிலையில் அண்டத்துடன் சம்மந்தப்படுகிறது? என்பதுவரை ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம். குவாண்டத்தின் மிகச் சிக்கலான ஒவ்வொரு முடிச்சையும், ஒவ்வொரு கட்டுரை மூலம் நாம் அவிழ்த்துக் கொள்ளலாம். இதன் ஆரம்பத்தை, சமீபத்தில் விவகாரமாகப் பேசப்பட்ட ‘கருந்துளை’ பற்றிய கட்டுரையுடன் ஆரம்பிக்கிறேன்.     

- ராஜ்சிவா-

கருந்துளைகள் (Blackholes) இருக்கின்றனவா?

இன்றைய தேதியில், அறிவியலில் பெரும் விவகாரமாகவும், விவாதமாகவும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விசயம், ‘அண்டத்தில் எங்குமே கருந்துளைகள் (Blackholes) இல்லை’ என்பதுதான். நாஸா உட்படப் பல ஆராய்ச்சி நிலையங்களில், விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கான கருந்துளைகளைக் கண்டுபிடித்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், இப்படியானதொரு சந்தேகம், ஆச்சரியத்தையும், குழப்பத்தையும்தான் நமக்கு ஏற்படுத்தும். ஆனால் அவ்வளவு சுலபமாக நாம் இந்தச் சந்தேகத்தைச் சாதாரணமானது என்று சொல்லி ஒதுக்கிவிட்டுச் சென்றுவிட முடியாது. அதற்குக் காரணம், இந்தச் சந்தேகத்தை எழுப்பியுள்ளவர் ஒரு சாதாரணமான ஆளே கிடையாது என்பதுதான். உலக இயற்பியல் வரலாற்றில் மிகமுக்கியமானவரும், நவீன இயற்பியலில் பெயர் பெற்றவரும், கடந்த பல தசாப்தங்களாக கருந்துளைகளைப் பற்றி ஆராய்ந்து வருபவருமான ‘ஸ்டீவன் ஹாக்கிங்’ (Stephen Hawking) என்பவர்தான் இந்தச் சந்தேகத்தையே எழுப்பியுள்ளவர்.


ஆனால், உண்மையில் ஹாக்கிங் சொன்னது வேறு. ‘அண்டத்தில் எங்கும் கருந்துளைகள் இல்லை’ என்று அவர் சொல்லவில்லை. ‘இப்போது நாம் கருந்துளைகள் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அதுபோல போலக் கருந்துளைகள் இருக்காது’ என்று சொன்னார். ‘கருந்துளைகள் இப்படித்தான் இருக்கும் என்று நம்மிடம் ஒரு வரையறை உண்டு. அப்படி நாம் வரையறுத்து வைத்திருப்பது போலக் கருந்துளைகள் இல்லை’ என்றார். இவை மட்டுமில்லாமல், வேறு சில புரட்சிகரமான கருத்துகளையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறார் ஹாக்கிங். ‘கருந்துளைகள் கறுப்பு நிறமாக இருக்காது’ என்றும், ‘அவை சாம்பல் நிறத்தில் இருக்கும்’ என்றும் சொல்லியிருக்கிறார். இவற்றையெல்லாம் ஏதோ ஒரு அனுமானத்தின் மூலம் அவர் சொல்லிவிடவில்லை. பலவிதமான இயற்பியல், கணிதச் சமன்பாடுகளை முன்வைத்துச் சொல்லியிருக்கிறார். இவர் இப்படிச் சொன்னது சக இயற்பியலாளர்களை, குறிப்பாக வானியல் இயற்பியலாளர்களைப் (Astrophysicist) பெரும் குழப்பத்திற்குள் கொண்டு சென்றிருக்கிறது. இவர் சொல்வதை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்ற முடிவுக்குக் கூட இன்னும் யாராலும் வரமுடியவில்லை. இவர் சொல்வது மட்டும் உண்மையாக இருக்குமானால், இதுவரை வானியல் இயற்பியலில் உண்மைகள் என்று நம்பப்பட்டு வந்த பல விசயங்களை மாற்றிக் கொள்ள வேண்டிவரும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை இந்த முடிவுகள். ஆனால், இப்படிப்பட்ட முடிவுகளுக்கான ஆராய்ச்சிகள் நடைபெறுவதற்குக் காரணமாக இருப்பது, இரண்டு பேருக்கிடையில் நடக்கும் போர்தான் என்கிறார்கள். கோபமில்லாமல், வெறுப்பில்லாமல், ஆயுதமற்று, மூளையை மட்டும் மூலதனமாக வைத்து நடக்கும் ஒரு போர் இது. இந்தப் போர் பலவருடங்களாக நடந்துவரும் ஒரு போர். போரில் எதிரெதிராக நின்று அதில் பங்குபற்றும் இருவருமே உலகமகா அறிவியலாளர்கள். பெரும் புத்திசாலிகள். இயற்பியல் விற்பன்னர்கள். அந்த இருவரில் ஒருவர், நான் மேலே சொன்ன ஸ்டீபன் ஹாக்கிங். மற்றவர் ‘லெனார்ட் சஸ்கிண்ட்’ (Leonard Susskind) என்பவர். இந்த சஸ்கிண்ட் என்பவரும் சாதாரணமான ஒருவர் கிடையாது. உலகப் புகழ்பெற்ற ஸ்ட்ரிங் தியரியின் (String Theory) கட்டமைப்பாளர்களில் ஒருவர்.


‘ஊர் இரண்டுபட்டால் யாருக்கோ கொண்டாட்டம்’ என்று சொல்வழக்கு உண்டு. அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், சஸ்கிண்டும் ஹாக்கிங்கும் இரண்டுபட்டதால், இயற்பியல் உலகு, அறிவியல் உலகு, அதிகம் ஏன் ஒட்டுமொத்த உலகிற்கே கொண்டாட்டம்தான். இருவருமே மற்றவர் சொல்வது தப்பு என்று நிரூபிப்பதற்காக ஆவேசமாக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, கணிதச் சமன்பாடுகளை நசித்துப் பிசைந்து பல அறிவியல் உண்மைகளை வெளியிடுகின்றனர். இதில் பிரச்சனைகளும் இல்லாமல் இல்லை. இவர்கள் இருவரில் யார் சொல்வது சரியென்று குழப்பம் மிஞ்சுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், இந்தக் குழப்பங்களைக் கையிலெடுத்துக் கொண்டு, இனிவரும் இளம் விஞ்ஞானிகள் ஆராய ஆரம்பிக்கும் போது சரியான விடைகள் பின்னாளில் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. இப்படியே பேசிக் கொண்டு போனால், இவர்கள் என்ன போர் செய்தார்கள் என்று பார்க்க முடியாமல் போய்விடும். ஆகவே முதலில் எதை முன்வைத்து இவர்களின் போர் நடந்தது என்பதை நாம் பார்க்கலாம்.
இயற்பியலில் (Physics) ‘வானியல் இயற்பியல்’ (Astrophysics) என்பது தற்போது மிக முக்கியமான பிரிவாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் வானியல் ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியா கூட அதில் தன்பங்கை வலிமையுடன் செலுத்த ஆரம்பித்துவிட்டது. விண்வெளிக்கு சாட்லைட்டுகளை அனுப்புவதிலிருந்து, அயல்கிரகங்களுக்கு ராக்கெட்டுகளை அனுப்புவது வரை முன்னேறியாகிவிட்டது. பூமியிலிருந்தே விண்வெளியைப் பெரும் தொலைநோக்கிக் கருவிகளைக் கொண்டு அவதானிக்க ஆரம்பித்துவிட்டோம். அதன் உச்சமாக, சாட்லைட்டுகள் மூலம் தொலைநோக்கிக் கருவிகளை விண்வெளியில் நிறுவி, அங்கிருந்தே விண்வெளியை ஆராயவும் செய்கிறோம். அமெரிக்கா ‘NASA’ என்றும், ஐரோப்பா ‘ESA’ என்றும், இந்தியா ‘ISRO’ என்றும் அமைப்புகளை உருவாக்கி வானியல் ஆராய்ச்சிகளைச் செய்கின்றன. இவையெல்லாவற்றிற்கும் அடிப்படையானது வானியல் இயற்பியல் படிப்புத்தான். மிகப்பெரிய தொலைநோக்கிக் கருவிகள் மூலம், விண்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களை ஆராய்ந்து, இயற்பியல், கணிதவியல் சமன்பாடுகள் மூலம் எடுத்த பல முடிவுகளைக் கொண்டு, நமது அண்டம் உருவாகியது முதல், மனிதன் தோன்றியது வரையுள்ள மொத்த சரித்திரத்தையும் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ‘பிக் பாங்’ என்னும் சிறு புள்ளியின் பெருவெடிப்பின் ஆரம்பத்திலிருந்து, நேற்று சென்னையில் நடந்த அரசியல் மாநாடு வரையிலான தொடர் நிகழ்ச்சிகளுக்கான காரணங்களை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்திப் பட்டியலிடுகிறார்கள்.


இந்தப் பட்டியலின் வரிசையில் இருக்கும் ஒன்றுதான் ‘கருந்துளை’ என்று சொல்லப்படும் ‘ப்ளாக்ஹோல்’ (Blackhole). நமது அண்டத்தின் (Universe) அவிழ்க்க முடியாத பெரும் மர்ம முடிச்சாக இந்தக் கருந்துளை இருக்கிறது. சில புராணங்களிலும், ‘மாயா’ (Maya) போன்ற இனங்களின் சரித்திரங்களிலும் ‘கருமையான இடம்’ அல்லது ‘கரும்பள்ளம்’ என்று விண்வெளியில்  இருக்கும் இடமொன்றைச் சுட்டிக் காட்டியிருந்தாலும், அவை இப்போது சொல்லப்படும் கருந்துளைகளைத்தானா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அதற்கப்புறம் கிபி 1798ம் ஆண்டளவுகளில் ‘லாப்பிளாஸ்’ (Simon Laplece) என்னும் கணிதவியலாளர் இந்தக் கருந்துளையைப் பற்றிச் சொல்லியிருப்பதாக கருதுகின்றனர். ஆனாலும் உண்மையான கருந்துளை 1972ம் ஆண்டு தொலைநோக்கிக் கருவிகள் மூலமாக முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அது அறிவியலில் ஒரு மைல்கல்லாகவும் அமைந்தது. அதைத் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான கருந்துளைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்றைய தேதியில் அண்டம் முழுவதும் நூறு மில்லியனுக்கு அதிகமான கருந்துளைகள் இருக்கின்றன என்கிறார்கள். இந்தக் கணக்கு ரொம்பவும் குறைத்துச் சொல்லப்பட்ட கணக்கு. எங்கள் சூரியக் குடும்பம் இருக்கும் பால்வெளிமண்டலத்தின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை ஒன்று (Supermassive Blackhole) இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு நட்சத்திர மண்டலங்களின் மையங்களும், இது போல ஒரு பெரிய கருந்துளையைக் கொண்டிருக்கும் என்கிறார்கள். இந்தக் கருந்துளைகள் ஏன் கருப்பாக இருக்கின்றன? அவற்றின் தண்மைகள் என்ன? என்று ஆராயும் போதுதான் பல ஆச்சரியமான தகவல்கள் நமக்குக் கிடைக்கத் தொடங்கின. அந்தத் தகவல்கள்தான் இப்போது இரண்டு இயற்பியலாளர்களுக்கிடையிலான போருக்கும் காரணமாகியிருக்கிறது.


நாம் வசிக்கும் பூமி எவ்வளவு பெரியது என்பது உங்களுக்குத் தெரியும். அதில் உள்ள மலைகள், பாறைகள், நீர்நிலைகள்,  உயிரினங்கள் என அனைத்தையும் சேர்த்து, நம் பூமியின் எடையை ஒருதரம் கற்பனை பண்ணிப் பாருங்கள். பூமியுடன் ஒப்பிடும் போது சூரியன், ஒரு கோடியே மூன்று லட்சம் பூமிகளை அதனுள் வைத்துவிடக் கூடிய அளவுக்குப் பெரியது. மூன்று லட்சத்து முப்பத்திமூன்றாயிரம் மடங்கு பூமிகளின் எடைக்குச் சமனானது சூரியன். இப்போது நமது சூரியன் எவ்வளவு பெரியதென்று கொஞ்சமாவது புரிகிறதல்லவா? ஆனால், அண்டத்தில் நமது சூரியனைப் போல, பத்து மடங்கு, நூறு மடங்கு, இருநூறு மடங்கு என்று  பெரிய நட்சத்திரங்களெல்லாம் வெகு சாதாரணமாக இருக்கின்றன. அவைகளுடன் ஒப்பிடும் போது நம் சூரியன் ஒரு குட்டிப்பாப்பா. நட்சத்திரங்கள் என்றாலே எப்போதும் எரிந்து கொண்டிருப்பவை என்று உங்களுக்குத் தெரியும். சூரியனை விடப் பத்துமடங்கு  பெரிய ஒரு நட்சத்திரத்தின் மையப்பகுதியில் (Core) உள்ள கதிர்த்தொழிற்பாட்டு எரிதண்மை தீர்ந்து போகும் வேளையில், அந்த நட்சத்திரம் இறக்கும் நிலையை அடைகிறது. அப்போது அந்த நட்சத்திரம் தன் உருவத்தில் ஊதிப் பெரிதாக உருமாறி ‘சுப்பர்நோவா’ (Supernove) என்று சொல்லப்படும் நிலையை அடைகிறது. அப்போது, அந்த நட்சத்திரத்தின் மையத்தில் ஏற்படும் நிலையற்ற ஸ்திரத் தண்மையாலும், அதிகளவு ஈர்ப்புவிசையாலும் திடீரென ஒரு சுருக்கம் ஏற்பட்டு, நட்சத்திரம் படீரென வெடிக்கின்றது. இந்த வெடிப்பு அண்டத்தின் ஆரம்ப வெடிப்பான பிக்பாங்கை ஒத்ததாக இருக்கும். இந்த சுப்பர்நோவா வெடித்ததன் மூலம், ‘நியூட்ரான் நட்சத்திரம்’ (Neutron Star) என்ற ஒன்று உருவாகும். நியூட்ரான் நட்சத்திரம் என்பது விண்வெளியில் காணப்படும் மிகச்சிறிய ஆனால் மிகச் சக்திவாய்ந்த ஒன்றாகும். அதிக அடர்த்தியும், நினைத்துப் பார்க்க முடியாத எடையும் கொண்ட மிகச்சிறிய நட்சத்திரம் அது. ஐந்து கிலோமீட்டர்கள் அகலமுள்ள ஒரு நியூட்ரான் நட்சத்திரம், ஐம்பது மடங்கு சூரியனின் எடையுடன் இருக்கும். அவ்வளவு அடர்த்தியும் சக்தியும் வாய்ந்தது நியூட்ரான் நட்சத்திரம்.


சூரியனைப் போல பத்து மடங்கு நட்சத்திரம் சுப்பர்நோவாவாக மாறி வெடிக்கிறது என்று பார்த்தோம். அது போல, சூரியனைப் போல நூறு மடங்கு பெரிதான நட்சத்திரத்துக்கு இப்படியானதொரு நிலை ஏற்பட்டால், அதாவது சூரியனைப் போல நூறு மடங்குள்ள ஒரு நட்சத்திரம், மைய எரி நிலை போதாமையால் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதுவும் மிகப்பெரிதாக ஊத ஆரம்பிக்கிறது. அப்படிப் பெரிதாகியதும் அது ‘சுப்பர் நோவா’ என்று அழைக்கப்படுவதில்லை. மாறாக, ‘ஹைப்பர் நோவா’ (Hypernova) என்று அழைக்கப்படுகின்றது. இந்த ஹைப்பர் நோவாக்கள் பெரிய அளவில் காமாக் கதிர்களை வெளிவிடக் கூடியவை. இவையும் சுப்பர் நோவாக்கள் போலவே, மையத்தில் (Core) ஏற்படும் ஸ்திரத்தண்மை இழப்பினாலும், ஈர்ப்பு சக்தி அதிகரிப்பினாலும் ஒரு குறித்த கணத்தில் பிக்பாங்க் போல, மிகப் பெரிய வெடிப்பாய் வெடிக்கின்றன. அந்த வெடிப்பின் போது ஏற்பட்ட சுழற்சியினாலும், எல்லையில்லா ஈர்ப்பு சக்தியினாலும் (Gravity), ஒரு சிறு புள்ளியை மையமாகக் கொண்டு அனைத்தும் ஒடுங்க ஆரம்பிக்கின்றன. அந்தப் புள்ளியே கருந்துளையாகப் (Blackhole) பிறப்பெடுக்கிறது.
திடீரெனத் தோன்றிய பெரிய வெடிப்பு, அதனால் ஏற்பட்ட அதிவேகச் சுழற்சி, அப்போது ஏற்பட்ட அளவிடமுடியாத வெப்பநிலை, அதனால் உருவான கதிர்வீச்சு மற்றும் ஆவியாதல் போன்ற நிகழ்வுகள், அதனால் உருவான  உபஅணுத்துகளின் சிதறல்கள், சிதறிய துகள்களெல்லாம் ஈர்ப்புவிசையினால் ஒன்றாக, ஒரே புள்ளியாகச் சேர்தல், அந்தப் புள்ளி முடிவற்ற எடையை அடைதல், அதனால் அந்தப் புள்ளியின் ஈர்ப்புவிசையும் முடிவற்றதாக அதிகரித்தல் என்ற அனைத்துச் செயல்பாடுகளும் ஒரு நொடிக்கும் குறைந்த நேரத்தில் நடைபெறுகிறது. அப்படித் தோன்றிய அந்தப் புள்ளியின் ஆற்றலால், அருகில் இருக்கும் எதுவும் தப்ப முடியாமல் அதன்பால் ஈர்க்கப்பட்டு, அதனுள் நுழைந்து காணாமல் போகும். வெளிச்சத்தால் கூட அதன் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பிவிட முடியாது. ஒளியைக் கூட விழுங்கியது அந்தப்புள்ளி. ஒளி விழுங்கப்பட்டதால், அந்த இடமெங்கும் கருப்பாக தோன்றியது. வட்டமான ஒளியில்லாத அந்தப் புள்ளி ‘கருந்துளை’ என்று அழைக்கப்பட்டது.


நயாகரா நீர்வீழ்ச்சியை உங்களில் பலர் சென்று பார்த்திருக்க மாட்டீர்கள். சிலர் சென்று பார்த்திருக்கலாம். சிலர் காணொளிகளாகக் கண்டிருக்கலாம். நயாகரா நீர்வீழ்ச்சியைக் கண்டவர்கள் நயாகராவையும், அதைக் காணாதவர்கள், சாதாரணமான வேறு நீர்வீழ்ச்சியைக் கண்டிருந்தால் அதையும், இவையிரண்டையும் காணாதவர்கள், ஆற்றில் அல்லது நீர் நிலைகளில் ஏற்படும் ஒரு பெரிய சுழலையாவது கற்பனை செய்து கொள்ளுங்கள். நயாகரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கீழே விழும் புள்ளிவரை, மேலே உள்ள ஆற்றில் தண்ணீர் சமதரையில் அமைதியாகவே ஓடிக் கொண்டுவரும். நிலைக் குத்தாகக் கீழே விழவேண்டிய ஒரு குறித்த இடம் வரும்வரை, அந்த நீர் எந்தச் சலனமும் இல்லாமல், அமைதியாகவே ஓடிக் கொண்டு வரும். நீர்வீழ்ச்சியில், கீழே விழுவதற்கு குறித்த சில மீட்டர் முன்னால் வரை ஆற்றின் வேகத்தில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் ஒரு குறித்த இடத்தை அடைந்ததும், அதாவது நீர்வீழ்ச்சியில் நீர் விழுவதற்கு முன்னர், மேலே உள்ள சமதரையில் உள்ள ஆற்று நீரில் சில மீட்டர்கள் முன்னாலேயே, நீரின் இழுவை வேகம் அதிகமாக காணப்படும். கீழே விழும் நீரின் ஈர்ப்பின் இழுவைச் சக்தி, மேலே உள்ள நீரில் சில மீட்டர்களில்தான் தெரிய ஆரம்பிக்கும். நீர்வீழ்ச்சியின் மேலே உள்ள ஆற்றில் நாம் சாதாரணமாக நீந்திக் கொண்டிருக்கலாம். அந்த நீர்வீழ்ச்சியின் நீர்விழும் அந்தக் குறித்த இடம் வரும்வரை பிரச்சனை இல்லாமல் நீந்தலாம். ஆனால், அந்தக் குறித்த எல்லை இடத்துக்கு நாம் நீந்தி வருவோமானால், நீர்வீழ்ச்சியின் விசையினால் கீழே இழுக்கப்படுவோம். அந்த எல்லை வரை நீந்த முடிந்த நமக்கு, அந்த எல்லை வந்ததும் நீர் இழுக்கும் வேகத்தை எதிர்த்து நீந்த முடியாமல், நீர்வீழ்ச்சியை நோக்கி இழுக்கப்பட்டுக் கீழே விழுந்துவிடுவோம். அந்த எல்லையை ‘திரும்பி வரமுடியாத எல்லை’ என்று சொல்லலாம் அல்லவா? இது போன்று திரும்பி வரமுடியாத ஒரு எல்லை கருந்துளைக்கும் உண்டு என்கிறார்கள்.


கருந்துளை என்பது முடிவற்ற ஈர்ப்பு விசையைக் கொண்டது என்கிறார்கள். அதன் ஈர்ப்பு, அதன் மையத்தை நோக்கி அனைத்தையும் இழுக்கும். ஆனால் அப்படிப்பட்ட கருந்துளையையும் நாம் அணுகலாம். ஒரு குறித்த எல்லைவரை நமக்கு எதுவும் நடக்காது. நயாகரா நீர்வீழ்ச்சி போல. ஆனால் ஒரு குறித்த எல்லையை நாம் கருந்துளையில் அடைந்தோமானால், அதன் ஈர்ப்புவிசையிருந்து நம்மால் தப்பிவிட முடியாது. கருந்துளையின் திரும்பி வர முடியாத எல்லையாக இருப்பதை ‘The Point of no return’ என்று சொல்கிறார்கள். அத்துடன் அந்த எல்லைக்கு ‘நிகழ்வு எல்லை’ (Event Horizon) என்று விசேசமான பெயரிட்டும் அழைக்கிறார்கள். வட்டவடிவமான ஒரு எல்லையாக அது காணப்படுகிறது. கருந்துளைக்குள் ஈர்க்கப்படும் அனைத்தும் இந்த ‘நிகழ்வு எல்லை’ வழியேதான் அதன் மையம் நோக்கி இழுக்கப்படுகின்றன.

ஒளியைக் கூட இந்தக் கருந்துளைகள் உள்ளே இழுப்பதால், கருப்பு நிறமாகக் காட்சிதருகிறது என்றும், கருந்துளையின் ஈர்ப்பு எல்லையாக, ‘நிகழ்வு எல்லை’ (Event Horizon) என்பது இருக்கிறது என்றும் இதுவரை நம்பிவந்தோம். ஆனால், இவை இரண்டுமே தப்பு என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். கருந்துளை என்று சொல்வதே தவறு. அது சாம்பல் நிறமானது என்றும். அதற்கு Event Horizon என்பதே கிடையாது என்றும் சொல்லியிருக்கிறார்.

ஆனால், இதற்கு எதிர்ப்புக் குரலை, ‘சேச்சே! ஹாக்கிங் சொல்வதுதான் தப்பு. Event Horizon என்பது நிச்சயம் இருக்கிறது. அது சாதாரணமானது கிடையாது. சினிமாப்படத்தை ஒளிபரப்பும் புரஜெக்டர் சாதனம் போல, அது பல காட்சிகளை விண்வெளியில் ஒளிபரப்புகிறது. அது ஒளிபரப்பும் திரைப்படக் காட்சிகள்தான் நானும், நீங்களும், அமெரிக்க ஜனாதிபதியும், பூமியில் இருக்கும் அனைத்தும். பூமியில் நாம் பார்க்கும் எதுவுமே உண்மையில்லை. நாம் அனைவருமே கருந்துளைகள் தெறிக்க விடும் மாயைத் தோற்றங்கள். இந்த ப்ளாக்ஹோல்களின் Even Horizon வெளிவிடும் தகவல்கள் (Information) வெளிப்படுத்தும் தோற்றங்களைத்தான், நாம் நடப்பதாக நினைத்துக் கொண்டு ஏமாறுகிறோம்’ என்று கிலியுடன் கிளப்புகிறார்கள்.

இது என்ன புதுப்புரளி? என்ன நடக்கிறது கருந்துளைகளில்? Evend Horizone என்பது என்ன? அது உண்மையில் திரைப்படக் காட்சிகளைப் போலப் படத்தை ஒளிபரப்புகிறதா? தலையைச் சுற்ற வைக்கும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தெளிவான பதில்களை சஸ்கிண்ட் தெளிவாகத் தருகிறார். அவர் தரும் அந்தப் பதில்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்……..!

(தொடரும்)

-ராஜ்சிவா-

மிக்கி மௌஸும் நீரும்

மிக்கி மௌஸும் நீரும் – நீரின் விந்தைத்தண்மைகள்

‘மிக்கி மௌஸும் நீரும்’ என்னும் தலைப்பைப் பார்த்ததுமே வியப்புத்தான் உங்களுக்குத் தோன்றியிருக்கும். ‘முழங்காலுக்கும், மொ.தலைக்கும் முடிச்சுப் போடுவது போல’, மிக்கி மௌஸுக்கும், நீருக்கும் என்ன சம்மந்தம்? என்ற ஆவலும் அந்த வியப்பில் அடங்கியிருக்கும். அது என்னவென்றுதான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

நீர் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதை, நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. தினம்தினம் அவசியம் அருந்த வேண்டிய அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று நீர். ஆனால் அந்த நீரைப்பற்றி நாம் எதையும் சரியாக அறிந்து வைத்திருப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். கண்ணும், தாயும் நம்முடன் இருக்கும் வரை, அவைபற்றிக் கவலையே படுவதில்லை நாம். இந்த இரண்டில் ஒன்று, நம்மை விட்டு இல்லாமல் போகும் போதுதான், ‘அட! வாழ்க்கையில் எவ்வளவு அவசியமான ஒன்றை இழந்து விட்டோம்’ என்று அலற ஆரம்பிப்போம். அதுபோல ஒன்றுதான் நீரும். அது இருக்கும் வரை, அதைப்பற்றி எந்தக் கவலையும் படாமல், அருந்திவிட்டுப் போய்க்கொண்டே இருப்போம். நீரும் இல்லாமல் போகும் போதுதான் அதன் அருமை தெரியும். நீரைப்பற்றிய விழிப்புணர்வுதான் நமக்கு இல்லாவிட்டாலும் கூட, அதுபற்றி ஒரு விந்தையான அறிவியல் தகவலை அறிந்து கொள்ளலாம். விந்தையான தகவல் என்றால், நீங்கள் நம்பவே முடியாத, கற்பனையால் நாம் அதைப் புரிந்து கொள்ள முடியாத ஒரு விந்தை.


ஒரு கிளாஸில் (Glass) அரைவாசி அளவுக்கு நீரை ஊற்றி வைத்துவிட்டு, ‘இதில் என்ன இருக்கிறது?’ என்று கேட்பார்கள். நாம் அரைக் கிளாஸில் நீர் இருப்பதாகச் சொல்வோம். ஆனால் அரைக் கிளாஸில் நீரிருப்பது போல, மிகுதியாய் இருக்கும் அரைக் கிளாஸில் நீரில்லாத வெறுமையும் இருக்கிறது. ஆனாலும் நாம் அதைச் சொல்ல மாட்டோம். நம் கண்ணுக்கு என்ன தெரிகிறதோ, அதையே உண்மையென்று நம்பி, அதை மட்டும்தான் குறிப்பிட்டுச் சொல்வோம். இது மனித இயல்பு. அரைக் கிளாஸில் நீர் இருப்பதை ஒரு தத்துவமாகவும் சொல்வார்கள். இதை நீங்கள் முன்னரே கேள்விப்பட்டுமிருக்கலாம். ஆனால், நான் சொல்ல வந்தது இது போல ஒன்றுதான் என்றாலும், இதுவல்ல. இதே கிளாஸும் இதே நீரும்தான். ஆனாலும், நான் சொல்ல வந்தது தத்துவமல்ல, அறிவியல்.


நீர் முழுமையாக நிரம்பியிருக்கும் ஒரு கிளாஸை எடுத்து மேசையில் வைத்துவிட்டு, அதைக் கொஞ்சம் பாருங்கள். அந்தக் கிளாஸில் முழுமையாக நீர் நிரம்பியிருப்பதாக நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள். ஆனால் உண்மையில் அப்படி இருப்பதில்லை. ஒரு கிளாஸில் நீர் நிரம்பியிருந்தால், அந்த கிளாஸில் 99% நீர் இருப்பதில்லை. 1% அளவில்தான் நீர் இருக்கும். ‘என்ன தலை சுற்றுகிறதா?’ ஆம்! 99 சதவீதத்துக்கு அந்தக் கிளாஸ் நீரின்றி வெறுமையாகத்தான் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், ஒரு கிளாஸ் நீரை நீங்கள் குடிக்கும் போது, அதில் ஒரேயொரு சதவீதம் நீரைத்தான் குடிக்கிறீர்கள். மிகுதி 99 சதவீதம் நீரைக் குடிப்பதாக நினைத்துக் கொண்டு, வெறுமையைக் குடிக்கிறீர்கள்.

“என்னடா! இந்த ஆள் தண்ணியைப் போட்டுவிட்டு உளறுகிறாரோ?” என்று நீங்கள் இப்போ நினைக்கலாம். அப்படி நான் தண்ணியைப் போட்டுவிட்டு உளறினாலும், அந்தத் தண்ணியிலும் 99 சதவீதம் வெறுமையைத்தான் குடித்திருப்பேன்.

‘என்ன புரியவில்லையா? பரவாயில்லை, தொடர்ந்து படியுங்கள் புரியும்.


நீர் என்பது, இரண்டு ஐதரசன் (H) அணுக்களையும், ஒரு ஒட்சிசன் (O) அணுவையும் சேர்த்து, H2O  மூலக்கூறால் (Molecule) உருவாக்கப்பட்ட ஒரு திரவம். அதாவது H2O என்னும் மூலக்கூறுகள் பல ஒன்று சேர்ந்திருப்பதை நாம் நீர் என்கிறோம். நீர் என்றல்ல, அனைத்துத் திரவங்களும் மூலக்கூறுகளால்தான் உருவானவை. ஒரு திரவத்தின் மிகச்சிறிய வடிவம் மூலக்கூறு எனப்படும். மூலக்கூறு ஒன்றைப் பிரிக்க வேண்டுமென்றால் அது அணுக்களாகத்தான் பிரியும். பல H2O மூலகூறுகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து, ஒரு கிளாஸ் நீராக மாறுகின்றன. இரண்டு ஐதரசன்களும், ஒரு ஒட்சிசனும், நீர் மூலக்கூறில் ஒரு விந்தையான வடிவத்தில் சேர்கின்றன. அந்த விந்தையான வடிவம் என்ன தெரியுமா? வால் டிஸ்னியின் கார்ட்டூன் படங்களில் வரும் மிக்கி மௌஸின் (Mickey Mouse) தலையின் வடிவம்தான் அது. ஐரரசன் அணுக்கள் இரண்டும் மேலேயும், ஒட்சிசன் அணு கீழேயுமாக இணைந்து இந்த வடிவில் அவை காணப்படும். இந்த விசேச வடிவமே நீருக்கு ஒரு சிறப்பான தண்மையைக் கொடுக்கிறது.


மேலே இரண்டு ஐதரசன் அணுக்களும், கீழே ஒரு ஒட்சிசன் அணுவும், நீரின் மூலக் கூறில் காணப்படுவதால், மேலே நேரேற்றத்துடனும் (+), கீழே எதிரேற்றத்துடனும் (-) அது இருக்கும். அதாவது கிட்டத்தட்ட ஒரு காந்தத்தைப் போலக் காணப்படும். அல்லது பூமியின் வட, தென் துருவம் போல என்றும் சொல்லலாம். இப்படிக் காந்தம் போலக் காணப்படுவதால், நீரின் மூலக்கூறுகள் ஒவ்வொன்றும் மற்ற மூலக்கூறுடன் இணையும் போது, ஒத்த ஏற்றத்தால் ஒன்றை ஒன்று தள்ள ஆரம்பிக்கின்றன. ஒரே ஏற்றங்கள் ஒன்றை ஒன்று தள்ளும் என்றும், எதிர் ஏற்றங்கள் ஒன்றை ஒன்று கவர்ந்து கொள்ளும் என்றும் சிறு வயதில் நீங்கள் படித்திருப்பீர்கள். அந்த விளைவால் நீரின் மூலக் கூறுகள் ஒவ்வொன்றுக்கும் இடையில், தள்ளுவிசை காரணமாக மிகப்பெரிய வெறுமையான இடைவெளிகள் காணப்படும். அதாவது நீரின் மூலக்கூறுகளை ஒன்று சேர்த்தால், அவற்றிற்குள் இடையே இருக்கும் இடைவெளி வெறுமை 99 மடங்கு அதிகமாக இருக்கும். இப்போது புரிகிறதா, ஒருகிளாஸ் நீரை நீங்கள் குடிக்கும் போது, 99 சதவீதம் வெறுமையையே குடிக்கிறீர்கள் என்பது?


இதனாலேயே, அதாவது நீர் மூலக்கூறின் மிக்கி மௌஸ் வடிவத்தால், நீருக்குப் பல சிறப்பான தண்மைகள் வந்துவிடுகிறது. பூமியில் இருக்கும் திரவங்களில் இயற்கையிலே திடப்பொருளாகவும் (ஐஸ்), திரவமாகவும் (நீர்), வாயுவாகவும் (நீராவி) இருக்கக் கூடிய ஒன்றேயொன்றாக நீர் இருப்பதற்குக் காரணம் இதுதான். அத்துடன் நீரின் திடப்பொருளான பனிக்கட்டியைத் திரவமான நீரிலிடும்போது, பனிக்கட்டி மிதப்பது, அதாவது திடப்பொருள் திரவத்தில் மிதப்பது, நீரில்தான் நடைபெறும். திடப்பொருள், திரவத்தை விட அடர்த்தி அதிகமானதாகவும், திரவம், வாயுவை விட அடர்த்தி கூடியதாகவும் இருப்பதுதான் வழமை. அடர்த்தி அதிகம் உள்ள திடப்பொருள், அடர்த்தி குறைந்த திரவத்தில் இடப்படும் போது, எப்போதும் அமிழ வேண்டும். ஆனால் நீரில் அதற்கு நேரெதிராக நடைபெறுகிறது. இதற்குக் காரனமும் அதுதான். நீர் மூலக்கூறின் வடிவத்தினால்தான் ஐஸில் சறுக்கி விளையாடும் விளையாட்டுகளை நம்மால் விளையாட முடிகிறது. நீர் பனிக்கட்டியானதும், அதன் மேற்பரப்பில் சறுக்கும் தண்மை உருவாவதற்கும் இதுவே காரணம். இப்படிப் பல வியப்பான தண்மைகள் நீருக்கு உண்டு. ஏனைய திரவங்களை விட, என்னென்ன விதங்களில் நீர் விசேசத் தண்மைகளைப் பெற்றிருக்கிறது என்று நீங்கள் அறிந்து கொள்கிறீர்களோ, அவை அனைத்துக்கும் இந்த மிக்கி மௌஸ் வடிவம்தான் காரணமாகிறது.

நீங்கள் வாங்கும் ஒரு பாட்டில் கோலாவிலிருந்து, கோலிச் சோடா வரை அதனுள் உள்ள சில துளிகளுக்காகவே அவ்வளவு பணத்தைக் கொட்டுகிறீர்கள் என்னும் நிதர்சனத்தைப் புரிந்து கொண்டீர்களா….?

-ராஜ்சிவா-

பெல்மேஷ் முகங்கள்

பெல்மேஷ் முகங்கள் – விடுவிக்கப்படாத மர்மம்

கடவுள் பற்றியும், பேய் போன்ற அமானுஷ்ய சக்திகள் பற்றியும் என் அபிப்பிராயங்களும், அவற்றையொட்டிய என் கருத்துகளும் மாறுபட்டவை. நவீன இயற்பியலையும், குவாண்டம் இயற்பியலையும் முழுமையாக ஏற்றுக் கொண்டவன் நான். அதனால் கடவுள் மற்றும் அமானுஷ்ய சக்திகள் பற்றிய என் கருத்துகளுக்கு அறிவியல் சார்ந்த ஒரு விளக்கத்தை எப்போதும் தேடிக் கொண்டிருப்பவன். இன்று எனக்குக் கிடைக்கும் ஒரு விளக்கம், நாளை வேறு ஒன்றாகத் தன்னைப் புதுப்பித்துத் திருத்திக் கொள்ளலாம். அறிவியலுக்கும், மத நம்பிக்கைகளுக்குமிடையில் நூலிழை வித்தியாசம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. எத்தனை ஆயிரம் வருடங்களானாலும், தன்னைப் புதிப்பித்துக் கொள்ளாமல் மத நம்பிக்கைகள் மாறாமல் இருக்க, அறிவியல் தன்னை அந்தந்தக் கணத்திலேயே புதுப்பித்துக் கொள்கிறது. பூமி தட்டையல்ல உருண்டை என்பதிலிருந்து, புளூட்டோ சூரியனைச் சுற்றும் ஒன்பது கிரகங்களில் ஒன்றல்ல என்பதுவரை, தன்னைப் புதுப்பிக்க அது தயங்கியதே இல்லை.

அறிவியல் ஆராய்ச்சிகளில் அவற்றுக்கென, இறுதியில் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க முடியவில்லையென்றால், கணிதச் சமன்பாடுகளை முன்வைத்து, இயற்பியல் விதிகளுக்கமைய, தர்க்க ரீதியான ஒரு முடிவை எடுத்துக் கொள்வார்கள். அதை உலக விஞ்ஞானிகளின் மத்தியில் சமர்ப்பித்து, பல கோணங்களில் சரி பார்த்துக் கொள்வார்கள். அதன் பின்னர் அதை ஒரு அறிவியல் கோட்பாடாக வெளியிடுவார்கள். கோட்பாடுகள் (Theory) என்பவவை முடிந்த முடிவுகளல்ல. ஆனால் பல இறுதி முடிவுகளை எடுப்பதற்கு முன்னோடிகளாக இருப்பவை. நவீன இயற்பியலில், குறிப்பாக குவாண்டம் இயற்பியலில், அறிவியல் முடிவுகள் கோட்பாடுகளகவே அதிகளவில் காணப்படுகின்றன. கோட்பாடுகளும் ஒரு விதத்தில் மத நம்பிக்கை போன்றவைதான். இருக்கின்றன என்பது போலக் கூறிக்கொள்ளும் ஆனால் இருப்பதாக நிரூபிக்க முடியாது. இந்தப் புள்ளியில்தான், நான் மேலே சொன்னது போல, மத நம்பிக்கைகளும், அறிவியல் கோட்பாடுகளும் தங்களை மாற்றிக் கொள்ளும் விசயத்தில் வித்தியாசப்படுகின்றன.

அதுசரி, இதையெல்லாம் இப்போது சொல்லி, நான் ஏன் உங்களை அறுக்கிறேன் என்றுதானே யோசிக்கிறீர்கள்? சொல்கிறேன்……….!

அறிவியல் ஒருபுறமும், நம்பிக்கை மறுபுறமும் இருக்க, இவையிரண்டுக்கும் இடையில் ‘மிஸ்டரி’ என்று சொல்லப்படும் மர்மங்கள், இந்த இரண்டு பக்கங்களும் சாராமலும், சார்ந்து கொண்டுமிருந்து நம்மை மிரட்டி வருகின்றன. சமீபத்தில் என்னால் வெளியிடப்பட்ட இரண்டு புத்தகங்களும் இந்த மிஸ்டரி வகையானவையே! மிஸ்டரி வகை மர்மங்களைப் பற்றிச் சொல்லும் போது, நான் மூடநம்பிக்கைகளை விதைப்பதாகச் சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இந்த மிஸ்டரிகளிலும் அறிவியல் தண்மை பொதிந்திருப்பதை நான் பல சமயங்களில் அவதானித்திருக்கிறேன். அறிவியல் சார்ந்து இவற்றுக்கான விளக்கங்களையும் புரிந்து கொண்டிருக்கிறேன். அந்த விளக்கங்கள் அனைத்தும் குவாண்டம் இயற்பியலின் கோட்பாடுகள் சார்ந்ததாகவே இருந்திருக்கின்றன. இப்படி நான் புரிந்து கொண்டவற்றை, ஒரு அறிவியல் பக்கத்தை உருவாக்கி, அதனூடாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். அதற்கான ஆதரவு உங்களிடமிருந்து தொடர்ந்து கிடைக்கும் வரை, என் பகிர்வுகளும் தொடர்ந்து கொண்டே செல்லும்.

இந்த மிஸ்டரிகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மேற்குலகில் வினோதமான முறையில் நடைபெறும் சம்பவங்கள் எவையாயினும், அவை பத்திகைகள், தொலைக்காட்சிகள் என அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்து, மக்கள் மத்தியில் பரவுகின்றன. ஆனால் நம் நாடுகளில் இவற்றிற்கென எந்தச் சந்தர்ப்பங்களும் அமையாமல், உலகில் நடந்த பல முக்கிய சம்பவங்களைத் தெரிந்து கொள்ளாமல் தவறவிடுகிறோம். இப்படி நாம் தவறவிட்டவை ஏராளம். இவற்றில் உண்மைகள் இருக்கின்றனவா? இல்லையா? என்பது ஒருபுறமிருக்க, ‘இப்படியெல்லாம் இருக்கின்றன’ என்று நாம் அறிந்திருக்க வேண்டுமல்லவா?

இன்றும் ஒரு மிஸ்டரி வகை மர்மத்துடன் என் பதிவுகளை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் ரெடிதானே!

ஸ்பெயின் நாட்டில் ‘பெல்மேஷ்’ (Belmez) என்றொரு கிராமம் இருக்கிறது. மிகவும் அமைதியான ஒரு கிராமம் அது. ஆனால், இந்த அமைதியெல்லாம் 1971ம் ஆண்டு வரைதான். 1971ம் ஆண்டு பெல்மேஷ் கிராமத்தில் இருந்த ஒரு வீட்டில் திடீரென நடந்த தொடர் சம்பவங்களால் அந்தக் கிராமமே கிலி பிடித்தால் போல மாறிவிட்டது. எங்கே இருக்கிறது என்று யாருக்குமே தெரியாத பெல்மேஷ் கிராமத்தைப்பற்றி உலகமே பேச ஆரம்பித்த சம்பவங்கள் அவை.

1971ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி, பெல்மேஷ் கிராமத்தில் ‘Calle Real’ என்னும் தெருவில் அமைந்த 5ம் நம்பர் வீட்டில் வசித்து வந்த பெண்மணியான மரியா கொமேஷ் (Maria Gomez), சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த பொழுது, தற்செயலாகச் சமயலறையின் நிலத்தைப் பார்க்க நேர்ந்தது. அங்கு தெரிந்தது என்னவென்று முதலில் அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. சற்று உற்றுக் கவனித்த போதுதான் ‘அட! இது ஒரு பெண்ணின் உருவமல்லவா?’ என்று மனதுக்குள் தோன்றியது. லேசாக ஒரு பயமும் தொற்றிக் கொண்டது. நிலத்தில் தெரிந்த படம் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. ரொம்பவும் மங்கலாகத் தெரிந்தது. ‘சரி, இதைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம். இப்படிச் சில சமயங்களில் சுவர்களிலும், முகில்களிலும் உருவங்கள் போல தெரிவதாக நாம் நினைத்துக் கொள்வதில்லையா? அதுபோல ஒன்றுதான் இது!’ என்று அலட்சியப்படுத்திவிட்டுப் படுக்கச் சென்றுவிட்டார். ஆனால், மறுநாள் எழுந்து வந்து சமையலறையைப் பார்த்தவருக்கு நடுக்கமே வந்துவிட்டது. நேற்றுப் பார்க்கையில், மிகவும் மங்கலாகச் சில கோடுகளால் வரையப்பட்டிருந்த ஒரு பெண்ணின் முகம், இன்று நல்ல தெளிவான முகமாக மாறியிருந்தது. அலறியடித்தபடி கணவனையும், மகனையும் அழைத்துக் காட்டிய போது, அவர்களும் கொஞ்சம் நிலைகுலைந்துதான் போனார்கள். ஆம்! மரியா கொமேஷ் அவர்களின் வீட்டின் சமையலறைத் தரை நிலத்தில், வித்தியாசமான வடிவத்தில் உள்ள பெண்ணொன்றின் முகம் வரையப்பட்டிருந்தது. வரையப்பட்டிருந்தது என்றால், சாதாரணமாக நாம் வரைவது போல சாயங்களைப் பயன்படுத்தியோ, வரையும் ஏதாவது கருவிகளைப் பயன்படுத்தியோ கிடையாது. ஒரு சாதாரண சீமெந்து நிலத்தில் ஏற்படும் கீறல்கள், வெடிப்புகளால் சில உருவங்கள் போல நமக்குத் தெரியுமே, அது போல வரையப்பட்டிருந்தது. ஆனால் மிகத் தெளிவாக ஒரு பெண்ணின் முழுமையான முகத்தின் படம். கணணி மூலமாக ஏற்படுத்தப்படும் விசேச எஃபக்டுகள் (Effect) போல, மிக மங்கலாகத் தெரிய ஆரம்பித்துப் பின்னர் படிப்படியாக முழுமையாய் வரைந்தது போல மாறும் படம். இப்படி மாறுவதற்குச் சில நாட்கள் எடுக்கும்.

வழக்கம் போல, ‘இதை யாரோ வரைந்துவிட்டுத் தங்களுடன் விளையாடுகிறார்களோ?’ என்றே மரியாவும், அவரது குடும்பத்தினரும் நினைத்தார்கள். அப்போதுதான் அடுத்த ஆச்சரியம் ஆரம்பித்தது. எப்படி இந்தப் படம் மங்கலாகவிருந்து பின்னர் தெளிவான படமாக மாறியதோ, அதேபோல, தெளிவாக இருந்த முகம் மீண்டும் மங்கலாக மாறத் தொடங்கி அப்படியே மறைந்தும் போனது. ‘அப்பாடா!’ என்று நினைத்தவர்களுக்கு அடுத்த நாளே, மேலுமொரு இடி காத்திருந்தது. அதே சமையலறையின் தரையில் வேறொரு படம் தோன்ற ஆரம்பித்தது. மரியாவின் கணவர் யுவான் பெரைராவும் (Juan Pereira), மகனும் திகைத்துப் போனார்கள். இந்தப் படமும் படிப்படியாகத் தெளிவான படமாக, கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மாறியது. யாரோ வரைந்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் என்று கொஞ்சம் சமாதானமாக இருந்தவர்களுக்கு இது கிலியையே ஏற்படுத்தியது. இப்படியானதொரு அதிசயத்தை, இல்லை.. இல்லை… அதிசயமே கிடையாது. இப்படியானதொரு பயங்கரத்தை அவர்கள் இதுவரை பார்த்ததேயில்லை.

பெரைராவும், மகனும் என்ன செய்வதென்று யோசித்தார்கள். ஊரில் யாரிடமும் சொல்லிப் பிரச்சனையை ஏற்படுத்த விரும்பவில்லை. கடப்பாரை ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அப்படியே, சமையலறை நிலத்தின் சீமெந்துத் தரையை உடைத்து வெளியே எறிந்தார்கள். புத்தம் புதிதாக ஒரு தரையை அங்கு அமைத்தார்கள். முடிந்தது கதை. கையைத் தட்டிவிட்டுச் சந்தோசமாகச் சென்று உறங்கினார்கள். அடுத்த நாள், அதற்கு அடுத்தநாள் என்று எதுவும் நடக்கவில்லை. ‘சரி, அந்தப் பழைய சீமெந்துத் தரையில்தான் ஏதோ கோளாறு. அந்தச் சீமெந்துக் கலவையில் உள்ள பிரச்சனையால்தான் இந்த உருவங்கள் தோன்றியிருக்கின்றன. தற்செயலாக அவை மனித முகங்கள் போலக் காட்சியளித்திருக்கின்றன’ என்று மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். மகிழ்ச்சி அடுத்தநாள் வரைக்கும்தான். புதிய சீமெந்துத் தரையில் மீண்டும் புதிய முகங்கள். பயந்தே போனது பெரைரா குடும்பம். திட்டவட்டமாக, ‘இது பேய்தான்’ என்ற முடிவுக்கே வந்தது அந்தக் குடும்பம். மெல்ல மெல்ல ஊருக்குள் கதை பரவ ஆரம்பித்தது. வீட்டை நோக்கிப் படையெடுத்தனர் மக்கள். எப்போதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த வீட்டில் நடக்கும் அதிசயத்தைப் பார்க்க ஆரம்பித்தார்கள். யார் வந்தாலும், யார் பார்த்துக் கொண்டிருந்தாலும், படங்கள் தோன்றுவதும் மறைவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன.

பயந்து போன பெரைரா ஊர் மேயரிடம் சென்று, ‘தங்களை இந்தச் சிக்கலிலிருந்து காப்பாற்றும்படியும், இந்தப் படங்கள் தோன்றுவதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்கும்படியும்’ கேட்டுக் கொண்டார். பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவணங்கள் என மரியா வீடே கலேபரமானது. நம்மூர்ப் பேய்கள் போல இல்லாமல்,  பெல்மேஷ் பேய் கள் கொஞ்சம் வித்தியாசமானவையாக இருந்தன. நம்முர்களில் பேய்கள் இருக்கின்றன என்று பத்திரிகைகளோ, தொலைக்காட்சிகளோ அந்தக் குறித்த இடத்துக்குச் சென்று அந்த இரவு தங்கி ஆராயும் போது, பேய்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு அந்தப் பக்கமே எட்டிப்பார்க்காது. ஆனால் பெல்மேஷ் பேய்களுக்கு, இந்த ஊடகத்தினரைக் கண்டு பயமே இருக்கவில்லை. அவர்கள் இருக்கும் போதே முகங்கள் தோன்றியது நடந்தது. இது மிகவும் வினோதமாகவும் தெரிந்தது. தெளிவாக அனைத்தையும் படம்பிடித்துக் கொண்டனர். வீட்டிற்கு பார்வையாளர்களாக வரும் பொது மக்களில் பலரும் போட்டோக்களை எடுத்துத் தள்ளினர். இது தொடர்ச்சியாக நடந்தபடியே இருந்தது. எவ்வளவு காலத்துக்கு நடந்தது தெரியுமா? முப்பது வருடங்களுக்கு மேலாக நடந்தது.

தனது 85வது வயதில், 2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மரியா கொமேஷ் அவர்கள் இறக்கும்வரை, அந்த வீட்டின் தரையெங்கும் முகங்கள் தோன்றிக் கொண்டேயிருந்தன. சமையலறையில் ஆரம்பித்து, வீட்டின் பல இடங்களிலும் முகங்கள் முகங்கள் முகங்கள்தான். இதனாலேயே இந்த மர்மச் சம்பவத்திற்கு ‘The Faces of Belmez’ என்ற பெயரும் வந்தது. ஆண்கள், பெண்கள் ஆகிய இரண்டு முகங்களும் மாறி மாறித் தோன்றின. சமயங்களில் கூட்டமான முகங்களும் தோன்றின. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முக பாவனைகள் அந்த முகங்களில் தெரியும். பலவித உணர்ச்சிகளை அந்த முகங்கள் வெளிப்படுத்தின. தொடர்ச்சியாக அந்த வீட்டில் முகங்கள் தோன்றியதாலும், தன் சொந்த வீட்டைவிட்டு வேறு எங்கும் போக விருப்பமில்லாததாலும், அங்கேயே இருந்தார் மரியா. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் பின்னர் அதுவே பழகிவிட்டிருந்தது. ஆனால், ஒரேயொரு நிம்மதி மட்டும் இருந்தது. படங்கள் தோன்றுவது மட்டும்தான், வேறு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இது பற்றிப் பேசிப்பேசி ஓய்ந்துபோயின. 30 வருடங்கள் அதே செய்தியைத் திருப்பித் திருப்பி போடுவதில் என்ன இருக்கு சொல்லுங்கள்? ஆனால், நீங்கள் நினைக்கும் விசயமும் நடந்தது. இந்தச் சித்திரங்களைப் பெரைரா குடும்பத்தில் ஒருவரே வரைந்துவிட்டு, உலகை ஏமாற்றுகிறாரோ என்றும் நினைக்கத் தொடங்கினார்கள் சிலர். அறிவியல் ஆராய்ச்சிகளும் ஒருபுறம் ஆரம்பித்தன.

சித்திரங்களின் இருந்த இடங்கள் சுரண்டப்பட்டு இரசாயனச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. பேரியம், காரீயம், குரோமியம், செம்பு, பொஸ்பரஸ் போன்றவற்றின் கலவை அதில் காணப்பட்டன என்று பதிலும் வந்தது. மரியாவை ‘லை டிடெக்டர்’ என்னும் பொய் அறியும் கருவி கொண்டும் ஆராய்ந்தார்கள். ஆனால் மரியா சொன்னது அனைத்தும் உண்மைதான் என்றே முடிவு வந்தது. தடயவியலாளர்கள், மனவியல் மருத்துவர்கள் என அனைவரும் படையெடுத்தனர். அனைத்துச் சோதனைகளுக்கும் பெரைரா குடும்பம் ஒத்துழைத்தது. யாராலும் சரியான உண்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையொட்டிப் பலவித விவாதங்கள் ஸ்பெய்ன் நாடெங்கும் நடைபெற்றன. வழமை போலச் சொல்லப்படும் காரணங்கள் அனைத்தும் சொல்லப்பட்டன. மேலே சொல்லப்பட்ட கலவைகளை மிகச் சரியான விகிதங்களில் கலந்து சீமெந்தில் பூசினால், அப்படி வரைந்த படம் உடன் தெரியாது என்றும், படிப்படியாக தெரிய ஆரம்பிக்கும் என்றும், பின்னர் தானாக மறைந்துவிடும் என்றும் சொன்னார்கள். இப்படிப் படங்கள் தோன்றுவதற்கு என்ன விதமான காரணங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறார்களோ, அவ்வளவு காரணங்களையும் சொன்னார்கள். சிலர் ஒருபடி மேலே போய், மனதின் உள்ளே நினைக்க வெளியே படங்களை உருவாக்கக் கூடிய Thoughtography என்னும் சக்தி மரியாவுக்கு உண்டு என்றும், அதன் மூலமாகத்தான் அவர் இந்தச் சித்திரங்களை வரைகிறார் என்றும் சொன்னார்கள். எல்லாமே சொன்னார்கள், எதற்கும் ஆதாரமிருக்கவில்லை. அனைவருமே தங்கள் கல்வியின் மேன்மையை வைத்து ஒவ்வொரு விதமான கருத்தைச் சொல்வார்கள். ஆனால் பெரும்பாண்மையான மக்கள் இதை, ஒன்று அல்லது பல அமானுஷ்ய சக்திகள்தான் உருவாக்குகின்றன என்று திடமாக நம்பினார்கள். பேய்கள் போன்ற அமானுஷ்ய சக்திகள்தான் இவற்றை உருவாக்குகின்றன என்னும் பக்கத்திலிருந்தும் ஆராய்ச்சிகள் நடந்தன. இந்த வீடே 500 வருடங்களுக்கு முன்னர் சவக்காடாக இருந்த இடத்தின் மேல்தான் கட்டப்பட்டிருக்கிறது என்றும், தோன்றும் உருவங்கள் அங்கு புதைக்கப்பட்டவர்களின் உருவங்கள்தான் என்றும் புதியதொரு காரணத்தைக் கண்டுபிடித்துச் சொன்னார்கள்.

சொல்லப் போனால் அறிவியலையே கொஞ்சம் ஆட்டிவைத்த நிகழ்வுதான் இது. என்ன காரணம் சொல்வதென்று தெரியாமல் கண்டமேனிக்கு, இந்த பெல்மேஷ் முகங்களுக்கான காரணம் சொன்னது போலத்தான் இருந்தது. மரியா கொமேஷ் பொய் சொல்லும் பெண்மணி கிடையாது என்று ஆராய்ச்சி செய்தவர்கள் உட்பட அனைவரும் அடித்துச் சொன்னார்கள். அப்படியென்றால், நடந்த உண்மைதான் என்ன? மரியாவின் மகன்தான் அந்தப் படங்களை வரைகிறான் என்று வைத்துக் கொண்டாலும். ஐரோப்பாவில் ஒரு வீடு என்பது மிக விலையுயர்ந்த சொத்து. அப்படியான பெறுமதியான ஒன்றைப் பேய் இருக்கிறது என்று சொல்லி யாரும் வாங்காமல் போகும் நிலைக்கு, அந்த வீட்டில் உள்ளவர்களே ஆக்குவார்களா என்பது ஒரு பெரிய கேள்வியாக இருந்தது. தன்னுடைய வீட்டில் தானே படங்களை வரைந்து பேய் இருக்கிறது என்று காட்டினால், யார் வாங்குவார்கள் அந்த வீட்டை? யாருக்கு அதனால் நட்டம்? அத்துடன் சீமெந்துத் தரையில் உள்ள சீமெந்துக் கலவைத் துகள்களில் பல இரசாயனங்களைக் கலந்து விசித்திரமான வகையில் படம் வரையத் தேர்ந்த ஒரு சித்திரக் கலைஞனாகவுமல்லவா இருக்க வேண்டும்.

இந்த நிகழ்வு ஸ்பெயினை மட்டுமல்ல, ஐரோப்பாவை ஏன் உலகையே உலுக்கி வைத்த ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு நடந்த எதுவும் ஒளித்தோ, மறைவுகளிலோ நடந்தவையல்ல. அந்த வீட்டில் தங்கியிருந்து ஆராய்ந்து பார்த்த நேரடி சாட்சிகள் உள்ள உண்மை நிகழ்வு. நிகழ்வுகளுக்கான காரணங்களைத் தேவையெனின் நாம் ஆராயலாம். ஆனால், நடந்த நிகழ்வுகள் அனைத்தும் உண்மையானவை. எந்த ஒரு கட்டுக்கதைகளும் கலக்காதவை. நேரடியாகக் கண்முன்னே நடந்தவை. இந்த நிகழ்வுகளின் உண்மைத்தண்மைக்கு பெல்மேஷ் மக்களும், அந்த நகரத்தின் முனிசிபல் அதிகாரிகளும் ஆதரவாகவே இருந்தனர்.

2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மரியா கொமேஷ் அவர்கள் இறந்து போனார்கள். அத்துடன் அந்த வீடு முழுமையாகத் திருத்தப்பட்டு, அவரின் மகன் புது வீட்டில் குடியேறினார். அத்துடன் எல்லாம் முடிந்து போனது என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் புதிய வீட்டில் ‘புதிய பெல்மேஷ் முகங்கள்’ மீண்டும் தோன்ற ஆரம்பித்தன. யாரிடமிருந்து என்ன அறிவித்தல் வந்ததோ தெரியவில்லை. பத்திரிகைகள் அந்தச் செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்தன. 2004ம் ஆண்டு EL Mundo என்னும் பிரபலமான பத்திரிகை, “பெல்மேஷின் முனிசிபல் ஆட்சியே இதை ஆட்கள் வைத்துச் செய்கிறது” என்று அபாண்டமான பழியைச் சொல்லிக் கட்டுரையொன்று வெளியிட்டது. அத்துடன் அனைத்தும் பொய்யென்றாகிப் போனது. பெல்மேஷ் முகம் பொலிவிழந்து போனது.

இறுதியில் ஏதோ ஒரு காரணத்தையொட்டி, ” இந்த உண்மைகளும் மறைக்கப்பட்டன………”

-ராஜ்சிவா-