கருந்துளைகள் இருக்கின்றனவா? – அண்டமும் குவாண்டமும் (பகுதி 1)

கருந்துளைகள் (Blackholes) இருக்கின்றனவா? – அண்டமும் குவாண்டமும் (பகுதி 1)

‘குவாண்டம்’, ‘குவாண்டம்’ என்று அறிவியலில் இப்போது அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் அப்படியென்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தாலும் கூட, அதைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், பலருக்குக் குவாண்டம் (Quantum) என்றால் என்னவென்று தெரியாது என்பதுதான் உண்மை. இன்றைய உலகிலும், இனி வரப்போகும் உலகிலும், குவாண்டம் தன் பங்கை முழுமையாகச் செலுத்தப் போகிறது. குவாண்டம் இல்லாமல் இனி எதுவுமே இல்லை என்ற நிலையும் வரப்போகிறது. வரப்போகிறது என்ன, வந்துவிட்டது. எனவே ‘குவாண்டம் என்றால் என்ன?’ என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவர்களாகிறோம். இந்த நிலையில், குவாண்டத்தைத் தமிழில் முடிந்தளவுக்கு ஏன் புரியவைக்கக் கூடாது என்று நினைத்து, அதை ஒரு தொடர் போல எழுதினால் என்ன என்ற முடிவில், ‘அண்டமும் குவாண்டமும்’ என்ற பெயரில் எழுத விரும்புகிறேன். இந்தக் கடுமையான, சிக்கலான அறிவியலை என்னால் முடிந்த அளவுக்கு இலகுவாகவும், எளிமையாகவும் உங்களுக்குத் தரலாம் என்று நினைக்கிறேன். இதற்கு நிச்சயம் உங்கள் ஆதரவு இருக்கும் என்றே நான் நம்புகிறேன். குவாண்டம் என்றால் என்ன? என்னும் அடிப்படைக் கேள்வியிலிருந்து, குவாண்டம் எந்த நிலையில் அண்டத்துடன் சம்மந்தப்படுகிறது? என்பதுவரை ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம். குவாண்டத்தின் மிகச் சிக்கலான ஒவ்வொரு முடிச்சையும், ஒவ்வொரு கட்டுரை மூலம் நாம் அவிழ்த்துக் கொள்ளலாம். இதன் ஆரம்பத்தை, சமீபத்தில் விவகாரமாகப் பேசப்பட்ட ‘கருந்துளை’ பற்றிய கட்டுரையுடன் ஆரம்பிக்கிறேன்.     

- ராஜ்சிவா-

கருந்துளைகள் (Blackholes) இருக்கின்றனவா?

இன்றைய தேதியில், அறிவியலில் பெரும் விவகாரமாகவும், விவாதமாகவும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விசயம், ‘அண்டத்தில் எங்குமே கருந்துளைகள் (Blackholes) இல்லை’ என்பதுதான். நாஸா உட்படப் பல ஆராய்ச்சி நிலையங்களில், விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கான கருந்துளைகளைக் கண்டுபிடித்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், இப்படியானதொரு சந்தேகம், ஆச்சரியத்தையும், குழப்பத்தையும்தான் நமக்கு ஏற்படுத்தும். ஆனால் அவ்வளவு சுலபமாக நாம் இந்தச் சந்தேகத்தைச் சாதாரணமானது என்று சொல்லி ஒதுக்கிவிட்டுச் சென்றுவிட முடியாது. அதற்குக் காரணம், இந்தச் சந்தேகத்தை எழுப்பியுள்ளவர் ஒரு சாதாரணமான ஆளே கிடையாது என்பதுதான். உலக இயற்பியல் வரலாற்றில் மிகமுக்கியமானவரும், நவீன இயற்பியலில் பெயர் பெற்றவரும், கடந்த பல தசாப்தங்களாக கருந்துளைகளைப் பற்றி ஆராய்ந்து வருபவருமான ‘ஸ்டீவன் ஹாக்கிங்’ (Stephen Hawking) என்பவர்தான் இந்தச் சந்தேகத்தையே எழுப்பியுள்ளவர்.


ஆனால், உண்மையில் ஹாக்கிங் சொன்னது வேறு. ‘அண்டத்தில் எங்கும் கருந்துளைகள் இல்லை’ என்று அவர் சொல்லவில்லை. ‘இப்போது நாம் கருந்துளைகள் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அதுபோல போலக் கருந்துளைகள் இருக்காது’ என்று சொன்னார். ‘கருந்துளைகள் இப்படித்தான் இருக்கும் என்று நம்மிடம் ஒரு வரையறை உண்டு. அப்படி நாம் வரையறுத்து வைத்திருப்பது போலக் கருந்துளைகள் இல்லை’ என்றார். இவை மட்டுமில்லாமல், வேறு சில புரட்சிகரமான கருத்துகளையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறார் ஹாக்கிங். ‘கருந்துளைகள் கறுப்பு நிறமாக இருக்காது’ என்றும், ‘அவை சாம்பல் நிறத்தில் இருக்கும்’ என்றும் சொல்லியிருக்கிறார். இவற்றையெல்லாம் ஏதோ ஒரு அனுமானத்தின் மூலம் அவர் சொல்லிவிடவில்லை. பலவிதமான இயற்பியல், கணிதச் சமன்பாடுகளை முன்வைத்துச் சொல்லியிருக்கிறார். இவர் இப்படிச் சொன்னது சக இயற்பியலாளர்களை, குறிப்பாக வானியல் இயற்பியலாளர்களைப் (Astrophysicist) பெரும் குழப்பத்திற்குள் கொண்டு சென்றிருக்கிறது. இவர் சொல்வதை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்ற முடிவுக்குக் கூட இன்னும் யாராலும் வரமுடியவில்லை. இவர் சொல்வது மட்டும் உண்மையாக இருக்குமானால், இதுவரை வானியல் இயற்பியலில் உண்மைகள் என்று நம்பப்பட்டு வந்த பல விசயங்களை மாற்றிக் கொள்ள வேண்டிவரும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை இந்த முடிவுகள். ஆனால், இப்படிப்பட்ட முடிவுகளுக்கான ஆராய்ச்சிகள் நடைபெறுவதற்குக் காரணமாக இருப்பது, இரண்டு பேருக்கிடையில் நடக்கும் போர்தான் என்கிறார்கள். கோபமில்லாமல், வெறுப்பில்லாமல், ஆயுதமற்று, மூளையை மட்டும் மூலதனமாக வைத்து நடக்கும் ஒரு போர் இது. இந்தப் போர் பலவருடங்களாக நடந்துவரும் ஒரு போர். போரில் எதிரெதிராக நின்று அதில் பங்குபற்றும் இருவருமே உலகமகா அறிவியலாளர்கள். பெரும் புத்திசாலிகள். இயற்பியல் விற்பன்னர்கள். அந்த இருவரில் ஒருவர், நான் மேலே சொன்ன ஸ்டீபன் ஹாக்கிங். மற்றவர் ‘லெனார்ட் சஸ்கிண்ட்’ (Leonard Susskind) என்பவர். இந்த சஸ்கிண்ட் என்பவரும் சாதாரணமான ஒருவர் கிடையாது. உலகப் புகழ்பெற்ற ஸ்ட்ரிங் தியரியின் (String Theory) கட்டமைப்பாளர்களில் ஒருவர்.


‘ஊர் இரண்டுபட்டால் யாருக்கோ கொண்டாட்டம்’ என்று சொல்வழக்கு உண்டு. அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், சஸ்கிண்டும் ஹாக்கிங்கும் இரண்டுபட்டதால், இயற்பியல் உலகு, அறிவியல் உலகு, அதிகம் ஏன் ஒட்டுமொத்த உலகிற்கே கொண்டாட்டம்தான். இருவருமே மற்றவர் சொல்வது தப்பு என்று நிரூபிப்பதற்காக ஆவேசமாக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, கணிதச் சமன்பாடுகளை நசித்துப் பிசைந்து பல அறிவியல் உண்மைகளை வெளியிடுகின்றனர். இதில் பிரச்சனைகளும் இல்லாமல் இல்லை. இவர்கள் இருவரில் யார் சொல்வது சரியென்று குழப்பம் மிஞ்சுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், இந்தக் குழப்பங்களைக் கையிலெடுத்துக் கொண்டு, இனிவரும் இளம் விஞ்ஞானிகள் ஆராய ஆரம்பிக்கும் போது சரியான விடைகள் பின்னாளில் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. இப்படியே பேசிக் கொண்டு போனால், இவர்கள் என்ன போர் செய்தார்கள் என்று பார்க்க முடியாமல் போய்விடும். ஆகவே முதலில் எதை முன்வைத்து இவர்களின் போர் நடந்தது என்பதை நாம் பார்க்கலாம்.
இயற்பியலில் (Physics) ‘வானியல் இயற்பியல்’ (Astrophysics) என்பது தற்போது மிக முக்கியமான பிரிவாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் வானியல் ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியா கூட அதில் தன்பங்கை வலிமையுடன் செலுத்த ஆரம்பித்துவிட்டது. விண்வெளிக்கு சாட்லைட்டுகளை அனுப்புவதிலிருந்து, அயல்கிரகங்களுக்கு ராக்கெட்டுகளை அனுப்புவது வரை முன்னேறியாகிவிட்டது. பூமியிலிருந்தே விண்வெளியைப் பெரும் தொலைநோக்கிக் கருவிகளைக் கொண்டு அவதானிக்க ஆரம்பித்துவிட்டோம். அதன் உச்சமாக, சாட்லைட்டுகள் மூலம் தொலைநோக்கிக் கருவிகளை விண்வெளியில் நிறுவி, அங்கிருந்தே விண்வெளியை ஆராயவும் செய்கிறோம். அமெரிக்கா ‘NASA’ என்றும், ஐரோப்பா ‘ESA’ என்றும், இந்தியா ‘ISRO’ என்றும் அமைப்புகளை உருவாக்கி வானியல் ஆராய்ச்சிகளைச் செய்கின்றன. இவையெல்லாவற்றிற்கும் அடிப்படையானது வானியல் இயற்பியல் படிப்புத்தான். மிகப்பெரிய தொலைநோக்கிக் கருவிகள் மூலம், விண்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களை ஆராய்ந்து, இயற்பியல், கணிதவியல் சமன்பாடுகள் மூலம் எடுத்த பல முடிவுகளைக் கொண்டு, நமது அண்டம் உருவாகியது முதல், மனிதன் தோன்றியது வரையுள்ள மொத்த சரித்திரத்தையும் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ‘பிக் பாங்’ என்னும் சிறு புள்ளியின் பெருவெடிப்பின் ஆரம்பத்திலிருந்து, நேற்று சென்னையில் நடந்த அரசியல் மாநாடு வரையிலான தொடர் நிகழ்ச்சிகளுக்கான காரணங்களை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்திப் பட்டியலிடுகிறார்கள்.


இந்தப் பட்டியலின் வரிசையில் இருக்கும் ஒன்றுதான் ‘கருந்துளை’ என்று சொல்லப்படும் ‘ப்ளாக்ஹோல்’ (Blackhole). நமது அண்டத்தின் (Universe) அவிழ்க்க முடியாத பெரும் மர்ம முடிச்சாக இந்தக் கருந்துளை இருக்கிறது. சில புராணங்களிலும், ‘மாயா’ (Maya) போன்ற இனங்களின் சரித்திரங்களிலும் ‘கருமையான இடம்’ அல்லது ‘கரும்பள்ளம்’ என்று விண்வெளியில்  இருக்கும் இடமொன்றைச் சுட்டிக் காட்டியிருந்தாலும், அவை இப்போது சொல்லப்படும் கருந்துளைகளைத்தானா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அதற்கப்புறம் கிபி 1798ம் ஆண்டளவுகளில் ‘லாப்பிளாஸ்’ (Simon Laplece) என்னும் கணிதவியலாளர் இந்தக் கருந்துளையைப் பற்றிச் சொல்லியிருப்பதாக கருதுகின்றனர். ஆனாலும் உண்மையான கருந்துளை 1972ம் ஆண்டு தொலைநோக்கிக் கருவிகள் மூலமாக முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அது அறிவியலில் ஒரு மைல்கல்லாகவும் அமைந்தது. அதைத் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான கருந்துளைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்றைய தேதியில் அண்டம் முழுவதும் நூறு மில்லியனுக்கு அதிகமான கருந்துளைகள் இருக்கின்றன என்கிறார்கள். இந்தக் கணக்கு ரொம்பவும் குறைத்துச் சொல்லப்பட்ட கணக்கு. எங்கள் சூரியக் குடும்பம் இருக்கும் பால்வெளிமண்டலத்தின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை ஒன்று (Supermassive Blackhole) இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு நட்சத்திர மண்டலங்களின் மையங்களும், இது போல ஒரு பெரிய கருந்துளையைக் கொண்டிருக்கும் என்கிறார்கள். இந்தக் கருந்துளைகள் ஏன் கருப்பாக இருக்கின்றன? அவற்றின் தண்மைகள் என்ன? என்று ஆராயும் போதுதான் பல ஆச்சரியமான தகவல்கள் நமக்குக் கிடைக்கத் தொடங்கின. அந்தத் தகவல்கள்தான் இப்போது இரண்டு இயற்பியலாளர்களுக்கிடையிலான போருக்கும் காரணமாகியிருக்கிறது.


நாம் வசிக்கும் பூமி எவ்வளவு பெரியது என்பது உங்களுக்குத் தெரியும். அதில் உள்ள மலைகள், பாறைகள், நீர்நிலைகள்,  உயிரினங்கள் என அனைத்தையும் சேர்த்து, நம் பூமியின் எடையை ஒருதரம் கற்பனை பண்ணிப் பாருங்கள். பூமியுடன் ஒப்பிடும் போது சூரியன், ஒரு கோடியே மூன்று லட்சம் பூமிகளை அதனுள் வைத்துவிடக் கூடிய அளவுக்குப் பெரியது. மூன்று லட்சத்து முப்பத்திமூன்றாயிரம் மடங்கு பூமிகளின் எடைக்குச் சமனானது சூரியன். இப்போது நமது சூரியன் எவ்வளவு பெரியதென்று கொஞ்சமாவது புரிகிறதல்லவா? ஆனால், அண்டத்தில் நமது சூரியனைப் போல, பத்து மடங்கு, நூறு மடங்கு, இருநூறு மடங்கு என்று  பெரிய நட்சத்திரங்களெல்லாம் வெகு சாதாரணமாக இருக்கின்றன. அவைகளுடன் ஒப்பிடும் போது நம் சூரியன் ஒரு குட்டிப்பாப்பா. நட்சத்திரங்கள் என்றாலே எப்போதும் எரிந்து கொண்டிருப்பவை என்று உங்களுக்குத் தெரியும். சூரியனை விடப் பத்துமடங்கு  பெரிய ஒரு நட்சத்திரத்தின் மையப்பகுதியில் (Core) உள்ள கதிர்த்தொழிற்பாட்டு எரிதண்மை தீர்ந்து போகும் வேளையில், அந்த நட்சத்திரம் இறக்கும் நிலையை அடைகிறது. அப்போது அந்த நட்சத்திரம் தன் உருவத்தில் ஊதிப் பெரிதாக உருமாறி ‘சுப்பர்நோவா’ (Supernove) என்று சொல்லப்படும் நிலையை அடைகிறது. அப்போது, அந்த நட்சத்திரத்தின் மையத்தில் ஏற்படும் நிலையற்ற ஸ்திரத் தண்மையாலும், அதிகளவு ஈர்ப்புவிசையாலும் திடீரென ஒரு சுருக்கம் ஏற்பட்டு, நட்சத்திரம் படீரென வெடிக்கின்றது. இந்த வெடிப்பு அண்டத்தின் ஆரம்ப வெடிப்பான பிக்பாங்கை ஒத்ததாக இருக்கும். இந்த சுப்பர்நோவா வெடித்ததன் மூலம், ‘நியூட்ரான் நட்சத்திரம்’ (Neutron Star) என்ற ஒன்று உருவாகும். நியூட்ரான் நட்சத்திரம் என்பது விண்வெளியில் காணப்படும் மிகச்சிறிய ஆனால் மிகச் சக்திவாய்ந்த ஒன்றாகும். அதிக அடர்த்தியும், நினைத்துப் பார்க்க முடியாத எடையும் கொண்ட மிகச்சிறிய நட்சத்திரம் அது. ஐந்து கிலோமீட்டர்கள் அகலமுள்ள ஒரு நியூட்ரான் நட்சத்திரம், ஐம்பது மடங்கு சூரியனின் எடையுடன் இருக்கும். அவ்வளவு அடர்த்தியும் சக்தியும் வாய்ந்தது நியூட்ரான் நட்சத்திரம்.


சூரியனைப் போல பத்து மடங்கு நட்சத்திரம் சுப்பர்நோவாவாக மாறி வெடிக்கிறது என்று பார்த்தோம். அது போல, சூரியனைப் போல நூறு மடங்கு பெரிதான நட்சத்திரத்துக்கு இப்படியானதொரு நிலை ஏற்பட்டால், அதாவது சூரியனைப் போல நூறு மடங்குள்ள ஒரு நட்சத்திரம், மைய எரி நிலை போதாமையால் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதுவும் மிகப்பெரிதாக ஊத ஆரம்பிக்கிறது. அப்படிப் பெரிதாகியதும் அது ‘சுப்பர் நோவா’ என்று அழைக்கப்படுவதில்லை. மாறாக, ‘ஹைப்பர் நோவா’ (Hypernova) என்று அழைக்கப்படுகின்றது. இந்த ஹைப்பர் நோவாக்கள் பெரிய அளவில் காமாக் கதிர்களை வெளிவிடக் கூடியவை. இவையும் சுப்பர் நோவாக்கள் போலவே, மையத்தில் (Core) ஏற்படும் ஸ்திரத்தண்மை இழப்பினாலும், ஈர்ப்பு சக்தி அதிகரிப்பினாலும் ஒரு குறித்த கணத்தில் பிக்பாங்க் போல, மிகப் பெரிய வெடிப்பாய் வெடிக்கின்றன. அந்த வெடிப்பின் போது ஏற்பட்ட சுழற்சியினாலும், எல்லையில்லா ஈர்ப்பு சக்தியினாலும் (Gravity), ஒரு சிறு புள்ளியை மையமாகக் கொண்டு அனைத்தும் ஒடுங்க ஆரம்பிக்கின்றன. அந்தப் புள்ளியே கருந்துளையாகப் (Blackhole) பிறப்பெடுக்கிறது.
திடீரெனத் தோன்றிய பெரிய வெடிப்பு, அதனால் ஏற்பட்ட அதிவேகச் சுழற்சி, அப்போது ஏற்பட்ட அளவிடமுடியாத வெப்பநிலை, அதனால் உருவான கதிர்வீச்சு மற்றும் ஆவியாதல் போன்ற நிகழ்வுகள், அதனால் உருவான  உபஅணுத்துகளின் சிதறல்கள், சிதறிய துகள்களெல்லாம் ஈர்ப்புவிசையினால் ஒன்றாக, ஒரே புள்ளியாகச் சேர்தல், அந்தப் புள்ளி முடிவற்ற எடையை அடைதல், அதனால் அந்தப் புள்ளியின் ஈர்ப்புவிசையும் முடிவற்றதாக அதிகரித்தல் என்ற அனைத்துச் செயல்பாடுகளும் ஒரு நொடிக்கும் குறைந்த நேரத்தில் நடைபெறுகிறது. அப்படித் தோன்றிய அந்தப் புள்ளியின் ஆற்றலால், அருகில் இருக்கும் எதுவும் தப்ப முடியாமல் அதன்பால் ஈர்க்கப்பட்டு, அதனுள் நுழைந்து காணாமல் போகும். வெளிச்சத்தால் கூட அதன் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பிவிட முடியாது. ஒளியைக் கூட விழுங்கியது அந்தப்புள்ளி. ஒளி விழுங்கப்பட்டதால், அந்த இடமெங்கும் கருப்பாக தோன்றியது. வட்டமான ஒளியில்லாத அந்தப் புள்ளி ‘கருந்துளை’ என்று அழைக்கப்பட்டது.


நயாகரா நீர்வீழ்ச்சியை உங்களில் பலர் சென்று பார்த்திருக்க மாட்டீர்கள். சிலர் சென்று பார்த்திருக்கலாம். சிலர் காணொளிகளாகக் கண்டிருக்கலாம். நயாகரா நீர்வீழ்ச்சியைக் கண்டவர்கள் நயாகராவையும், அதைக் காணாதவர்கள், சாதாரணமான வேறு நீர்வீழ்ச்சியைக் கண்டிருந்தால் அதையும், இவையிரண்டையும் காணாதவர்கள், ஆற்றில் அல்லது நீர் நிலைகளில் ஏற்படும் ஒரு பெரிய சுழலையாவது கற்பனை செய்து கொள்ளுங்கள். நயாகரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கீழே விழும் புள்ளிவரை, மேலே உள்ள ஆற்றில் தண்ணீர் சமதரையில் அமைதியாகவே ஓடிக் கொண்டுவரும். நிலைக் குத்தாகக் கீழே விழவேண்டிய ஒரு குறித்த இடம் வரும்வரை, அந்த நீர் எந்தச் சலனமும் இல்லாமல், அமைதியாகவே ஓடிக் கொண்டு வரும். நீர்வீழ்ச்சியில், கீழே விழுவதற்கு குறித்த சில மீட்டர் முன்னால் வரை ஆற்றின் வேகத்தில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் ஒரு குறித்த இடத்தை அடைந்ததும், அதாவது நீர்வீழ்ச்சியில் நீர் விழுவதற்கு முன்னர், மேலே உள்ள சமதரையில் உள்ள ஆற்று நீரில் சில மீட்டர்கள் முன்னாலேயே, நீரின் இழுவை வேகம் அதிகமாக காணப்படும். கீழே விழும் நீரின் ஈர்ப்பின் இழுவைச் சக்தி, மேலே உள்ள நீரில் சில மீட்டர்களில்தான் தெரிய ஆரம்பிக்கும். நீர்வீழ்ச்சியின் மேலே உள்ள ஆற்றில் நாம் சாதாரணமாக நீந்திக் கொண்டிருக்கலாம். அந்த நீர்வீழ்ச்சியின் நீர்விழும் அந்தக் குறித்த இடம் வரும்வரை பிரச்சனை இல்லாமல் நீந்தலாம். ஆனால், அந்தக் குறித்த எல்லை இடத்துக்கு நாம் நீந்தி வருவோமானால், நீர்வீழ்ச்சியின் விசையினால் கீழே இழுக்கப்படுவோம். அந்த எல்லை வரை நீந்த முடிந்த நமக்கு, அந்த எல்லை வந்ததும் நீர் இழுக்கும் வேகத்தை எதிர்த்து நீந்த முடியாமல், நீர்வீழ்ச்சியை நோக்கி இழுக்கப்பட்டுக் கீழே விழுந்துவிடுவோம். அந்த எல்லையை ‘திரும்பி வரமுடியாத எல்லை’ என்று சொல்லலாம் அல்லவா? இது போன்று திரும்பி வரமுடியாத ஒரு எல்லை கருந்துளைக்கும் உண்டு என்கிறார்கள்.


கருந்துளை என்பது முடிவற்ற ஈர்ப்பு விசையைக் கொண்டது என்கிறார்கள். அதன் ஈர்ப்பு, அதன் மையத்தை நோக்கி அனைத்தையும் இழுக்கும். ஆனால் அப்படிப்பட்ட கருந்துளையையும் நாம் அணுகலாம். ஒரு குறித்த எல்லைவரை நமக்கு எதுவும் நடக்காது. நயாகரா நீர்வீழ்ச்சி போல. ஆனால் ஒரு குறித்த எல்லையை நாம் கருந்துளையில் அடைந்தோமானால், அதன் ஈர்ப்புவிசையிருந்து நம்மால் தப்பிவிட முடியாது. கருந்துளையின் திரும்பி வர முடியாத எல்லையாக இருப்பதை ‘The Point of no return’ என்று சொல்கிறார்கள். அத்துடன் அந்த எல்லைக்கு ‘நிகழ்வு எல்லை’ (Event Horizon) என்று விசேசமான பெயரிட்டும் அழைக்கிறார்கள். வட்டவடிவமான ஒரு எல்லையாக அது காணப்படுகிறது. கருந்துளைக்குள் ஈர்க்கப்படும் அனைத்தும் இந்த ‘நிகழ்வு எல்லை’ வழியேதான் அதன் மையம் நோக்கி இழுக்கப்படுகின்றன.

ஒளியைக் கூட இந்தக் கருந்துளைகள் உள்ளே இழுப்பதால், கருப்பு நிறமாகக் காட்சிதருகிறது என்றும், கருந்துளையின் ஈர்ப்பு எல்லையாக, ‘நிகழ்வு எல்லை’ (Event Horizon) என்பது இருக்கிறது என்றும் இதுவரை நம்பிவந்தோம். ஆனால், இவை இரண்டுமே தப்பு என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். கருந்துளை என்று சொல்வதே தவறு. அது சாம்பல் நிறமானது என்றும். அதற்கு Event Horizon என்பதே கிடையாது என்றும் சொல்லியிருக்கிறார்.

ஆனால், இதற்கு எதிர்ப்புக் குரலை, ‘சேச்சே! ஹாக்கிங் சொல்வதுதான் தப்பு. Event Horizon என்பது நிச்சயம் இருக்கிறது. அது சாதாரணமானது கிடையாது. சினிமாப்படத்தை ஒளிபரப்பும் புரஜெக்டர் சாதனம் போல, அது பல காட்சிகளை விண்வெளியில் ஒளிபரப்புகிறது. அது ஒளிபரப்பும் திரைப்படக் காட்சிகள்தான் நானும், நீங்களும், அமெரிக்க ஜனாதிபதியும், பூமியில் இருக்கும் அனைத்தும். பூமியில் நாம் பார்க்கும் எதுவுமே உண்மையில்லை. நாம் அனைவருமே கருந்துளைகள் தெறிக்க விடும் மாயைத் தோற்றங்கள். இந்த ப்ளாக்ஹோல்களின் Even Horizon வெளிவிடும் தகவல்கள் (Information) வெளிப்படுத்தும் தோற்றங்களைத்தான், நாம் நடப்பதாக நினைத்துக் கொண்டு ஏமாறுகிறோம்’ என்று கிலியுடன் கிளப்புகிறார்கள்.

இது என்ன புதுப்புரளி? என்ன நடக்கிறது கருந்துளைகளில்? Evend Horizone என்பது என்ன? அது உண்மையில் திரைப்படக் காட்சிகளைப் போலப் படத்தை ஒளிபரப்புகிறதா? தலையைச் சுற்ற வைக்கும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தெளிவான பதில்களை சஸ்கிண்ட் தெளிவாகத் தருகிறார். அவர் தரும் அந்தப் பதில்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்……..!

(தொடரும்)

-ராஜ்சிவா-

4 thoughts on “கருந்துளைகள் இருக்கின்றனவா? – அண்டமும் குவாண்டமும் (பகுதி 1)

  1. மிக அருமைய உள்ளது. புரிந்துகொள்ளவே சிறிது நேரம் பிடிக்கிறது.உங்கள் எழுத்து மிக அருமைய அனைத்தயும் எளிமையாக கொண்டு வந்துள்ளது.வழ்த்துக்கள்

  2. எளிய தமிழில் அறிவியல் விளக்கம். அருமையாக இருக்கிறது.நன்றி. வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>