விண்வெளியில் கருந்துளை – அண்டமும் குவாண்டமும் (பகுதி 2)

விண்வெளியில் கருந்துளை – அண்டமும் குவாண்டமும் (பகுதி 2)


பூமியில் இருந்துகொண்டு, தலையை உயர்த்தி மேல் நோக்கி நாம் பார்க்கும் போது, இரண்டு விதமான வானங்களைப் பார்க்கின்றோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பகலில் நாம் காணும் நீல வானமும், இரவில் நாம் காணும் கருப்பு வானமும் வேறு வேறானவை என்ற உண்மையை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? பலர் இந்த வித்தியாசத்தைத் தங்கள் வாழ்நாளில் புரிந்து கொண்டதே இல்லை. தலைக்கு மேலிருக்கும் வானம்தானே என்று, அது பற்றிக் கொஞ்சமும் சிந்திக்காமல் அலட்சியமாக விட்டுவிடுகிறோம் நாம். உண்மையைச் சொல்லப் போனால், இரவு வானத்துக்கும், பகல் வானத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் மண்ணுக்கும், மலைக்கும் இடையே உள்ள வித்தியாசம். ஆங்கிலத்திலும், தமிழிலும் ‘Sky’ மற்றும் ‘வானம்’ ஆகிய சொற்களை இரவு, பகல் இரண்டு வானங்களையும் குறிப்பதற்கு, ஒரே சொல்லாகப் பயன்படுத்துகிறோம். ஆனாலும், நாம் பகலில் பார்க்கும் வானம் பூமியிலிருந்து வெறும் 300 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கிறது. இரவு வானமோ பல லட்சம் ஒளிவருடங்கள் தூரம் வரை செல்கிறது. நம் பூமி, தனக்கென உருவாக்கி வைத்திருக்கும் பாதுகாப்புக் கவசமான அட்மாஸ்பியரில் (Atmosphere), சூரிய ஒளி தெறித்துச் சிதறும் பரப்பையே நாம் ‘வானம்’ (Sky) என்கிறோம். அந்த நீலநிற வானத்தினூடாக மேலே நம்மால் சூரியனையும், சந்திரனையும், சில கோள்களையும் தவிர வேறு எதையும் பார்க்க முடிவதில்லை. இதெல்லாம் சூரிய ஒளி இருக்கும் வரைதான். சூரிய ஒளி மறைந்து இருட்டானதும் நாம் பார்ப்பது விண்வெளியை (Space). விண்வெளியில் பல ஆயிரம் ஒளிவருடங்களுக்கு அப்பால் உள்ளவற்றைக் கூட, நம் வெற்றுக் கண்களால் பார்க்க முடிகிறது.

நம் கண்களுக்குத் தெரியும் விண்வெளி, முழுமையான அண்டத்தின் (Universe) மிகச் சிறிய ஒரு பகுதிதான். அண்டமென்பது மிகப்பெரியது. கிட்டத்தட்ட 92 பில்லியன் ஒளிவருடங்கள் பரந்து விரிந்திருப்பது. இன்னும் விரிந்து கொண்டே இருப்பது. இங்கு ஒளிவருடம் என்றால் என்ன என்ற கேள்வி சிலருக்கு வரலாம். ஒளியானது ஒரு செக்கனில் 300000 கிலோமீட்டர்கள் தூரத்துக்கு பயணம் செல்லக் கூடியது. அவ்வளவு வேகம். அண்டத்திலேயே மிகை வேகத்துடன் செல்லக் கூடிய ஒன்று ஒளிதான். இதுவரை உள்ள அறிவியலின்படி, ஒளியை மிஞ்சி எதுவுமே வேகமாகச் செல்ல முடியாது. சரியாகக் கவனியுங்கள் இந்த ஒளியானது ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் செல்லும். அப்படியாயின் இது நிமிடத்துக்கு எவ்வளவு தூரம் செல்லும், மணிக்கு எவ்வளவு தூரம் செல்லும், அப்படியே ஒரு வருடத்துக்கு எவ்வளவு தூரம் செல்லும் என்று பார்க்கும் போது கிடைக்கும் கிலோ மீட்டர்களின் அளவுதான் ஒரு ஒளிவருடம். நீங்களே ஒரு பேனாவை எடுத்துப் பெருக்கிப் பாருங்கள். அப்படி 92 பில்லியன்கள் ஒளிவருடங்கள் தூரத்துக்கு அகண்டிருக்கிறது நம் பேரண்டம். கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவு இது. நாம் வாழும் பூமியோ வெறும் 12750 கிலோமீட்டர்கள் அகலமானது. அண்டத்துடன் ஒப்பிடும் போது பூமி ஒன்றுமேயில்லை. உங்கள் வலதுகையை நீட்டி, சுட்டுவிரலால் வானை நோக்கி சுட்டிக்காட்டுங்கள். உங்கள் விரல் சுட்டிக்காட்டும் அந்தச் சின்னஞ் சிறிய பகுதியில் மட்டும் பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அண்டம் எவ்வளவு பெரிது என்பது இப்போது புரிகிறதல்லவா? இந்த அண்டத்தில் பூமியைப் போன்ற கோள்கள், சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் மட்டுமில்லாமல், வேறு பலவும் இருக்கின்றன. காலக்ஸிகள் (Galaxies), நெபுலாக்கள் (Nebulas), க்வேஸார்கள் (Quasars), பல்சார்கள் (Pulsars) என்று பல விதமானவை இருக்கின்றன. இதில் ஒன்றுதான் கருந்துளைகள் (Blackholes). இந்தக் கருந்துளைகள் பற்றித்தான் நாம் கடந்த பதிவில் பார்க்க ஆரம்பித்தோம். கருந்துளை என்பது பற்றிச் சொன்ன போது, ‘நிகழ்வு எல்லை’ (Event Horizon) என்ற கருந்துளையின் நுழைவாயிலைப் பற்றியும் சொல்லியிருந்தேன். இதை வைத்து ஸ்டீபன் ஹாக்கிங்கும், லெனார்ட் சஸ்கிண்டும் நடத்தும் யுத்தம் பற்றியும் சொன்னேன். இனி இவற்றைப் பற்றி விரிவாக, விளக்கமாக நாம் பார்க்கலாம்.

 

விண்வெளி என்பது நாம் நினைப்பது போல, முப்பரிமாண வடிவத்தில் உள்ளதல்ல. தட்டையானது. அலையில்லாத ஒரு கடலில் நீரின் மேற்பரப்பு எப்படிப் பரந்து விரிந்து காணப்படுகிறதோ, அப்படித்தான் விண்வெளியும் இருக்கும். கடலின் மேற்பரப்பு நீரால் ஆனது போல, விண்வெளியும் மெல்லிய சவ்வு போல, அதாவது ஒரு பலூனின் மென்சவ்வு போலக் காணப்படும். இந்த விண்வெளியின் மேற்பரப்பில்தான், நான் மேலே சொன்ன நட்சத்திரங்கள். காலக்ஸிகள், நெபுலாக்கள், க்வேஸார்கள், கருந்துளைகள் என அனைத்தும் இருக்கின்றன. நீரின் மேற்பரப்பில் பூக்களைத் தூவிவிட்டால் எப்படி அந்த மேற்பரப்பில் பூக்கள் மிதந்து கொண்டிருக்குமோ, அப்படி இவையெல்லாம் விண்வெளியில் காணப்படுகின்றன. விண்வெளியில் காணப்படும் இவை சாதாரணமானவை அல்ல. மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய எடையைக் கொண்டவை. அவற்றின் எடைக்கு ஏற்ப, விண்வெளியின் மேற்பரப்பும் கீழ் நோக்கி அமிழ்ந்திருக்கும். ஒரு பலூனை விரல்களால் அழுத்தும் போது ஏற்படும் வட்டவடிவப் பள்ளம் போல அவை அமிழ்ந்திருக்கும். இப்படித்தான் கருந்துளையும் விண்வெளியில் அமைந்திருக்கிறது. கருந்துளையானது ‘நிகழ்வு எல்லை’ (Event Horizon), ‘ஒருமை’ (Singularity) என்று இரண்டு மிக முக்கிய பகுதிகளைக் கொண்டது. நிகழ்வு எல்லையை மேல்பகுதியிலும் சிங்குலாரிட்டி என்று சொல்லப்படும் மிகச்சிறிய மையப்பகுதியைக் கீழ்ப்பகுதியாகவும் கொண்டு, ஒரு கூம்பு (Cone) வடிவத்தில் விண்வெளியின் மேற்பரப்பை கீழ்நோக்கி அமிழ்த்தியவாறு கருந்துளை காணப்படும். கருந்துளைக்கு இந்தக் கூம்பு வடிவம் எப்படி வந்தது என்று விளக்குவது கொஞ்சம் சிரமம் என்றாலும், அதையும் நாம் பார்த்துவிட வேண்டும். அதற்கு கருந்துளையாகும் ஒரு நட்சத்திரத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.


விண்வெளியில் நெபுலாக்கள் (Nebula) வாயுக்களையும் (Gas), தூசுகளையும் (Dust) அடர்த்தியாகக் கொண்டிருக்கும். இது ஒரு காலக்ஸியின் அளவுக்கு பிரமாண்டமானதாகக் காணப்படும். இந்த வாயுக்களும், தூசுகளும் ஈர்ப்பு விசையினால் ஒன்று சேர்வதால், அங்கு ஒரு குழந்தை நட்சத்திரம் பிறக்கும். குழந்தை நட்சத்திரங்களை சினிமாக்களில் மட்டும் பார்த்த உங்களுக்கு, இதைக் கேட்க கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கும். இந்தக் குழந்தை நட்சத்திரம் படிப்படியாக வளர்ந்து ஒரு முழு நட்சத்திரமாகிறது. இப்படி லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் நெபுலாக்களின் மூலம் தினம் தினம் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு நொடியும் விண்வெளியில் நட்சத்திரங்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன. இயற்கை என்பது எப்போதும் தனக்குள் ஒரு வட்டத்தை வைத்திருக்கிறது. இந்த வட்டத்தின் மூலம்தான் அது தன் சமநிலையையும் பாதுகாத்துக் கொண்டுவருகிறது. ஒருபுறம் நட்சத்திரங்கள் பிறந்து கொண்டிருக்க, மறுபுறம் நட்சத்திரங்கள் வயதாகி இறந்து கொண்டிருப்பது நடக்கும். பிறப்பதும் இறப்பதும் மனிதனுக்கு மட்டுமில்லை, நட்சத்திரங்களுக்கும் இருக்கிறது. அது மட்டுமில்லாமல், ஒரு நட்சத்திரம் இறக்கும் போது, ஏற்படும் பிரமாண்ட வெடிப்பின் மூலம் நெபுலாக்களும் உருவாகின்றன. நட்சத்திரங்கள் நெபுலாக்களில் பிறக்கின்றன. நட்சத்திரங்கள் இறந்து நெபுலாக்களை உருவாக்குகின்றன. இது ஒரு அழகான வட்டம் இலையா? நட்சத்திரங்கள் நெபுலாக்களில் பிறப்பது என்பது ஒரு அழகான நிகழ்வு. அதைத் தெரிந்து கொள்ளும் போது உண்மையில் மகிழ்ச்சியடைவீர்கள். ஆனால் இந்தக் கட்டுரையில் அது பற்றி நான் எழுதப் போவதில்லை. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். ஆனால் நட்சத்திரம் ஒன்று இறப்பது பற்றி இங்கு நான் விவரித்தே ஆகவேண்டும். காரணம் ஒரு நட்சத்திரத்தின் இறப்பின் உபநிகழ்வாகத்தான் கருத்துளை ஒன்றின் பிறப்பும் நடைபெறுகிறது.

விண்வெளியில் முக்கியமாகச் சொல்லக்கூடிய இரண்டு விதமான திடப்பொருட்கள் உண்டு. ஒன்று எரிந்து கொண்டிருக்கும் திடப்பொருள். மற்றது எரியாமல் இருக்கும் திடப்பொருள். எரியாமல் இருப்பவற்றை நாம் கோள்கள் என்கிறோம். நம் பூமியும் ஒரு கோள்தான். இவற்றுடன் துணைக்கோள்கள் என்று சொல்லப்படும் சந்திரன்களும் உண்டு. ஆனால் எரிந்து கொண்டிருப்பவற்றை நட்சத்திரம் என்கிறோம். பூமிக்கு மிக அண்மையில் இருக்கும் நட்சத்திரம் நம் சூரியன்தான். சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதைப் பலர் சிந்திப்பதேயில்லை. நம் சூரியன், பால்வெளிமண்டலம் (Milkyway Galaxy) என்னும் நட்சத்திரக் கூட்டத்தில் ஒரு நட்சத்திரமாக இருக்கிறது. இந்தப் பால்வெளி மண்டலத்தில் மட்டும் 200 முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன என்று குத்துமதிப்பாகக் கணித்துள்ளனர். எப்படிப் பார்த்தாலும் 300 பில்லியன்களுக்குக் குறையாது. சமீபத்தில் ஜேர்மனில் எடுக்கப்பட்ட கணிப்பின்படி மில்க்கிவே காலக்ஸியைப் போல, 500 பில்லியன் காலக்ஸிகள் அண்டத்தில் இருக்கின்றன. இப்போது சிந்தித்துப் பாருங்கள் அண்டத்தில் மொத்தமாக எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று. நட்சத்திரங்கள் அனைத்தும் அவற்றின் பருமனைப் பொறுத்து வேறுபடுகின்றன. சூரியன் நம்முடன் தொடர்புபட்டிருப்பதால், ஏனைய நட்சத்திரங்களின் பருமனை சூரியனுடன் ஒப்பிட்டே அளவிடுகின்றனர். நட்சத்திரங்கள் அனைத்துமே என்றாவது ஒருநாள் எரியும் சக்தி தீர்ந்து போகும் போது, இறந்து போகின்றன. அப்படி இறந்து போகும் நட்சத்திரங்கள், அவற்றின் பருமைனைப் பொறுத்து, ‘வெள்ளைக் குள்ள நட்சத்திரமாகவோ (White Dwarf), நியூட்ரான் நட்சத்திரமாகவோ (Neutron Star), கருந்துளையாகவோ (Blackhole), பிரமாண்டக் கருந்துளையாகவோ (Supermassive Blackhole) மாறும். சூரியனைப் போல பருமனில் பத்து மடங்குக்கு இருக்கும் நட்சத்திரங்கள் இறக்கும் போது, ‘சுப்பர் நோவா’ என்னும் நிலையை அடைந்து வெடிப்பதன் மூலம் ‘நியூட்ரான் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. ஆனால் சூரியனின் பருமனை விட நூறு மடங்களவில் இருக்கும் நட்சத்திரங்கள் இறக்கும் போது, ஹைப்பர் நோவா என்னும் நிலையை அடைந்து வெடிப்பதால் கருந்துளைகள் தோன்றுகின்றன. சூரியனைப் போல ஆயிரம் மடங்கு எடையுள்ள நட்சத்திரங்கள் வெடிக்கும் போது, பிரமாண்டக் கருந்துளைகள் உருவாகின்றன. இப்படியொரு பிரமாண்டமான கருந்துளைதான், மில்க்கிவே காலக்ஸியின் நடுவிலும் உள்ளது என்று கண்டுபிடித்திருக்கிறர்கள். சொல்லப் போனால், ஒவ்வொரு காலக்ஸியும் ஒரு பிரமாண்டமான கருந்துளையை மையமாகக் கொண்டு இருக்கும் என்கிறார்கள்.

ஒரு நட்சத்திரம் ஏன் இறக்கிறது. அது இறக்கும் போது சுப்பர்னோவாவாகிப் பெரிதாகி, திடீரென ஏன் வெடிக்கிறது என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அது தெரியும் பட்சத்தில்தான், ஒரு கருந்துளையின் நிகழ்வு எல்லையில் என்ன நடைபெறுகிறது என்பதையும், கருந்துளையின் ஈர்ப்பு சக்தியால் ஒளிகூடத் தப்ப முடியாமல் எப்படி உள்ளே இழுக்கப்படுகிறது என்பதையும், இந்தக் கட்டுரையின் முதலாம் பகுதியின் இறுதியில் நாம் விட்டுச் சென்ற கேள்விகளுக்கான பதில்களையும் விளங்கிக் கொள்ள முடியும்.

கருந்துளைகளைப் பற்றி ஏதோ ஒரு அறிவியல் செய்தியாக நினைத்து நாம் அறிந்து கொள்ள நினைக்கலாம். ஆனால், கருந்துளைதான் நாங்கள், நாங்கள்தான் கருந்துளை என்னும் நிலைமைக்கு நம்மை நவீன அறிவியல் கொண்டுவந்து விட்டிருக்கிறது. நம் வாழ்வுக்கும் கருந்துளைக்கும் நிறையவே சம்மந்தம் இருக்கிறது என்கிறார்கள். அது என்ன சம்மந்தம் என்பதைப் படிப்படியாக நாம் அறிந்து கொள்வோம்.

(தொடரும்)

-ராஜ்சிவா-

கருந்துளைகள் இருக்கின்றனவா? – அண்டமும் குவாண்டமும் (பகுதி 1)

கருந்துளைகள் (Blackholes) இருக்கின்றனவா? – அண்டமும் குவாண்டமும் (பகுதி 1)

‘குவாண்டம்’, ‘குவாண்டம்’ என்று அறிவியலில் இப்போது அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் அப்படியென்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தாலும் கூட, அதைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், பலருக்குக் குவாண்டம் (Quantum) என்றால் என்னவென்று தெரியாது என்பதுதான் உண்மை. இன்றைய உலகிலும், இனி வரப்போகும் உலகிலும், குவாண்டம் தன் பங்கை முழுமையாகச் செலுத்தப் போகிறது. குவாண்டம் இல்லாமல் இனி எதுவுமே இல்லை என்ற நிலையும் வரப்போகிறது. வரப்போகிறது என்ன, வந்துவிட்டது. எனவே ‘குவாண்டம் என்றால் என்ன?’ என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவர்களாகிறோம். இந்த நிலையில், குவாண்டத்தைத் தமிழில் முடிந்தளவுக்கு ஏன் புரியவைக்கக் கூடாது என்று நினைத்து, அதை ஒரு தொடர் போல எழுதினால் என்ன என்ற முடிவில், ‘அண்டமும் குவாண்டமும்’ என்ற பெயரில் எழுத விரும்புகிறேன். இந்தக் கடுமையான, சிக்கலான அறிவியலை என்னால் முடிந்த அளவுக்கு இலகுவாகவும், எளிமையாகவும் உங்களுக்குத் தரலாம் என்று நினைக்கிறேன். இதற்கு நிச்சயம் உங்கள் ஆதரவு இருக்கும் என்றே நான் நம்புகிறேன். குவாண்டம் என்றால் என்ன? என்னும் அடிப்படைக் கேள்வியிலிருந்து, குவாண்டம் எந்த நிலையில் அண்டத்துடன் சம்மந்தப்படுகிறது? என்பதுவரை ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம். குவாண்டத்தின் மிகச் சிக்கலான ஒவ்வொரு முடிச்சையும், ஒவ்வொரு கட்டுரை மூலம் நாம் அவிழ்த்துக் கொள்ளலாம். இதன் ஆரம்பத்தை, சமீபத்தில் விவகாரமாகப் பேசப்பட்ட ‘கருந்துளை’ பற்றிய கட்டுரையுடன் ஆரம்பிக்கிறேன்.     

- ராஜ்சிவா-

கருந்துளைகள் (Blackholes) இருக்கின்றனவா?

இன்றைய தேதியில், அறிவியலில் பெரும் விவகாரமாகவும், விவாதமாகவும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விசயம், ‘அண்டத்தில் எங்குமே கருந்துளைகள் (Blackholes) இல்லை’ என்பதுதான். நாஸா உட்படப் பல ஆராய்ச்சி நிலையங்களில், விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கான கருந்துளைகளைக் கண்டுபிடித்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், இப்படியானதொரு சந்தேகம், ஆச்சரியத்தையும், குழப்பத்தையும்தான் நமக்கு ஏற்படுத்தும். ஆனால் அவ்வளவு சுலபமாக நாம் இந்தச் சந்தேகத்தைச் சாதாரணமானது என்று சொல்லி ஒதுக்கிவிட்டுச் சென்றுவிட முடியாது. அதற்குக் காரணம், இந்தச் சந்தேகத்தை எழுப்பியுள்ளவர் ஒரு சாதாரணமான ஆளே கிடையாது என்பதுதான். உலக இயற்பியல் வரலாற்றில் மிகமுக்கியமானவரும், நவீன இயற்பியலில் பெயர் பெற்றவரும், கடந்த பல தசாப்தங்களாக கருந்துளைகளைப் பற்றி ஆராய்ந்து வருபவருமான ‘ஸ்டீவன் ஹாக்கிங்’ (Stephen Hawking) என்பவர்தான் இந்தச் சந்தேகத்தையே எழுப்பியுள்ளவர்.


ஆனால், உண்மையில் ஹாக்கிங் சொன்னது வேறு. ‘அண்டத்தில் எங்கும் கருந்துளைகள் இல்லை’ என்று அவர் சொல்லவில்லை. ‘இப்போது நாம் கருந்துளைகள் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அதுபோல போலக் கருந்துளைகள் இருக்காது’ என்று சொன்னார். ‘கருந்துளைகள் இப்படித்தான் இருக்கும் என்று நம்மிடம் ஒரு வரையறை உண்டு. அப்படி நாம் வரையறுத்து வைத்திருப்பது போலக் கருந்துளைகள் இல்லை’ என்றார். இவை மட்டுமில்லாமல், வேறு சில புரட்சிகரமான கருத்துகளையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறார் ஹாக்கிங். ‘கருந்துளைகள் கறுப்பு நிறமாக இருக்காது’ என்றும், ‘அவை சாம்பல் நிறத்தில் இருக்கும்’ என்றும் சொல்லியிருக்கிறார். இவற்றையெல்லாம் ஏதோ ஒரு அனுமானத்தின் மூலம் அவர் சொல்லிவிடவில்லை. பலவிதமான இயற்பியல், கணிதச் சமன்பாடுகளை முன்வைத்துச் சொல்லியிருக்கிறார். இவர் இப்படிச் சொன்னது சக இயற்பியலாளர்களை, குறிப்பாக வானியல் இயற்பியலாளர்களைப் (Astrophysicist) பெரும் குழப்பத்திற்குள் கொண்டு சென்றிருக்கிறது. இவர் சொல்வதை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்ற முடிவுக்குக் கூட இன்னும் யாராலும் வரமுடியவில்லை. இவர் சொல்வது மட்டும் உண்மையாக இருக்குமானால், இதுவரை வானியல் இயற்பியலில் உண்மைகள் என்று நம்பப்பட்டு வந்த பல விசயங்களை மாற்றிக் கொள்ள வேண்டிவரும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை இந்த முடிவுகள். ஆனால், இப்படிப்பட்ட முடிவுகளுக்கான ஆராய்ச்சிகள் நடைபெறுவதற்குக் காரணமாக இருப்பது, இரண்டு பேருக்கிடையில் நடக்கும் போர்தான் என்கிறார்கள். கோபமில்லாமல், வெறுப்பில்லாமல், ஆயுதமற்று, மூளையை மட்டும் மூலதனமாக வைத்து நடக்கும் ஒரு போர் இது. இந்தப் போர் பலவருடங்களாக நடந்துவரும் ஒரு போர். போரில் எதிரெதிராக நின்று அதில் பங்குபற்றும் இருவருமே உலகமகா அறிவியலாளர்கள். பெரும் புத்திசாலிகள். இயற்பியல் விற்பன்னர்கள். அந்த இருவரில் ஒருவர், நான் மேலே சொன்ன ஸ்டீபன் ஹாக்கிங். மற்றவர் ‘லெனார்ட் சஸ்கிண்ட்’ (Leonard Susskind) என்பவர். இந்த சஸ்கிண்ட் என்பவரும் சாதாரணமான ஒருவர் கிடையாது. உலகப் புகழ்பெற்ற ஸ்ட்ரிங் தியரியின் (String Theory) கட்டமைப்பாளர்களில் ஒருவர்.


‘ஊர் இரண்டுபட்டால் யாருக்கோ கொண்டாட்டம்’ என்று சொல்வழக்கு உண்டு. அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், சஸ்கிண்டும் ஹாக்கிங்கும் இரண்டுபட்டதால், இயற்பியல் உலகு, அறிவியல் உலகு, அதிகம் ஏன் ஒட்டுமொத்த உலகிற்கே கொண்டாட்டம்தான். இருவருமே மற்றவர் சொல்வது தப்பு என்று நிரூபிப்பதற்காக ஆவேசமாக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, கணிதச் சமன்பாடுகளை நசித்துப் பிசைந்து பல அறிவியல் உண்மைகளை வெளியிடுகின்றனர். இதில் பிரச்சனைகளும் இல்லாமல் இல்லை. இவர்கள் இருவரில் யார் சொல்வது சரியென்று குழப்பம் மிஞ்சுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், இந்தக் குழப்பங்களைக் கையிலெடுத்துக் கொண்டு, இனிவரும் இளம் விஞ்ஞானிகள் ஆராய ஆரம்பிக்கும் போது சரியான விடைகள் பின்னாளில் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. இப்படியே பேசிக் கொண்டு போனால், இவர்கள் என்ன போர் செய்தார்கள் என்று பார்க்க முடியாமல் போய்விடும். ஆகவே முதலில் எதை முன்வைத்து இவர்களின் போர் நடந்தது என்பதை நாம் பார்க்கலாம்.
இயற்பியலில் (Physics) ‘வானியல் இயற்பியல்’ (Astrophysics) என்பது தற்போது மிக முக்கியமான பிரிவாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் வானியல் ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியா கூட அதில் தன்பங்கை வலிமையுடன் செலுத்த ஆரம்பித்துவிட்டது. விண்வெளிக்கு சாட்லைட்டுகளை அனுப்புவதிலிருந்து, அயல்கிரகங்களுக்கு ராக்கெட்டுகளை அனுப்புவது வரை முன்னேறியாகிவிட்டது. பூமியிலிருந்தே விண்வெளியைப் பெரும் தொலைநோக்கிக் கருவிகளைக் கொண்டு அவதானிக்க ஆரம்பித்துவிட்டோம். அதன் உச்சமாக, சாட்லைட்டுகள் மூலம் தொலைநோக்கிக் கருவிகளை விண்வெளியில் நிறுவி, அங்கிருந்தே விண்வெளியை ஆராயவும் செய்கிறோம். அமெரிக்கா ‘NASA’ என்றும், ஐரோப்பா ‘ESA’ என்றும், இந்தியா ‘ISRO’ என்றும் அமைப்புகளை உருவாக்கி வானியல் ஆராய்ச்சிகளைச் செய்கின்றன. இவையெல்லாவற்றிற்கும் அடிப்படையானது வானியல் இயற்பியல் படிப்புத்தான். மிகப்பெரிய தொலைநோக்கிக் கருவிகள் மூலம், விண்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களை ஆராய்ந்து, இயற்பியல், கணிதவியல் சமன்பாடுகள் மூலம் எடுத்த பல முடிவுகளைக் கொண்டு, நமது அண்டம் உருவாகியது முதல், மனிதன் தோன்றியது வரையுள்ள மொத்த சரித்திரத்தையும் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ‘பிக் பாங்’ என்னும் சிறு புள்ளியின் பெருவெடிப்பின் ஆரம்பத்திலிருந்து, நேற்று சென்னையில் நடந்த அரசியல் மாநாடு வரையிலான தொடர் நிகழ்ச்சிகளுக்கான காரணங்களை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்திப் பட்டியலிடுகிறார்கள்.


இந்தப் பட்டியலின் வரிசையில் இருக்கும் ஒன்றுதான் ‘கருந்துளை’ என்று சொல்லப்படும் ‘ப்ளாக்ஹோல்’ (Blackhole). நமது அண்டத்தின் (Universe) அவிழ்க்க முடியாத பெரும் மர்ம முடிச்சாக இந்தக் கருந்துளை இருக்கிறது. சில புராணங்களிலும், ‘மாயா’ (Maya) போன்ற இனங்களின் சரித்திரங்களிலும் ‘கருமையான இடம்’ அல்லது ‘கரும்பள்ளம்’ என்று விண்வெளியில்  இருக்கும் இடமொன்றைச் சுட்டிக் காட்டியிருந்தாலும், அவை இப்போது சொல்லப்படும் கருந்துளைகளைத்தானா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அதற்கப்புறம் கிபி 1798ம் ஆண்டளவுகளில் ‘லாப்பிளாஸ்’ (Simon Laplece) என்னும் கணிதவியலாளர் இந்தக் கருந்துளையைப் பற்றிச் சொல்லியிருப்பதாக கருதுகின்றனர். ஆனாலும் உண்மையான கருந்துளை 1972ம் ஆண்டு தொலைநோக்கிக் கருவிகள் மூலமாக முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அது அறிவியலில் ஒரு மைல்கல்லாகவும் அமைந்தது. அதைத் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான கருந்துளைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்றைய தேதியில் அண்டம் முழுவதும் நூறு மில்லியனுக்கு அதிகமான கருந்துளைகள் இருக்கின்றன என்கிறார்கள். இந்தக் கணக்கு ரொம்பவும் குறைத்துச் சொல்லப்பட்ட கணக்கு. எங்கள் சூரியக் குடும்பம் இருக்கும் பால்வெளிமண்டலத்தின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை ஒன்று (Supermassive Blackhole) இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு நட்சத்திர மண்டலங்களின் மையங்களும், இது போல ஒரு பெரிய கருந்துளையைக் கொண்டிருக்கும் என்கிறார்கள். இந்தக் கருந்துளைகள் ஏன் கருப்பாக இருக்கின்றன? அவற்றின் தண்மைகள் என்ன? என்று ஆராயும் போதுதான் பல ஆச்சரியமான தகவல்கள் நமக்குக் கிடைக்கத் தொடங்கின. அந்தத் தகவல்கள்தான் இப்போது இரண்டு இயற்பியலாளர்களுக்கிடையிலான போருக்கும் காரணமாகியிருக்கிறது.


நாம் வசிக்கும் பூமி எவ்வளவு பெரியது என்பது உங்களுக்குத் தெரியும். அதில் உள்ள மலைகள், பாறைகள், நீர்நிலைகள்,  உயிரினங்கள் என அனைத்தையும் சேர்த்து, நம் பூமியின் எடையை ஒருதரம் கற்பனை பண்ணிப் பாருங்கள். பூமியுடன் ஒப்பிடும் போது சூரியன், ஒரு கோடியே மூன்று லட்சம் பூமிகளை அதனுள் வைத்துவிடக் கூடிய அளவுக்குப் பெரியது. மூன்று லட்சத்து முப்பத்திமூன்றாயிரம் மடங்கு பூமிகளின் எடைக்குச் சமனானது சூரியன். இப்போது நமது சூரியன் எவ்வளவு பெரியதென்று கொஞ்சமாவது புரிகிறதல்லவா? ஆனால், அண்டத்தில் நமது சூரியனைப் போல, பத்து மடங்கு, நூறு மடங்கு, இருநூறு மடங்கு என்று  பெரிய நட்சத்திரங்களெல்லாம் வெகு சாதாரணமாக இருக்கின்றன. அவைகளுடன் ஒப்பிடும் போது நம் சூரியன் ஒரு குட்டிப்பாப்பா. நட்சத்திரங்கள் என்றாலே எப்போதும் எரிந்து கொண்டிருப்பவை என்று உங்களுக்குத் தெரியும். சூரியனை விடப் பத்துமடங்கு  பெரிய ஒரு நட்சத்திரத்தின் மையப்பகுதியில் (Core) உள்ள கதிர்த்தொழிற்பாட்டு எரிதண்மை தீர்ந்து போகும் வேளையில், அந்த நட்சத்திரம் இறக்கும் நிலையை அடைகிறது. அப்போது அந்த நட்சத்திரம் தன் உருவத்தில் ஊதிப் பெரிதாக உருமாறி ‘சுப்பர்நோவா’ (Supernove) என்று சொல்லப்படும் நிலையை அடைகிறது. அப்போது, அந்த நட்சத்திரத்தின் மையத்தில் ஏற்படும் நிலையற்ற ஸ்திரத் தண்மையாலும், அதிகளவு ஈர்ப்புவிசையாலும் திடீரென ஒரு சுருக்கம் ஏற்பட்டு, நட்சத்திரம் படீரென வெடிக்கின்றது. இந்த வெடிப்பு அண்டத்தின் ஆரம்ப வெடிப்பான பிக்பாங்கை ஒத்ததாக இருக்கும். இந்த சுப்பர்நோவா வெடித்ததன் மூலம், ‘நியூட்ரான் நட்சத்திரம்’ (Neutron Star) என்ற ஒன்று உருவாகும். நியூட்ரான் நட்சத்திரம் என்பது விண்வெளியில் காணப்படும் மிகச்சிறிய ஆனால் மிகச் சக்திவாய்ந்த ஒன்றாகும். அதிக அடர்த்தியும், நினைத்துப் பார்க்க முடியாத எடையும் கொண்ட மிகச்சிறிய நட்சத்திரம் அது. ஐந்து கிலோமீட்டர்கள் அகலமுள்ள ஒரு நியூட்ரான் நட்சத்திரம், ஐம்பது மடங்கு சூரியனின் எடையுடன் இருக்கும். அவ்வளவு அடர்த்தியும் சக்தியும் வாய்ந்தது நியூட்ரான் நட்சத்திரம்.


சூரியனைப் போல பத்து மடங்கு நட்சத்திரம் சுப்பர்நோவாவாக மாறி வெடிக்கிறது என்று பார்த்தோம். அது போல, சூரியனைப் போல நூறு மடங்கு பெரிதான நட்சத்திரத்துக்கு இப்படியானதொரு நிலை ஏற்பட்டால், அதாவது சூரியனைப் போல நூறு மடங்குள்ள ஒரு நட்சத்திரம், மைய எரி நிலை போதாமையால் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதுவும் மிகப்பெரிதாக ஊத ஆரம்பிக்கிறது. அப்படிப் பெரிதாகியதும் அது ‘சுப்பர் நோவா’ என்று அழைக்கப்படுவதில்லை. மாறாக, ‘ஹைப்பர் நோவா’ (Hypernova) என்று அழைக்கப்படுகின்றது. இந்த ஹைப்பர் நோவாக்கள் பெரிய அளவில் காமாக் கதிர்களை வெளிவிடக் கூடியவை. இவையும் சுப்பர் நோவாக்கள் போலவே, மையத்தில் (Core) ஏற்படும் ஸ்திரத்தண்மை இழப்பினாலும், ஈர்ப்பு சக்தி அதிகரிப்பினாலும் ஒரு குறித்த கணத்தில் பிக்பாங்க் போல, மிகப் பெரிய வெடிப்பாய் வெடிக்கின்றன. அந்த வெடிப்பின் போது ஏற்பட்ட சுழற்சியினாலும், எல்லையில்லா ஈர்ப்பு சக்தியினாலும் (Gravity), ஒரு சிறு புள்ளியை மையமாகக் கொண்டு அனைத்தும் ஒடுங்க ஆரம்பிக்கின்றன. அந்தப் புள்ளியே கருந்துளையாகப் (Blackhole) பிறப்பெடுக்கிறது.
திடீரெனத் தோன்றிய பெரிய வெடிப்பு, அதனால் ஏற்பட்ட அதிவேகச் சுழற்சி, அப்போது ஏற்பட்ட அளவிடமுடியாத வெப்பநிலை, அதனால் உருவான கதிர்வீச்சு மற்றும் ஆவியாதல் போன்ற நிகழ்வுகள், அதனால் உருவான  உபஅணுத்துகளின் சிதறல்கள், சிதறிய துகள்களெல்லாம் ஈர்ப்புவிசையினால் ஒன்றாக, ஒரே புள்ளியாகச் சேர்தல், அந்தப் புள்ளி முடிவற்ற எடையை அடைதல், அதனால் அந்தப் புள்ளியின் ஈர்ப்புவிசையும் முடிவற்றதாக அதிகரித்தல் என்ற அனைத்துச் செயல்பாடுகளும் ஒரு நொடிக்கும் குறைந்த நேரத்தில் நடைபெறுகிறது. அப்படித் தோன்றிய அந்தப் புள்ளியின் ஆற்றலால், அருகில் இருக்கும் எதுவும் தப்ப முடியாமல் அதன்பால் ஈர்க்கப்பட்டு, அதனுள் நுழைந்து காணாமல் போகும். வெளிச்சத்தால் கூட அதன் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பிவிட முடியாது. ஒளியைக் கூட விழுங்கியது அந்தப்புள்ளி. ஒளி விழுங்கப்பட்டதால், அந்த இடமெங்கும் கருப்பாக தோன்றியது. வட்டமான ஒளியில்லாத அந்தப் புள்ளி ‘கருந்துளை’ என்று அழைக்கப்பட்டது.


நயாகரா நீர்வீழ்ச்சியை உங்களில் பலர் சென்று பார்த்திருக்க மாட்டீர்கள். சிலர் சென்று பார்த்திருக்கலாம். சிலர் காணொளிகளாகக் கண்டிருக்கலாம். நயாகரா நீர்வீழ்ச்சியைக் கண்டவர்கள் நயாகராவையும், அதைக் காணாதவர்கள், சாதாரணமான வேறு நீர்வீழ்ச்சியைக் கண்டிருந்தால் அதையும், இவையிரண்டையும் காணாதவர்கள், ஆற்றில் அல்லது நீர் நிலைகளில் ஏற்படும் ஒரு பெரிய சுழலையாவது கற்பனை செய்து கொள்ளுங்கள். நயாகரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கீழே விழும் புள்ளிவரை, மேலே உள்ள ஆற்றில் தண்ணீர் சமதரையில் அமைதியாகவே ஓடிக் கொண்டுவரும். நிலைக் குத்தாகக் கீழே விழவேண்டிய ஒரு குறித்த இடம் வரும்வரை, அந்த நீர் எந்தச் சலனமும் இல்லாமல், அமைதியாகவே ஓடிக் கொண்டு வரும். நீர்வீழ்ச்சியில், கீழே விழுவதற்கு குறித்த சில மீட்டர் முன்னால் வரை ஆற்றின் வேகத்தில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் ஒரு குறித்த இடத்தை அடைந்ததும், அதாவது நீர்வீழ்ச்சியில் நீர் விழுவதற்கு முன்னர், மேலே உள்ள சமதரையில் உள்ள ஆற்று நீரில் சில மீட்டர்கள் முன்னாலேயே, நீரின் இழுவை வேகம் அதிகமாக காணப்படும். கீழே விழும் நீரின் ஈர்ப்பின் இழுவைச் சக்தி, மேலே உள்ள நீரில் சில மீட்டர்களில்தான் தெரிய ஆரம்பிக்கும். நீர்வீழ்ச்சியின் மேலே உள்ள ஆற்றில் நாம் சாதாரணமாக நீந்திக் கொண்டிருக்கலாம். அந்த நீர்வீழ்ச்சியின் நீர்விழும் அந்தக் குறித்த இடம் வரும்வரை பிரச்சனை இல்லாமல் நீந்தலாம். ஆனால், அந்தக் குறித்த எல்லை இடத்துக்கு நாம் நீந்தி வருவோமானால், நீர்வீழ்ச்சியின் விசையினால் கீழே இழுக்கப்படுவோம். அந்த எல்லை வரை நீந்த முடிந்த நமக்கு, அந்த எல்லை வந்ததும் நீர் இழுக்கும் வேகத்தை எதிர்த்து நீந்த முடியாமல், நீர்வீழ்ச்சியை நோக்கி இழுக்கப்பட்டுக் கீழே விழுந்துவிடுவோம். அந்த எல்லையை ‘திரும்பி வரமுடியாத எல்லை’ என்று சொல்லலாம் அல்லவா? இது போன்று திரும்பி வரமுடியாத ஒரு எல்லை கருந்துளைக்கும் உண்டு என்கிறார்கள்.


கருந்துளை என்பது முடிவற்ற ஈர்ப்பு விசையைக் கொண்டது என்கிறார்கள். அதன் ஈர்ப்பு, அதன் மையத்தை நோக்கி அனைத்தையும் இழுக்கும். ஆனால் அப்படிப்பட்ட கருந்துளையையும் நாம் அணுகலாம். ஒரு குறித்த எல்லைவரை நமக்கு எதுவும் நடக்காது. நயாகரா நீர்வீழ்ச்சி போல. ஆனால் ஒரு குறித்த எல்லையை நாம் கருந்துளையில் அடைந்தோமானால், அதன் ஈர்ப்புவிசையிருந்து நம்மால் தப்பிவிட முடியாது. கருந்துளையின் திரும்பி வர முடியாத எல்லையாக இருப்பதை ‘The Point of no return’ என்று சொல்கிறார்கள். அத்துடன் அந்த எல்லைக்கு ‘நிகழ்வு எல்லை’ (Event Horizon) என்று விசேசமான பெயரிட்டும் அழைக்கிறார்கள். வட்டவடிவமான ஒரு எல்லையாக அது காணப்படுகிறது. கருந்துளைக்குள் ஈர்க்கப்படும் அனைத்தும் இந்த ‘நிகழ்வு எல்லை’ வழியேதான் அதன் மையம் நோக்கி இழுக்கப்படுகின்றன.

ஒளியைக் கூட இந்தக் கருந்துளைகள் உள்ளே இழுப்பதால், கருப்பு நிறமாகக் காட்சிதருகிறது என்றும், கருந்துளையின் ஈர்ப்பு எல்லையாக, ‘நிகழ்வு எல்லை’ (Event Horizon) என்பது இருக்கிறது என்றும் இதுவரை நம்பிவந்தோம். ஆனால், இவை இரண்டுமே தப்பு என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். கருந்துளை என்று சொல்வதே தவறு. அது சாம்பல் நிறமானது என்றும். அதற்கு Event Horizon என்பதே கிடையாது என்றும் சொல்லியிருக்கிறார்.

ஆனால், இதற்கு எதிர்ப்புக் குரலை, ‘சேச்சே! ஹாக்கிங் சொல்வதுதான் தப்பு. Event Horizon என்பது நிச்சயம் இருக்கிறது. அது சாதாரணமானது கிடையாது. சினிமாப்படத்தை ஒளிபரப்பும் புரஜெக்டர் சாதனம் போல, அது பல காட்சிகளை விண்வெளியில் ஒளிபரப்புகிறது. அது ஒளிபரப்பும் திரைப்படக் காட்சிகள்தான் நானும், நீங்களும், அமெரிக்க ஜனாதிபதியும், பூமியில் இருக்கும் அனைத்தும். பூமியில் நாம் பார்க்கும் எதுவுமே உண்மையில்லை. நாம் அனைவருமே கருந்துளைகள் தெறிக்க விடும் மாயைத் தோற்றங்கள். இந்த ப்ளாக்ஹோல்களின் Even Horizon வெளிவிடும் தகவல்கள் (Information) வெளிப்படுத்தும் தோற்றங்களைத்தான், நாம் நடப்பதாக நினைத்துக் கொண்டு ஏமாறுகிறோம்’ என்று கிலியுடன் கிளப்புகிறார்கள்.

இது என்ன புதுப்புரளி? என்ன நடக்கிறது கருந்துளைகளில்? Evend Horizone என்பது என்ன? அது உண்மையில் திரைப்படக் காட்சிகளைப் போலப் படத்தை ஒளிபரப்புகிறதா? தலையைச் சுற்ற வைக்கும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தெளிவான பதில்களை சஸ்கிண்ட் தெளிவாகத் தருகிறார். அவர் தரும் அந்தப் பதில்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்……..!

(தொடரும்)

-ராஜ்சிவா-

மிக்கி மௌஸும் நீரும்

மிக்கி மௌஸும் நீரும் – நீரின் விந்தைத்தண்மைகள்

‘மிக்கி மௌஸும் நீரும்’ என்னும் தலைப்பைப் பார்த்ததுமே வியப்புத்தான் உங்களுக்குத் தோன்றியிருக்கும். ‘முழங்காலுக்கும், மொ.தலைக்கும் முடிச்சுப் போடுவது போல’, மிக்கி மௌஸுக்கும், நீருக்கும் என்ன சம்மந்தம்? என்ற ஆவலும் அந்த வியப்பில் அடங்கியிருக்கும். அது என்னவென்றுதான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

நீர் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதை, நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. தினம்தினம் அவசியம் அருந்த வேண்டிய அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று நீர். ஆனால் அந்த நீரைப்பற்றி நாம் எதையும் சரியாக அறிந்து வைத்திருப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். கண்ணும், தாயும் நம்முடன் இருக்கும் வரை, அவைபற்றிக் கவலையே படுவதில்லை நாம். இந்த இரண்டில் ஒன்று, நம்மை விட்டு இல்லாமல் போகும் போதுதான், ‘அட! வாழ்க்கையில் எவ்வளவு அவசியமான ஒன்றை இழந்து விட்டோம்’ என்று அலற ஆரம்பிப்போம். அதுபோல ஒன்றுதான் நீரும். அது இருக்கும் வரை, அதைப்பற்றி எந்தக் கவலையும் படாமல், அருந்திவிட்டுப் போய்க்கொண்டே இருப்போம். நீரும் இல்லாமல் போகும் போதுதான் அதன் அருமை தெரியும். நீரைப்பற்றிய விழிப்புணர்வுதான் நமக்கு இல்லாவிட்டாலும் கூட, அதுபற்றி ஒரு விந்தையான அறிவியல் தகவலை அறிந்து கொள்ளலாம். விந்தையான தகவல் என்றால், நீங்கள் நம்பவே முடியாத, கற்பனையால் நாம் அதைப் புரிந்து கொள்ள முடியாத ஒரு விந்தை.


ஒரு கிளாஸில் (Glass) அரைவாசி அளவுக்கு நீரை ஊற்றி வைத்துவிட்டு, ‘இதில் என்ன இருக்கிறது?’ என்று கேட்பார்கள். நாம் அரைக் கிளாஸில் நீர் இருப்பதாகச் சொல்வோம். ஆனால் அரைக் கிளாஸில் நீரிருப்பது போல, மிகுதியாய் இருக்கும் அரைக் கிளாஸில் நீரில்லாத வெறுமையும் இருக்கிறது. ஆனாலும் நாம் அதைச் சொல்ல மாட்டோம். நம் கண்ணுக்கு என்ன தெரிகிறதோ, அதையே உண்மையென்று நம்பி, அதை மட்டும்தான் குறிப்பிட்டுச் சொல்வோம். இது மனித இயல்பு. அரைக் கிளாஸில் நீர் இருப்பதை ஒரு தத்துவமாகவும் சொல்வார்கள். இதை நீங்கள் முன்னரே கேள்விப்பட்டுமிருக்கலாம். ஆனால், நான் சொல்ல வந்தது இது போல ஒன்றுதான் என்றாலும், இதுவல்ல. இதே கிளாஸும் இதே நீரும்தான். ஆனாலும், நான் சொல்ல வந்தது தத்துவமல்ல, அறிவியல்.


நீர் முழுமையாக நிரம்பியிருக்கும் ஒரு கிளாஸை எடுத்து மேசையில் வைத்துவிட்டு, அதைக் கொஞ்சம் பாருங்கள். அந்தக் கிளாஸில் முழுமையாக நீர் நிரம்பியிருப்பதாக நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள். ஆனால் உண்மையில் அப்படி இருப்பதில்லை. ஒரு கிளாஸில் நீர் நிரம்பியிருந்தால், அந்த கிளாஸில் 99% நீர் இருப்பதில்லை. 1% அளவில்தான் நீர் இருக்கும். ‘என்ன தலை சுற்றுகிறதா?’ ஆம்! 99 சதவீதத்துக்கு அந்தக் கிளாஸ் நீரின்றி வெறுமையாகத்தான் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், ஒரு கிளாஸ் நீரை நீங்கள் குடிக்கும் போது, அதில் ஒரேயொரு சதவீதம் நீரைத்தான் குடிக்கிறீர்கள். மிகுதி 99 சதவீதம் நீரைக் குடிப்பதாக நினைத்துக் கொண்டு, வெறுமையைக் குடிக்கிறீர்கள்.

“என்னடா! இந்த ஆள் தண்ணியைப் போட்டுவிட்டு உளறுகிறாரோ?” என்று நீங்கள் இப்போ நினைக்கலாம். அப்படி நான் தண்ணியைப் போட்டுவிட்டு உளறினாலும், அந்தத் தண்ணியிலும் 99 சதவீதம் வெறுமையைத்தான் குடித்திருப்பேன்.

‘என்ன புரியவில்லையா? பரவாயில்லை, தொடர்ந்து படியுங்கள் புரியும்.


நீர் என்பது, இரண்டு ஐதரசன் (H) அணுக்களையும், ஒரு ஒட்சிசன் (O) அணுவையும் சேர்த்து, H2O  மூலக்கூறால் (Molecule) உருவாக்கப்பட்ட ஒரு திரவம். அதாவது H2O என்னும் மூலக்கூறுகள் பல ஒன்று சேர்ந்திருப்பதை நாம் நீர் என்கிறோம். நீர் என்றல்ல, அனைத்துத் திரவங்களும் மூலக்கூறுகளால்தான் உருவானவை. ஒரு திரவத்தின் மிகச்சிறிய வடிவம் மூலக்கூறு எனப்படும். மூலக்கூறு ஒன்றைப் பிரிக்க வேண்டுமென்றால் அது அணுக்களாகத்தான் பிரியும். பல H2O மூலகூறுகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து, ஒரு கிளாஸ் நீராக மாறுகின்றன. இரண்டு ஐதரசன்களும், ஒரு ஒட்சிசனும், நீர் மூலக்கூறில் ஒரு விந்தையான வடிவத்தில் சேர்கின்றன. அந்த விந்தையான வடிவம் என்ன தெரியுமா? வால் டிஸ்னியின் கார்ட்டூன் படங்களில் வரும் மிக்கி மௌஸின் (Mickey Mouse) தலையின் வடிவம்தான் அது. ஐரரசன் அணுக்கள் இரண்டும் மேலேயும், ஒட்சிசன் அணு கீழேயுமாக இணைந்து இந்த வடிவில் அவை காணப்படும். இந்த விசேச வடிவமே நீருக்கு ஒரு சிறப்பான தண்மையைக் கொடுக்கிறது.


மேலே இரண்டு ஐதரசன் அணுக்களும், கீழே ஒரு ஒட்சிசன் அணுவும், நீரின் மூலக் கூறில் காணப்படுவதால், மேலே நேரேற்றத்துடனும் (+), கீழே எதிரேற்றத்துடனும் (-) அது இருக்கும். அதாவது கிட்டத்தட்ட ஒரு காந்தத்தைப் போலக் காணப்படும். அல்லது பூமியின் வட, தென் துருவம் போல என்றும் சொல்லலாம். இப்படிக் காந்தம் போலக் காணப்படுவதால், நீரின் மூலக்கூறுகள் ஒவ்வொன்றும் மற்ற மூலக்கூறுடன் இணையும் போது, ஒத்த ஏற்றத்தால் ஒன்றை ஒன்று தள்ள ஆரம்பிக்கின்றன. ஒரே ஏற்றங்கள் ஒன்றை ஒன்று தள்ளும் என்றும், எதிர் ஏற்றங்கள் ஒன்றை ஒன்று கவர்ந்து கொள்ளும் என்றும் சிறு வயதில் நீங்கள் படித்திருப்பீர்கள். அந்த விளைவால் நீரின் மூலக் கூறுகள் ஒவ்வொன்றுக்கும் இடையில், தள்ளுவிசை காரணமாக மிகப்பெரிய வெறுமையான இடைவெளிகள் காணப்படும். அதாவது நீரின் மூலக்கூறுகளை ஒன்று சேர்த்தால், அவற்றிற்குள் இடையே இருக்கும் இடைவெளி வெறுமை 99 மடங்கு அதிகமாக இருக்கும். இப்போது புரிகிறதா, ஒருகிளாஸ் நீரை நீங்கள் குடிக்கும் போது, 99 சதவீதம் வெறுமையையே குடிக்கிறீர்கள் என்பது?


இதனாலேயே, அதாவது நீர் மூலக்கூறின் மிக்கி மௌஸ் வடிவத்தால், நீருக்குப் பல சிறப்பான தண்மைகள் வந்துவிடுகிறது. பூமியில் இருக்கும் திரவங்களில் இயற்கையிலே திடப்பொருளாகவும் (ஐஸ்), திரவமாகவும் (நீர்), வாயுவாகவும் (நீராவி) இருக்கக் கூடிய ஒன்றேயொன்றாக நீர் இருப்பதற்குக் காரணம் இதுதான். அத்துடன் நீரின் திடப்பொருளான பனிக்கட்டியைத் திரவமான நீரிலிடும்போது, பனிக்கட்டி மிதப்பது, அதாவது திடப்பொருள் திரவத்தில் மிதப்பது, நீரில்தான் நடைபெறும். திடப்பொருள், திரவத்தை விட அடர்த்தி அதிகமானதாகவும், திரவம், வாயுவை விட அடர்த்தி கூடியதாகவும் இருப்பதுதான் வழமை. அடர்த்தி அதிகம் உள்ள திடப்பொருள், அடர்த்தி குறைந்த திரவத்தில் இடப்படும் போது, எப்போதும் அமிழ வேண்டும். ஆனால் நீரில் அதற்கு நேரெதிராக நடைபெறுகிறது. இதற்குக் காரனமும் அதுதான். நீர் மூலக்கூறின் வடிவத்தினால்தான் ஐஸில் சறுக்கி விளையாடும் விளையாட்டுகளை நம்மால் விளையாட முடிகிறது. நீர் பனிக்கட்டியானதும், அதன் மேற்பரப்பில் சறுக்கும் தண்மை உருவாவதற்கும் இதுவே காரணம். இப்படிப் பல வியப்பான தண்மைகள் நீருக்கு உண்டு. ஏனைய திரவங்களை விட, என்னென்ன விதங்களில் நீர் விசேசத் தண்மைகளைப் பெற்றிருக்கிறது என்று நீங்கள் அறிந்து கொள்கிறீர்களோ, அவை அனைத்துக்கும் இந்த மிக்கி மௌஸ் வடிவம்தான் காரணமாகிறது.

நீங்கள் வாங்கும் ஒரு பாட்டில் கோலாவிலிருந்து, கோலிச் சோடா வரை அதனுள் உள்ள சில துளிகளுக்காகவே அவ்வளவு பணத்தைக் கொட்டுகிறீர்கள் என்னும் நிதர்சனத்தைப் புரிந்து கொண்டீர்களா….?

-ராஜ்சிவா-

பெல்மேஷ் முகங்கள்

பெல்மேஷ் முகங்கள் – விடுவிக்கப்படாத மர்மம்

கடவுள் பற்றியும், பேய் போன்ற அமானுஷ்ய சக்திகள் பற்றியும் என் அபிப்பிராயங்களும், அவற்றையொட்டிய என் கருத்துகளும் மாறுபட்டவை. நவீன இயற்பியலையும், குவாண்டம் இயற்பியலையும் முழுமையாக ஏற்றுக் கொண்டவன் நான். அதனால் கடவுள் மற்றும் அமானுஷ்ய சக்திகள் பற்றிய என் கருத்துகளுக்கு அறிவியல் சார்ந்த ஒரு விளக்கத்தை எப்போதும் தேடிக் கொண்டிருப்பவன். இன்று எனக்குக் கிடைக்கும் ஒரு விளக்கம், நாளை வேறு ஒன்றாகத் தன்னைப் புதுப்பித்துத் திருத்திக் கொள்ளலாம். அறிவியலுக்கும், மத நம்பிக்கைகளுக்குமிடையில் நூலிழை வித்தியாசம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. எத்தனை ஆயிரம் வருடங்களானாலும், தன்னைப் புதிப்பித்துக் கொள்ளாமல் மத நம்பிக்கைகள் மாறாமல் இருக்க, அறிவியல் தன்னை அந்தந்தக் கணத்திலேயே புதுப்பித்துக் கொள்கிறது. பூமி தட்டையல்ல உருண்டை என்பதிலிருந்து, புளூட்டோ சூரியனைச் சுற்றும் ஒன்பது கிரகங்களில் ஒன்றல்ல என்பதுவரை, தன்னைப் புதுப்பிக்க அது தயங்கியதே இல்லை.

அறிவியல் ஆராய்ச்சிகளில் அவற்றுக்கென, இறுதியில் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க முடியவில்லையென்றால், கணிதச் சமன்பாடுகளை முன்வைத்து, இயற்பியல் விதிகளுக்கமைய, தர்க்க ரீதியான ஒரு முடிவை எடுத்துக் கொள்வார்கள். அதை உலக விஞ்ஞானிகளின் மத்தியில் சமர்ப்பித்து, பல கோணங்களில் சரி பார்த்துக் கொள்வார்கள். அதன் பின்னர் அதை ஒரு அறிவியல் கோட்பாடாக வெளியிடுவார்கள். கோட்பாடுகள் (Theory) என்பவவை முடிந்த முடிவுகளல்ல. ஆனால் பல இறுதி முடிவுகளை எடுப்பதற்கு முன்னோடிகளாக இருப்பவை. நவீன இயற்பியலில், குறிப்பாக குவாண்டம் இயற்பியலில், அறிவியல் முடிவுகள் கோட்பாடுகளகவே அதிகளவில் காணப்படுகின்றன. கோட்பாடுகளும் ஒரு விதத்தில் மத நம்பிக்கை போன்றவைதான். இருக்கின்றன என்பது போலக் கூறிக்கொள்ளும் ஆனால் இருப்பதாக நிரூபிக்க முடியாது. இந்தப் புள்ளியில்தான், நான் மேலே சொன்னது போல, மத நம்பிக்கைகளும், அறிவியல் கோட்பாடுகளும் தங்களை மாற்றிக் கொள்ளும் விசயத்தில் வித்தியாசப்படுகின்றன.

அதுசரி, இதையெல்லாம் இப்போது சொல்லி, நான் ஏன் உங்களை அறுக்கிறேன் என்றுதானே யோசிக்கிறீர்கள்? சொல்கிறேன்……….!

அறிவியல் ஒருபுறமும், நம்பிக்கை மறுபுறமும் இருக்க, இவையிரண்டுக்கும் இடையில் ‘மிஸ்டரி’ என்று சொல்லப்படும் மர்மங்கள், இந்த இரண்டு பக்கங்களும் சாராமலும், சார்ந்து கொண்டுமிருந்து நம்மை மிரட்டி வருகின்றன. சமீபத்தில் என்னால் வெளியிடப்பட்ட இரண்டு புத்தகங்களும் இந்த மிஸ்டரி வகையானவையே! மிஸ்டரி வகை மர்மங்களைப் பற்றிச் சொல்லும் போது, நான் மூடநம்பிக்கைகளை விதைப்பதாகச் சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இந்த மிஸ்டரிகளிலும் அறிவியல் தண்மை பொதிந்திருப்பதை நான் பல சமயங்களில் அவதானித்திருக்கிறேன். அறிவியல் சார்ந்து இவற்றுக்கான விளக்கங்களையும் புரிந்து கொண்டிருக்கிறேன். அந்த விளக்கங்கள் அனைத்தும் குவாண்டம் இயற்பியலின் கோட்பாடுகள் சார்ந்ததாகவே இருந்திருக்கின்றன. இப்படி நான் புரிந்து கொண்டவற்றை, ஒரு அறிவியல் பக்கத்தை உருவாக்கி, அதனூடாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். அதற்கான ஆதரவு உங்களிடமிருந்து தொடர்ந்து கிடைக்கும் வரை, என் பகிர்வுகளும் தொடர்ந்து கொண்டே செல்லும்.

இந்த மிஸ்டரிகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மேற்குலகில் வினோதமான முறையில் நடைபெறும் சம்பவங்கள் எவையாயினும், அவை பத்திகைகள், தொலைக்காட்சிகள் என அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்து, மக்கள் மத்தியில் பரவுகின்றன. ஆனால் நம் நாடுகளில் இவற்றிற்கென எந்தச் சந்தர்ப்பங்களும் அமையாமல், உலகில் நடந்த பல முக்கிய சம்பவங்களைத் தெரிந்து கொள்ளாமல் தவறவிடுகிறோம். இப்படி நாம் தவறவிட்டவை ஏராளம். இவற்றில் உண்மைகள் இருக்கின்றனவா? இல்லையா? என்பது ஒருபுறமிருக்க, ‘இப்படியெல்லாம் இருக்கின்றன’ என்று நாம் அறிந்திருக்க வேண்டுமல்லவா?

இன்றும் ஒரு மிஸ்டரி வகை மர்மத்துடன் என் பதிவுகளை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் ரெடிதானே!

ஸ்பெயின் நாட்டில் ‘பெல்மேஷ்’ (Belmez) என்றொரு கிராமம் இருக்கிறது. மிகவும் அமைதியான ஒரு கிராமம் அது. ஆனால், இந்த அமைதியெல்லாம் 1971ம் ஆண்டு வரைதான். 1971ம் ஆண்டு பெல்மேஷ் கிராமத்தில் இருந்த ஒரு வீட்டில் திடீரென நடந்த தொடர் சம்பவங்களால் அந்தக் கிராமமே கிலி பிடித்தால் போல மாறிவிட்டது. எங்கே இருக்கிறது என்று யாருக்குமே தெரியாத பெல்மேஷ் கிராமத்தைப்பற்றி உலகமே பேச ஆரம்பித்த சம்பவங்கள் அவை.

1971ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி, பெல்மேஷ் கிராமத்தில் ‘Calle Real’ என்னும் தெருவில் அமைந்த 5ம் நம்பர் வீட்டில் வசித்து வந்த பெண்மணியான மரியா கொமேஷ் (Maria Gomez), சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த பொழுது, தற்செயலாகச் சமயலறையின் நிலத்தைப் பார்க்க நேர்ந்தது. அங்கு தெரிந்தது என்னவென்று முதலில் அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. சற்று உற்றுக் கவனித்த போதுதான் ‘அட! இது ஒரு பெண்ணின் உருவமல்லவா?’ என்று மனதுக்குள் தோன்றியது. லேசாக ஒரு பயமும் தொற்றிக் கொண்டது. நிலத்தில் தெரிந்த படம் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. ரொம்பவும் மங்கலாகத் தெரிந்தது. ‘சரி, இதைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம். இப்படிச் சில சமயங்களில் சுவர்களிலும், முகில்களிலும் உருவங்கள் போல தெரிவதாக நாம் நினைத்துக் கொள்வதில்லையா? அதுபோல ஒன்றுதான் இது!’ என்று அலட்சியப்படுத்திவிட்டுப் படுக்கச் சென்றுவிட்டார். ஆனால், மறுநாள் எழுந்து வந்து சமையலறையைப் பார்த்தவருக்கு நடுக்கமே வந்துவிட்டது. நேற்றுப் பார்க்கையில், மிகவும் மங்கலாகச் சில கோடுகளால் வரையப்பட்டிருந்த ஒரு பெண்ணின் முகம், இன்று நல்ல தெளிவான முகமாக மாறியிருந்தது. அலறியடித்தபடி கணவனையும், மகனையும் அழைத்துக் காட்டிய போது, அவர்களும் கொஞ்சம் நிலைகுலைந்துதான் போனார்கள். ஆம்! மரியா கொமேஷ் அவர்களின் வீட்டின் சமையலறைத் தரை நிலத்தில், வித்தியாசமான வடிவத்தில் உள்ள பெண்ணொன்றின் முகம் வரையப்பட்டிருந்தது. வரையப்பட்டிருந்தது என்றால், சாதாரணமாக நாம் வரைவது போல சாயங்களைப் பயன்படுத்தியோ, வரையும் ஏதாவது கருவிகளைப் பயன்படுத்தியோ கிடையாது. ஒரு சாதாரண சீமெந்து நிலத்தில் ஏற்படும் கீறல்கள், வெடிப்புகளால் சில உருவங்கள் போல நமக்குத் தெரியுமே, அது போல வரையப்பட்டிருந்தது. ஆனால் மிகத் தெளிவாக ஒரு பெண்ணின் முழுமையான முகத்தின் படம். கணணி மூலமாக ஏற்படுத்தப்படும் விசேச எஃபக்டுகள் (Effect) போல, மிக மங்கலாகத் தெரிய ஆரம்பித்துப் பின்னர் படிப்படியாக முழுமையாய் வரைந்தது போல மாறும் படம். இப்படி மாறுவதற்குச் சில நாட்கள் எடுக்கும்.

வழக்கம் போல, ‘இதை யாரோ வரைந்துவிட்டுத் தங்களுடன் விளையாடுகிறார்களோ?’ என்றே மரியாவும், அவரது குடும்பத்தினரும் நினைத்தார்கள். அப்போதுதான் அடுத்த ஆச்சரியம் ஆரம்பித்தது. எப்படி இந்தப் படம் மங்கலாகவிருந்து பின்னர் தெளிவான படமாக மாறியதோ, அதேபோல, தெளிவாக இருந்த முகம் மீண்டும் மங்கலாக மாறத் தொடங்கி அப்படியே மறைந்தும் போனது. ‘அப்பாடா!’ என்று நினைத்தவர்களுக்கு அடுத்த நாளே, மேலுமொரு இடி காத்திருந்தது. அதே சமையலறையின் தரையில் வேறொரு படம் தோன்ற ஆரம்பித்தது. மரியாவின் கணவர் யுவான் பெரைராவும் (Juan Pereira), மகனும் திகைத்துப் போனார்கள். இந்தப் படமும் படிப்படியாகத் தெளிவான படமாக, கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மாறியது. யாரோ வரைந்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் என்று கொஞ்சம் சமாதானமாக இருந்தவர்களுக்கு இது கிலியையே ஏற்படுத்தியது. இப்படியானதொரு அதிசயத்தை, இல்லை.. இல்லை… அதிசயமே கிடையாது. இப்படியானதொரு பயங்கரத்தை அவர்கள் இதுவரை பார்த்ததேயில்லை.

பெரைராவும், மகனும் என்ன செய்வதென்று யோசித்தார்கள். ஊரில் யாரிடமும் சொல்லிப் பிரச்சனையை ஏற்படுத்த விரும்பவில்லை. கடப்பாரை ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அப்படியே, சமையலறை நிலத்தின் சீமெந்துத் தரையை உடைத்து வெளியே எறிந்தார்கள். புத்தம் புதிதாக ஒரு தரையை அங்கு அமைத்தார்கள். முடிந்தது கதை. கையைத் தட்டிவிட்டுச் சந்தோசமாகச் சென்று உறங்கினார்கள். அடுத்த நாள், அதற்கு அடுத்தநாள் என்று எதுவும் நடக்கவில்லை. ‘சரி, அந்தப் பழைய சீமெந்துத் தரையில்தான் ஏதோ கோளாறு. அந்தச் சீமெந்துக் கலவையில் உள்ள பிரச்சனையால்தான் இந்த உருவங்கள் தோன்றியிருக்கின்றன. தற்செயலாக அவை மனித முகங்கள் போலக் காட்சியளித்திருக்கின்றன’ என்று மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். மகிழ்ச்சி அடுத்தநாள் வரைக்கும்தான். புதிய சீமெந்துத் தரையில் மீண்டும் புதிய முகங்கள். பயந்தே போனது பெரைரா குடும்பம். திட்டவட்டமாக, ‘இது பேய்தான்’ என்ற முடிவுக்கே வந்தது அந்தக் குடும்பம். மெல்ல மெல்ல ஊருக்குள் கதை பரவ ஆரம்பித்தது. வீட்டை நோக்கிப் படையெடுத்தனர் மக்கள். எப்போதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த வீட்டில் நடக்கும் அதிசயத்தைப் பார்க்க ஆரம்பித்தார்கள். யார் வந்தாலும், யார் பார்த்துக் கொண்டிருந்தாலும், படங்கள் தோன்றுவதும் மறைவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன.

பயந்து போன பெரைரா ஊர் மேயரிடம் சென்று, ‘தங்களை இந்தச் சிக்கலிலிருந்து காப்பாற்றும்படியும், இந்தப் படங்கள் தோன்றுவதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்கும்படியும்’ கேட்டுக் கொண்டார். பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவணங்கள் என மரியா வீடே கலேபரமானது. நம்மூர்ப் பேய்கள் போல இல்லாமல்,  பெல்மேஷ் பேய் கள் கொஞ்சம் வித்தியாசமானவையாக இருந்தன. நம்முர்களில் பேய்கள் இருக்கின்றன என்று பத்திரிகைகளோ, தொலைக்காட்சிகளோ அந்தக் குறித்த இடத்துக்குச் சென்று அந்த இரவு தங்கி ஆராயும் போது, பேய்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு அந்தப் பக்கமே எட்டிப்பார்க்காது. ஆனால் பெல்மேஷ் பேய்களுக்கு, இந்த ஊடகத்தினரைக் கண்டு பயமே இருக்கவில்லை. அவர்கள் இருக்கும் போதே முகங்கள் தோன்றியது நடந்தது. இது மிகவும் வினோதமாகவும் தெரிந்தது. தெளிவாக அனைத்தையும் படம்பிடித்துக் கொண்டனர். வீட்டிற்கு பார்வையாளர்களாக வரும் பொது மக்களில் பலரும் போட்டோக்களை எடுத்துத் தள்ளினர். இது தொடர்ச்சியாக நடந்தபடியே இருந்தது. எவ்வளவு காலத்துக்கு நடந்தது தெரியுமா? முப்பது வருடங்களுக்கு மேலாக நடந்தது.

தனது 85வது வயதில், 2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மரியா கொமேஷ் அவர்கள் இறக்கும்வரை, அந்த வீட்டின் தரையெங்கும் முகங்கள் தோன்றிக் கொண்டேயிருந்தன. சமையலறையில் ஆரம்பித்து, வீட்டின் பல இடங்களிலும் முகங்கள் முகங்கள் முகங்கள்தான். இதனாலேயே இந்த மர்மச் சம்பவத்திற்கு ‘The Faces of Belmez’ என்ற பெயரும் வந்தது. ஆண்கள், பெண்கள் ஆகிய இரண்டு முகங்களும் மாறி மாறித் தோன்றின. சமயங்களில் கூட்டமான முகங்களும் தோன்றின. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முக பாவனைகள் அந்த முகங்களில் தெரியும். பலவித உணர்ச்சிகளை அந்த முகங்கள் வெளிப்படுத்தின. தொடர்ச்சியாக அந்த வீட்டில் முகங்கள் தோன்றியதாலும், தன் சொந்த வீட்டைவிட்டு வேறு எங்கும் போக விருப்பமில்லாததாலும், அங்கேயே இருந்தார் மரியா. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் பின்னர் அதுவே பழகிவிட்டிருந்தது. ஆனால், ஒரேயொரு நிம்மதி மட்டும் இருந்தது. படங்கள் தோன்றுவது மட்டும்தான், வேறு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இது பற்றிப் பேசிப்பேசி ஓய்ந்துபோயின. 30 வருடங்கள் அதே செய்தியைத் திருப்பித் திருப்பி போடுவதில் என்ன இருக்கு சொல்லுங்கள்? ஆனால், நீங்கள் நினைக்கும் விசயமும் நடந்தது. இந்தச் சித்திரங்களைப் பெரைரா குடும்பத்தில் ஒருவரே வரைந்துவிட்டு, உலகை ஏமாற்றுகிறாரோ என்றும் நினைக்கத் தொடங்கினார்கள் சிலர். அறிவியல் ஆராய்ச்சிகளும் ஒருபுறம் ஆரம்பித்தன.

சித்திரங்களின் இருந்த இடங்கள் சுரண்டப்பட்டு இரசாயனச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. பேரியம், காரீயம், குரோமியம், செம்பு, பொஸ்பரஸ் போன்றவற்றின் கலவை அதில் காணப்பட்டன என்று பதிலும் வந்தது. மரியாவை ‘லை டிடெக்டர்’ என்னும் பொய் அறியும் கருவி கொண்டும் ஆராய்ந்தார்கள். ஆனால் மரியா சொன்னது அனைத்தும் உண்மைதான் என்றே முடிவு வந்தது. தடயவியலாளர்கள், மனவியல் மருத்துவர்கள் என அனைவரும் படையெடுத்தனர். அனைத்துச் சோதனைகளுக்கும் பெரைரா குடும்பம் ஒத்துழைத்தது. யாராலும் சரியான உண்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையொட்டிப் பலவித விவாதங்கள் ஸ்பெய்ன் நாடெங்கும் நடைபெற்றன. வழமை போலச் சொல்லப்படும் காரணங்கள் அனைத்தும் சொல்லப்பட்டன. மேலே சொல்லப்பட்ட கலவைகளை மிகச் சரியான விகிதங்களில் கலந்து சீமெந்தில் பூசினால், அப்படி வரைந்த படம் உடன் தெரியாது என்றும், படிப்படியாக தெரிய ஆரம்பிக்கும் என்றும், பின்னர் தானாக மறைந்துவிடும் என்றும் சொன்னார்கள். இப்படிப் படங்கள் தோன்றுவதற்கு என்ன விதமான காரணங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறார்களோ, அவ்வளவு காரணங்களையும் சொன்னார்கள். சிலர் ஒருபடி மேலே போய், மனதின் உள்ளே நினைக்க வெளியே படங்களை உருவாக்கக் கூடிய Thoughtography என்னும் சக்தி மரியாவுக்கு உண்டு என்றும், அதன் மூலமாகத்தான் அவர் இந்தச் சித்திரங்களை வரைகிறார் என்றும் சொன்னார்கள். எல்லாமே சொன்னார்கள், எதற்கும் ஆதாரமிருக்கவில்லை. அனைவருமே தங்கள் கல்வியின் மேன்மையை வைத்து ஒவ்வொரு விதமான கருத்தைச் சொல்வார்கள். ஆனால் பெரும்பாண்மையான மக்கள் இதை, ஒன்று அல்லது பல அமானுஷ்ய சக்திகள்தான் உருவாக்குகின்றன என்று திடமாக நம்பினார்கள். பேய்கள் போன்ற அமானுஷ்ய சக்திகள்தான் இவற்றை உருவாக்குகின்றன என்னும் பக்கத்திலிருந்தும் ஆராய்ச்சிகள் நடந்தன. இந்த வீடே 500 வருடங்களுக்கு முன்னர் சவக்காடாக இருந்த இடத்தின் மேல்தான் கட்டப்பட்டிருக்கிறது என்றும், தோன்றும் உருவங்கள் அங்கு புதைக்கப்பட்டவர்களின் உருவங்கள்தான் என்றும் புதியதொரு காரணத்தைக் கண்டுபிடித்துச் சொன்னார்கள்.

சொல்லப் போனால் அறிவியலையே கொஞ்சம் ஆட்டிவைத்த நிகழ்வுதான் இது. என்ன காரணம் சொல்வதென்று தெரியாமல் கண்டமேனிக்கு, இந்த பெல்மேஷ் முகங்களுக்கான காரணம் சொன்னது போலத்தான் இருந்தது. மரியா கொமேஷ் பொய் சொல்லும் பெண்மணி கிடையாது என்று ஆராய்ச்சி செய்தவர்கள் உட்பட அனைவரும் அடித்துச் சொன்னார்கள். அப்படியென்றால், நடந்த உண்மைதான் என்ன? மரியாவின் மகன்தான் அந்தப் படங்களை வரைகிறான் என்று வைத்துக் கொண்டாலும். ஐரோப்பாவில் ஒரு வீடு என்பது மிக விலையுயர்ந்த சொத்து. அப்படியான பெறுமதியான ஒன்றைப் பேய் இருக்கிறது என்று சொல்லி யாரும் வாங்காமல் போகும் நிலைக்கு, அந்த வீட்டில் உள்ளவர்களே ஆக்குவார்களா என்பது ஒரு பெரிய கேள்வியாக இருந்தது. தன்னுடைய வீட்டில் தானே படங்களை வரைந்து பேய் இருக்கிறது என்று காட்டினால், யார் வாங்குவார்கள் அந்த வீட்டை? யாருக்கு அதனால் நட்டம்? அத்துடன் சீமெந்துத் தரையில் உள்ள சீமெந்துக் கலவைத் துகள்களில் பல இரசாயனங்களைக் கலந்து விசித்திரமான வகையில் படம் வரையத் தேர்ந்த ஒரு சித்திரக் கலைஞனாகவுமல்லவா இருக்க வேண்டும்.

இந்த நிகழ்வு ஸ்பெயினை மட்டுமல்ல, ஐரோப்பாவை ஏன் உலகையே உலுக்கி வைத்த ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு நடந்த எதுவும் ஒளித்தோ, மறைவுகளிலோ நடந்தவையல்ல. அந்த வீட்டில் தங்கியிருந்து ஆராய்ந்து பார்த்த நேரடி சாட்சிகள் உள்ள உண்மை நிகழ்வு. நிகழ்வுகளுக்கான காரணங்களைத் தேவையெனின் நாம் ஆராயலாம். ஆனால், நடந்த நிகழ்வுகள் அனைத்தும் உண்மையானவை. எந்த ஒரு கட்டுக்கதைகளும் கலக்காதவை. நேரடியாகக் கண்முன்னே நடந்தவை. இந்த நிகழ்வுகளின் உண்மைத்தண்மைக்கு பெல்மேஷ் மக்களும், அந்த நகரத்தின் முனிசிபல் அதிகாரிகளும் ஆதரவாகவே இருந்தனர்.

2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மரியா கொமேஷ் அவர்கள் இறந்து போனார்கள். அத்துடன் அந்த வீடு முழுமையாகத் திருத்தப்பட்டு, அவரின் மகன் புது வீட்டில் குடியேறினார். அத்துடன் எல்லாம் முடிந்து போனது என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் புதிய வீட்டில் ‘புதிய பெல்மேஷ் முகங்கள்’ மீண்டும் தோன்ற ஆரம்பித்தன. யாரிடமிருந்து என்ன அறிவித்தல் வந்ததோ தெரியவில்லை. பத்திரிகைகள் அந்தச் செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்தன. 2004ம் ஆண்டு EL Mundo என்னும் பிரபலமான பத்திரிகை, “பெல்மேஷின் முனிசிபல் ஆட்சியே இதை ஆட்கள் வைத்துச் செய்கிறது” என்று அபாண்டமான பழியைச் சொல்லிக் கட்டுரையொன்று வெளியிட்டது. அத்துடன் அனைத்தும் பொய்யென்றாகிப் போனது. பெல்மேஷ் முகம் பொலிவிழந்து போனது.

இறுதியில் ஏதோ ஒரு காரணத்தையொட்டி, ” இந்த உண்மைகளும் மறைக்கப்பட்டன………”

-ராஜ்சிவா-