திரிஷாவும் திவ்யாவும் (Blackhole Information) – அண்டமும் குவாண்டமும் (5)

திரிஷாவும் திவ்யாவும்


நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவம், பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கு நடந்திருக்கும். அதை அந்தக் கணத்தில் நீங்கள் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். ஆனாலும் அப்போது அது உங்களுக்கு ஒரு ஆச்சரியத்தையும், ஆற்றாமையையும் தந்திருக்கும். ‘என்ன இது? நான் நினைப்பது தப்பா? அல்லது இவர்கள் நினைப்பது தப்பா?’ என்று அந்த ஒரு நொடியில், கேள்வியொன்று உங்களுக்குள் உருவாகி மறைந்திருக்கும். ஆனாலும் அந்தக் கணத்திலேயே அதைப் பெரிதுபடுத்தாமல் மறந்து போய்விடுவீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் மறந்து போவதற்கு அது ஒரு சின்ன விசயமே கிடையாது. நவீன அறிவியலில், அதாவது குவாண்டம் இயற்பியலில் மிகமுக்கிய இடத்தைப் பிடிக்கும் நிகழ்வு அது. ‘நான் இப்போது எதைப் பற்றிப் பேசுகிறேன்’ என்றுதானே யோசிக்கிறீர்கள்? சொல்கிறேன், ஆனால் அதற்குக் கொஞ்சம் அறிவியல் பார்க்க வேண்டும். நீங்கள் தயார்தானே?

 

நீங்கள் உங்கள் நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ ஒரு தமிழ்த் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அந்தப் படத்தில் திரிஷா நடித்துக் கொண்டிருப்பார். படத்தில் திரிஷாவின் காரக்டர் அன்றாடம் நாம் காணும் ஒரு பெண்னின் காரக்டராக இருக்கும். படத்தில் திரிஷவைப் பார்த்தவுடன், ‘அட! நம்ம திவ்யா மாதிரியே அச்சு அசலாகத் திரிஷா இருக்கிறாரே!’ என்று உங்களுக்குத் தோன்றும். ‘திவ்யா’ என்பது உங்கள் உறவுப் பெண்ணாகவோ, நட்பு வட்டாரத்தில் இருக்கும் பெண்ணாகவோ, உங்கள் கனவில் அடிக்கடி வந்து தொந்தரவு செய்யும், நீங்கள் விரும்ப விரும்பும் ஒரு பெண்ணாகவோ இருக்கலாம். திரிஷா, திவ்யா மாதிரி இருப்பது உங்களுக்குப் பெரிய ஆச்சரியத்தைத் தரும். அந்தத் திரைப்படத்தில் திரிஷாவின் அனைத்து முகபாவனைகளும் திவ்யாவையே ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும். அதை மனதுக்குள் வைத்திருக்காமல் அங்கிருப்பவர்களிடம், “திரிஷாவைப் பார்க்க அப்படியே திவ்யா மாதிரி இருக்கு, இல்லையா?” என்று சொல்வீர்கள். அப்போது, உங்களைச் சுற்றியிருக்கும் அனைவரும் உங்களை ஒரு வினோத ஜந்து போலப் பார்ப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொருவிதமான அபிப்பிராயம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் உங்களைத் தவிர, படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் எவருக்கும் திரிஷா, திவ்யா மாதிரியே தெரிய மாட்டார். ஒரு அசப்பில் கூட திவ்யா போலத் தெரியாது. அனைவரும் உங்களை ஏளனம் செய்வார்கள். “போயும் போயும் திவ்யாவைத் திரிஷா போல இருக்கு என்று சொல்கிறாயே!” என்று கலாய்ப்பார்கள். ஆனால் உங்களுக்கு அதற்கு அப்புறமும் திவ்யா மாதிரியே, திரிஷா தோன்றிக் கொண்டிருப்பார். இது உங்களுக்கு ஆச்சரியமாகவும் இருக்கும். ‘திவ்யாவில் இருக்கும் ஏதோ ஒருவித அபிமானம்தான், திரிஷா போலத் திவ்யாவை இவனுக்குக் காட்டுகிறது’ என்று அவர்கள் நினைப்பார்கள். நீங்களோ உங்கள் கணிப்பில் மாற்றமில்லாமல் இருப்பீர்கள். இது போலச் சம்பவங்கள் பலருக்குப் பல சமயங்களில் நடந்திருக்கும். ஒருவரைப் பார்க்கும் போது, வேறு ஒருவரைப் போல இருப்பதாக தோன்றுவது அடிக்கடி நடப்பதுதான். ஆனால் மற்றவர்களிடம் கேட்டால், அப்படி இல்லவேயில்லை என்று மறுப்பார்கள்.

 

இந்தச் சம்பவங்களில் என்ன நடக்கிறது? இங்கு யாரில் தப்பு இருக்கிறது? உங்கள் பார்வையிலா? அல்லது உங்கள் நட்புகள், உறவினர்கள் பார்வையிலா? அல்லது ஒருவரில் இருக்கும் அதீத ஈடுபாட்டின் வெளிப்பாடா? இது பார்வை சார்ந்த விசயமே இல்லாத வேறு ஒன்றா? இங்கு யார் சொல்வது பொய்? யார் சொல்வது உண்மை? நவீன அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா? ‘நீங்கள் சொல்வதும் உண்மை. உங்கள் நண்பர்கள் சொல்வதும் உண்மை’ என்கிறது நவீன அறிவியல். ‘அது எப்படிச் சாத்தியம்’ என்ற கேள்வி இப்போது உங்களுக்குத் தோன்றும். திவ்யா, திரிஷா மாதிரி இருப்பதும், இல்லாமல் இருப்பதும் ஒன்றாகச் சாத்தியமாக முடியாதே! இரண்டுமே உண்மையாக இருக்க எப்படி முடியும்? இந்தக் குழப்பமான இடத்தில்தான், அறிவியல், ஆச்சரியமான கருத்து ஒன்றைச் சொல்கிறது. ‘நீங்கள் பார்த்து, உங்கள் மனதில் பதிந்து வைத்திருக்கும் திரிஷாவின் உருவத்தை, மற்றவர்களின் மனது அப்படியே பதிந்து வைத்திருப்பதில்லை. உங்களுக்குத் திரிஷா எப்படித் தெரிகிறாரோ, அதே தோற்றத்தில் மற்றவர்களுக்கு தெரிய மாட்டார்’. அதாவது ஒரு பொருளோ, ஒரு உருவமோ ஒருவருக்குத் தெரிவது போல, அடுத்தவருக்குத் தெரியாது. திரிஷாவைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும், தனித்தனியாக வெவ்வேறு வடிவத்திலான திரிஷாக்களே தெரிந்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு திரிஷாவுக்கும் நுண்ணிய வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் நாம் ஒரே திரிஷாவைப் பார்ப்பதாகத்தான் நினைத்துக் கொள்கிறோம். நான் பார்க்கும் திரிஷாவைத்தான் நீ பார்க்கிறாய் என்று எங்கும் நம்மால் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. என்ன புரிகிறதா?

 

நவீன இயற்பியலின்படி, குறிப்பாக குவாண்டம் இயற்பியலின்படி, பூமியில் இருக்கும் அனைத்தும் தகவல்களாகவே (Information) அமைக்கப்பட்டிருக்கின்றன. நான், நீங்கள், அந்த நாற்காலி, வீட்டின் அருகே இருக்கும் கோவில் என எல்லாமே, இன்பார்மேசன்களின் மூலம் அடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை என்கிறது அறிவியல். இது நிச்சயம் புரிந்து கொள்ள முடியாத சிக்கல்தான் இல்லையா? ஒரு உதாரணம் மூலம் இதைப் பார்க்கலாம். ஒரு வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வீடு முழுவதுமே செங்கற்களால் கட்டப்பட்டவை என்றும் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டின் வெளியே நின்று அதன் அமைப்பைப் பார்க்கும் போது, அது விதவிதமான வடிவங்களில் நவீனமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதை நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் அவையெல்லாம் பல செங்கற்களின் ஒழுங்கான அமைப்பின் மூலம் உருவானது என்பது தெரியும். ஒவ்வொரு செங்கல்லும் செவ்வக வடிவில் காணப்பட்டாலும், அவற்றை வைத்து அடுக்கிக் கட்டப்பட்ட வீடு, வளைந்து அழகிய வடிவத்தில் காணப்படும். இப்போது, இந்தச் செங்கற்களை ஒழுங்காக அடுக்குவதற்கு எது உதவியது என்று பார்த்தால், அந்த வீடு கட்டுவதற்கென்று ‘வரைவு’ ஒன்று, இதற்கென்றே படித்துப் பட்டம் பெற்ற ஒருவரால் வரையப்பட்டிருக்கும். அந்த வரைவு, கணணி மூலமாக கணித விதிகளின்படி வரையப்பட்டிருக்கும். அந்த வரைவை அடிப்படையாக வைத்தே அந்த வீடு கட்டப்பட்டிருக்கும். இந்த வரைவை எடுத்துக் கொண்டால், அந்தக் கட்டடம் அமைப்பதற்கான சகல தகவல்களையும் (informations) அது கொண்டிருக்கும். அதாவது, அமைக்கப்படும் அந்த வீடும் இந்தத் தகவல்களைக் கொண்டதாகத்தான் இருக்கும். புரிகிறதா?

இது போலத்தான் ஒரு மனிதனும். ‘கலம்’ (Cell) என்று சொல்லப்படும் மிகச் சிறிய ஒன்றினால் உருவாக்கப்பட்டிருக்கிறான். நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும் கலங்களின் கட்டட அமைப்பே மனிதன். மனிதன் இந்த வகையில் அமைக்கப்பட வேண்டும் என்ற தகவல்களை அவனுள் இருக்கும் மரபணுக்கள் (DNA) வைத்திருக்கும். சொல்லப்போனால், DNA யில் இருக்கும் இன்பார்மேசன்களின் வெளிப்பாடுதான் ஒரு மனிதன். இது போலத்தான் அனைத்துமே! அணுவிலிருந்து அண்டம் வரை அனைத்தும் ஒரு வகைத் தகவல்களின் அடிப்படையிலேயே அதனதன் உருவங்களை எடுத்திருக்கின்றன. இப்போது கணணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நாம் பார்க்கும் படங்கள், காணொளிகள், பாடல்கள், பேச்சுக்கள், எழுத்துகள் எல்லாமே 0, 1 என்னும் பைனரி வகைத் தகவல்களாகவே கணணிக்குள் இருக்கின்றன. கணணியில் நீங்கள் பார்க்கும் அழகான ஒரு போட்டோ, இரண்டேயிரண்டு கணித இலக்கங்களால் உருவாக்கப்பட்ட தகவல்கள் என்றால் நம்பவே முடியாமல் இருக்கிறதல்லவா? கணணியை விடுங்கள். தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி, சாட்லைட் என அனைத்துமே மின்காந்த அலைகள் என்று சொல்லப்படும் தகவல்களதான். உங்கள் வீட்டுக்குள் இருக்கும் தொலைக்காட்சியில் தெரியும் கமலஹாசன் நடப்பார், இருப்பார், சிரிப்பார், நடிப்பார் எல்லாமே செய்வார். இவையெல்லாம் மேலே பறந்து கொண்டிருக்கும் சாட்லைட் மூலமாக ஒளிபரப்பப்படும் மின்காந்த அலைகள்தான் (Electromagnetic wave). அந்த அலைகளில் கமலஹாசன் தகவல்களாக மாறி, தானும் ஒரு அலையாக நம் வீட்டின் தொலைக்காட்சியிலும் நடக்கிறார், சிரிக்கிறார், வருகிறார்.

அண்டம் முழுவதும் இருக்கும் திடப்பொருட்கள் அனைத்துமே ஒரு தகவல்களின் கட்டமைப்பின் மூலமே கட்டியமைக்கப்பட்டிருக்கின்றன. தகவல்களின் ஒழுங்கமைப்புத்தான் என்னையும், உங்களையும், நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த ‘உயிர்மை’ இதழையும் வடிவமைத்திருக்கிறது. நவீன அறிவியல் இதைத்தான் தெளிவாகச் சொல்கிறது. இதை மையமாக வைத்துத்தான் காலப் பிரயாணத்தின் (Time Travel) சாத்தியத்தையும் கணித ரீதியாக நவீன அறிவியல் நிறுவவும் செய்கிறது. இப்போதும் புரியவில்லை என்றால், ஒரு சின்ன உதாரணத்தைச் சொல்கிறேன். நீங்கள், உங்கள் காதலிக்கு ஒரு அழகிய கண்ணாடியிலான தாஜ்மஹால் உருவப் பொம்மையைப் பரிசாக வாங்கிச் செல்கிறீர்கள். அதைக் கைகளில் கொடுக்கும் போது, அவள் அடையப் போகும் மகிழ்ச்சியையும் உணர்ச்சியையும் சிந்தித்துக் கொண்டே செல்வதால், எதிரே இருக்கும் விளக்குக் கம்பத்தைக் கவனிக்காமல் அதில் மோதிவிடுகிறீர்கள். கையிலிருந்த தாஜ்மஹால் நிலத்தில் விழுந்து சிதறுகிறது. அதன் கண்ணாடிச் சிதறல்கள் நிலம் முழுவதும் பரவிக் கிடக்கின்றது. ஆனால் உங்களிடம் இறந்தகாலத்துக்குப் பயணம் செல்லக் கூடிய ஒரு கருவி (Time Machine) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிகமெல்லாம் வேண்டாம், சில நிமிடங்கள் மட்டும் இறந்த காலத்திற்குப் பின்னோக்கிச் செல்லும் சக்தி உள்ள கருவி அதுவாக இருந்தால் மட்டுமே போதும். அந்தத் தாஜ்மஹால் பொம்மை சிதறிய அந்தக் கணத்திலிருந்து ஒரு நிமிடம் பின்னாடி பயணம் செல்கிறீர்கள் என்̀று வைத்துக் கொள்ளுங்கள். திரைப்படங்களில் காட்டுவார்களே ‘ஸ்லோ மோஷன்’, அதுபோல மெதுமெதுவாக அந்த ஒரு நிமிடம் பின்னோக்கி நகர்கிறது என்று சிந்தியுங்கள். அப்போது என்ன நடக்கும்? கீழே எங்கெல்லாமோ சிதறி விழுந்து கிடக்கும் தாஜ்மஹாலின் ஒவ்வொரு சின்னத் துண்டுகளும், மெதுமெதுவாகச் சேர்ந்து தாஜ்மஹால் உருவம் பெற்று, உங்கள் கைகளை நோக்கி மேலே நகரத் தொடங்கும். நிச்சயம் இந்தக் காட்சியை உங்களால் கற்பனை பண்ண முடியும். விழுந்துடைந்த அதே வடிவத்தில் மீண்டும் அதே தாஜ்மஹால் எப்படி உருவாக முடியும் என்று பார்த்தால், அவையெல்லாம் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட தகவல்களின் மீளமைப்பு என்பது புரியும். இந்தச் சம்பவத்தில் நடந்த அனைத்தும் சாத்தியம்தான் என்று நவீன குவாண்டம் இயற்பியம் கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்கிறது. அதை முழுமையான இயற்பியல் கணிதச் சமன்பாடுகள் மூலம் சமப்படுத்தி, ‘இது முடியும்’ என்று திடமாகச் சொல்கிறது. இதை எந்த விஞ்ஞானியும் இதுவரை மறுக்கவே இல்லை. ‘என்ட்ராபி’ (Entropy) என்னும் ஒரு விளைவினால் ஏற்படும் தொடர் சிக்கலினால்தான் இது சாத்தியம் இதுவரை முடியாமல் இருக்கிறது. இந்த விளைவு சரிசெய்யப்படும் பட்சத்தில் காலப் பயணம் பற்றிய பல முடிவுகளுக்கு நாம் எப்பொதோ வந்திருக்கலாம். ‘என்ட்ராபி’ என்றால் என்னவென்று நான் இங்கு விளக்க முயற்சித்தால், ‘தர்மோ டைனமிக்ஸ்’ (Thermodynamics) என்றெல்லாம் போக வேண்டியிருக்கும். அது ரொம்ப நீளமாயிருக்கும். அதனால் இந்த ‘என்ட்ராபி’ பற்றித் தனிக் கட்டுரையாகப் பின்னர் எழுதுகிறேன்.

இப்போது தாஜ்மஹால் சிதறிய சம்பவத்துக்கு நாம் மீண்டும் வரலாம். முழுமையாக இருந்த ஒரு தாஜ்மஹால் கண்ணாடிப் பொம்மை, ஏதோ ஒரு தகவலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருந்ததால்தான், அது சிதறி விழுந்த பின், காலத்தினூடாகப் பின்னோக்கிப் பிரயாணம் செய்யும் போது அந்தத் தகவல்கள் மீண்டும் பெறப்பட்டு ஒரு தாஜ்மஹாலாக உருவாகலாம். அதாவது ஒன்றாக இருந்த தகவல்கள் நிலத்தில் விழுந்து எங்கெல்லாமோ சிதறி, மீண்டும் ஒழுங்கான வடிவத்துடன் தாஜ்மஹாலாக மாறுகிறது. இது தகவல்களாக இல்லாமல் இருந்திருக்கும் பட்சத்தில், அவற்றை நம்மால் ஒன்றாகச் சேர்த்திருக்கவே முடியாது. தகவல்கள் அடிப்படையில் சேர்க்கப்படாமல் இருந்திருக்கும் பட்சத்தில், தாஜ்மஹாலின் அடிப்பாகம் மேலேயும், தூண்கள் கிடையாகவும், கோபுர உச்சி சுவரிலுமாகத் தாஜ்மஹால் உருவாகியிருக்கும். சொல்லப் போனால், அது தாஜ்மஹாலாகவே இருக்காது. இந்தச் சம்பவத்தினூடாக அறிவியல் சொல்ல வருவது என்னவென்றால், நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாமே தகவல்கள்தான். நான் நானாக இருப்பதற்கும், திரிஷா திரிஷாவாக இருப்பதற்கும், திவ்யா திவ்யாவாக இருப்பதற்கும் காரணம், நாமெல்லாம் தகவல்களால் வடிவமைக்கப்பட்டிருப்பவர்கள் என்பதுதான். இப்போது நீங்கள் திவ்யாவைப் பார்க்கும் போது, என்ன நடைபெறுகிறது என்பதையும் கொஞ்சம் கவனியுங்கள். திவ்யாவில் பட்டுத் தெறித்து வரும் ஒளியானது உங்கள் கண்களினூடாகச் சென்று விழித்திரையில் விழுந்து, மீண்டும் அது மூளைக்கு அனுப்பப்பட்டுத் திவ்யா உங்களுக்குத் திவ்யாவாகத் தெரிகிறார். இதில் நடப்பது என்ன? திவ்யா என்னும் தகவல் கட்டமைப்பு, ஒளி அலைகளால் வருடப்பட்டு, ஒளி அலைகள் தகவல்களாக நம் கண்களூடாக மூளைக்குச் செல்கிறது. அதுமட்டுமில்லாமல், விழித்திரையில் தலைகீழாக விழும் விம்பம், நியூரான்கள் மூலமாக மின்னலைகள் என்னும் தகவல்களாக மாற்றப்பட்டுத்தான் மூளைக்குள் கொண்டு செல்லப்படுகின்றன. அதாவது, இணையத்தில் நீங்கள் ஒரு திரைப்படத்தை ‘தரவிறக்கம்’ (Download) செய்வது போல, ‘திவ்யா’ என்னும் தகவல்கள் உங்கள் மூளைக்குள் டவுன்லோட் செய்யப்படுகிறது. இப்போது யோசித்துப் பாருங்கள். நீங்கள் காணும் காட்சிகள் அனைத்தும், நமது மூளை என்னும் மிகப்பெரிய கணணிக்கு டவுன்லோட் செய்யப்படும் தகவல்கள்தான் என்பது புரியும்.

ஒவ்வொரு தனிநபரின் மூளையின் கணிப்புத் திறனும், இன்னுமொருவரின் கணிப்புத் திறன் போல இருக்கவே இருக்காது. அவற்றிற்கிடையில் மிகப்பெரிய வித்தியாசங்கள் இருக்கும். ஒருவருக்கு டவுன்லோட் ஆவதைப் போல இன்னுமொருவருக்குத் தகவல்கள் டவுன்லோட் ஆவதே இல்லை. மனிதனின் கண்பார்வையின் திறன், நிறக்குருடு, மூளையின் திறன் என்பன, எப்போதும் மனிதனுக்கு மனிதன் வேறுவேறாகத்தான் இருக்கும். இதனால்தான், உங்களுக்குத் திரிஷா திவ்யாவாகவும் மற்றவர்களுக்கு அப்படி இல்லாமலும் இருக்கிறது. இருவருமே டவுன்லோட் செய்யும் தகவல்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், நமக்கே தெரியாத பல நுண்ணிய வித்தியாசங்கள் அவற்றுள் இருந்து கொண்டே இருக்கும். இதுதான் இந்தப் பிரச்சனைக்கான அடிப்படைக் காரணமாக அமைகிறது. இப்போது யோசித்துப் பாருங்கள். உங்கள் நண்பன் மிகவும் அழகாயிருப்பான். ஆனால் அவன் அழகேயில்லாத ஒரு பெண்னை உருகி உருகிக் காதலிப்பான். இது போல, அழகான பெண்கள், அழகேயில்லாத ஆணை விழுந்து விழுந்து காதலிப்பார்கள். ஆனால் ‘இவனுடைய அழகிற்குப் பார், இவளைப் போய்ப் பிடித்திருக்கிறானே!’ என்று மற்றவர்கள் நினைப்பார்கள். அவனுக்கோ அவள் தேவதையாகத் தெரிவாள். இந்த எஃபக்டுக்கும் காரணம் நான் மேலே சொன்னதுதான். ஒருவருக்கு மிகவும் அழகாகத் தெரியும் ஒருவர், மற்றவருக்கு அழகில்லாமல் தெரிவதன் காரணத்தில் பொத்தாம் பொதுவில் காதலிப்பவர்களைக் குற்றம்சாட்டுவது எவ்வளவு தப்பு என்பது தெரிகிறதா? எல்லாமே தகவல்களின் டவுன்லோட் செய்யும் மாயம்.

 

உண்மையைச் சொல்லப் போனால், மேலே சொல்லப்பட்ட சம்பவங்களை நான் சொல்வதற்குக் காரணமே வேறு. திவ்யாவும், திரிஷாவும் மிகப்பெரிய அறிவியல் சிக்கல் ஒன்றின் அடிப்படையைச் சொல்லப் பயன்படுத்தப்பட்டவர்கள். சமீபத்தில் அறிவியலில் பெரும் விவகாரமாகவும், விவாதமாகவும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு அறிவியல் போரைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். ‘அண்டத்தில் எங்குமே கருந்துளைகள் (Blackholes) இல்லை’ என்று . உலக இயற்பியல் வரலாற்றில் மிகமுக்கியமானவரும், நவீன இயற்பியலில் பெயர் பெற்றவரும், கடந்த பல தசாப்தங்களாக கருந்துளைகளைப் பற்றி ஆராய்ந்து வருபவருமான ‘ஸ்டீவன் ஹாக்கிங்’ (Stephen Hawking) அவர்கள் சொன்ன புரட்சிகரமான கருத்துத்தான், நான் திவ்யாவையும், திரிஷாவையும் இங்கு இழுக்கக் காரணமானது. நாஸா உட்படப் பல ஆராய்ச்சி மையங்களில், பல லட்சக்கணக்கான கருந்துளைகளைக் கண்டுபிடித்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், ஸ்டீபன் ஹாக்கிங்கின் இப்படியானதொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அவர் இப்படி ஒரு முடிவுக்கு வந்ததற்குக் காரணம் ஒரு போர் (War). கத்தியின்றி, இரத்தமின்றி நடைபெறும் அறிவியல் போர் அது. ஒருபுறம் ஸ்டீபன் ஹாக்கிங்கும், மறுபுறம் ‘லெனார்ட் சஸ்கிண்ட்’ (Leonard Susskind) என்னும் இன்னுமொரு அறிவியல் மாமேதைக்கும் இடையில் நடக்கும் போர். சஸ்கிண்ட் என்பவரும் சாதாரணமானவரல்ல. உலகப் புகழ்பெற்ற ஸ்ட்ரிங்க் தியரியின் (String Theory) கட்டமைப்பாளர்களில் ஒருவர். இவர்கள் இருவரும் கருந்துளையில் நடைபெறும் மிகமுக்கிய நிகழ்வு ஒன்றைப் பற்றித்தான் முரண்படுகிறார்கள். அதனாலேயே இந்தப் போரும் நடந்து கொண்டிருக்கிறது.

 

ஸ்டீபன் ஹாக்கிங், ‘கருந்துளைக்குள் சென்று விழும் எந்தப் பொருளானாலும், அதன் மையத்தை நோக்கி இழுக்கப்பட்டு இல்லாமல் போய்விடும்’ என்கிறார். ஆனால் சஸ்கிண்டோ, ‘அண்டத்தில் எதையும் அழிக்க முடியாது. திடப்பொருளாக இருந்தாலென்ன, சக்தியாக இருந்தாலென்ன அவை இன்னுமொன்றாக மாற்றப்பட்டு அண்டத்திலேயே இருக்குமேயொழிய, இல்லாமல் போகாது’ என்கிறார். இதையொட்டி சஸ்கிண்ட் சொன்ன புரட்சிகரமான இன்னுமொரு கருத்துத்தான் நான் இந்தக் கட்டுரையையே எழுதக் காரணமானது. சஸ்கிண்ட் சொல்கிறார், ‘கருந்துளைக்குள் சென்று விழும் பொருட்கள், கருந்துளையின் அதியுயர் வெப்பக் கதிர்களால் சிதைக்கப்பட்டு, அவை தகவல்களாக (Informations), கருந்துளையின் எல்லையாக இருக்கும் ‘நிகழ்வு எல்லையில்’ (Event Horizon) பதிந்திருக்கும்’ என்கிறார். இப்படிப் பார்க்கும் போது சஸ்கிண்ட் சொன்னதை விட, ஹாக்கிங் சொன்னதையே ஏற்றுக் கொள்ள நீங்கள் விரும்புவீர்கள். ஆனால், அதிகமான அறிவியல் விஞ்ஞானிகள் சஸ்கிண்ட் சொன்னதையே ஏற்கின்றனர்.

சஸ்கிண்ட் இத்துடன் நிறுத்திவிடவில்லை. ‘சினிமாப்படத்தை ஒளிபரப்பும் புரஜெக்டர் சாதனம் போல, நிகழ்வு எல்லையானது, தன்னுள் பதிந்து வைத்திருக்கும் தகவல்களை, ஹோலோகிராம் படக் காட்சிகள் போல விண்வெளியில் ஒளிபரப்புகிறது. அது ஒளிபரப்பும் திரைப்படக் காட்சிகள்தான் நானும், நீங்களும், அமெரிக்க ஜனாதிபதியும், பூமியில் இருக்கும் அனைத்துப் பொருட்களும் என்கிறார். பூமியில் நாம் பார்க்கும் எதுவுமே உண்மையில்லை. நாம் அனைவருமே கருந்துளைகள் தெறிக்க விடும் மாயைத் தோற்றங்கள். இந்த ப்ளாக்ஹோல்களின் Even Horizon வெளிவிடும் தகவல்களால் (Informations) வெளிப்படும் தோற்றங்களைத்தான், நாம் நிஜமாக நடப்பதாகக் கற்பனை பண்ணிக் கொண்டு ஏமாறுகிறோம். அதாவது வாழ்வதாக நாம்  நினைப்பதே பொய்’ என்று கிலியைக் கிளப்புகிறார். இதில் அவர் குறிப்பிட்ட ‘தகவல்களை’ (Informations) விளக்குவதற்காகத்தான், திரிஷா இந்தக் கட்டுரையில் வந்தார்.

-ராஜ்சிவா-

6 thoughts on “திரிஷாவும் திவ்யாவும் (Blackhole Information) – அண்டமும் குவாண்டமும் (5)

 1. ரொம்ப நல்லாவே எழுதியிருக்கீங்க…
  எனக்கு பிடித்த அல்லது அறிவுப்பூர்வமான பதிவுகளை காப்பி செய்து pdf ல் சேர்த்து வைத்து அதை மொபைலில் அடிக்கடி படிப்பது வழக்கம்… உங்கள் பதிவுகளையும் அப்படித்தான் செய்யப்போகிறேன்.

  கருந்துளைகளை விடுங்கள்..
  ௧) டைம் டிராவல் என்றால்.. கடந்த அல்லது நிகழ் காலத்திற்கு போவோம் என்று வைத்துகொள்ளுங்கள் (நம்மை தவிர்த்து) சுற்றுப்புற சூழல்கள் எவ்விதம் உருவாக்கப்படும் (கட்டிடம் அல்லது எவ்வகை பொருட்களும்). சுற்றுசூழல் மாயை என்றால் டைம் டிராவலில் நாம் நிற்கும் இடமும் மாயை என்றாகும் – அப்படியெனில் நிதர்சனமான இடபெயர்ச்சி அல்லாமல் அது ஒரு கனவு போல தானே இருக்கும் ?
  ௨) சில சமயம், இப்படியும் யோசித்ததுண்டு : (உதாரணத்துக்கு) நான் இருக்கும் இடம் சார்ந்த மனிதர்கள் மட்டுமே உண்மை (??) நான் எங்கு பயனப்படுகிறேனோ அல்லது யாரை சந்திக்கிறேனோ அவர் / அது / அந்த இடம் அந்த சமயத்தில் உருவாக்கப் பட்டு என் சந்திப்பு முடிந்த பிறகு அவை மறைந்து விடுகின்றன…
  ௩) விண்வெளியில் எந்த பொருளுக்கும் அழிவு இருக்காதென்ற கருத்துக்கு உடன்படுகிறேன். எப்போதும் ஒரு பொருள் இன்னொன்றாக மாற்றம் மட்டுமே அடைகிறது…

  • நன்றி ராஜ்குமார்.
   நீங்கள் சொல்வதும் நன்றாகவே இருக்கிறது.

 2. சஸ்கிண்ட் சொல்வதுதான் என்ன? எங்கேயோ இருக்கும் கருந்துளையின் நிகழ்வு எல்லையின் விம்பம்தான் நாம் இருக்கும் இந்த சூரிய குடும்பமா?

  எங்கிருந்து நிகழ்வு எல்லையில் தகவல்கள் பெறப்பட்டன? அங்கே விழும் கோள்களில் எப்படி தகவல்கள் சென்றடைந்தன? அந்த தகவல்கள் எங்கிருந்து எப்படி உண்டாயிற்று?

  நாமெல்லாம் விம்பம் என்றால், எப்படி விம்பத்திற்கு உணர்ச்சிகள், விடயங்களை கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் எல்லாம் எப்படி உண்டாயிற்று?

  மிக மிக குழம்பியுள்ளேன்…….இந்த பதிவில்…..
  கொஞ்சம் இன்னும் விளக்குங்களேன்….

  • அடுத்த பதிவில் உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் இருக்கும் Anand Kumar

 3. This series is really becoming interesting with new facts in every other post !!! Your use of language makes it easy to understand. Especially i loved the comparison between movie download and information download !!! That was amazing. Keep posting :)

  P.S : The blog page format can be improved.. the text can be justified or can be done something because it is little bit hard to read and navigate in this present format.

  • ரொம்ப நன்றி Ajay.

   Blog பற்றி நீங்கள் சொல்வதைக் கவனத்தில் எடுக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>