கருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)

கருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)

     கருந்துளையொன்றுக்கு அருகே செல்லும் அனைத்தும், முடிவில்லா ஈர்ப்புவிசையால் அதன் மையத்திலிருக்கும் ஒருமைப் புள்ளியை (Singularity) நோக்கி இழுக்கப்படும் என்றார் ஸ்டீவன் ஹாக்கிங். ஒளி கூட அதன் ஈர்ப்புவிசையிலிருந்து தப்பிவிட முடியாது. தனக்கு அருகே வரும் எதுவானாலும், அதை உள்ளிழுத்துவிடும். அளவில் பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் கருந்துளையினுள்ளே சென்று, அந்த ஒருமைப் புள்ளியுடன் சங்கமமாகிவிடும். கருந்துளையானது ஆரம்பத்தில் கையளவேயுள்ள மிகமிகச் சிறிய விட்டமுடையதாகத்தான் காணப்படும். அதனுள்ளே விண்வெளியில் உள்ளவை ஒவ்வொன்றாக இழுக்கப்படுவதால், அது படிப்படியாகப் பெரிதாகிப் பிரமாண்டமானதாக மாறிவிடுகின்றது. “மிகச்சிறிய அளவுள்ள கருந்துளைக்குள், எப்படி மிகப்பெரிய கோள்களோ, நட்சத்திரங்களோ புகுந்து கொள்ள முடியும்?” என்று நீங்கள் இப்போது சிந்திக்கலாம். இதற்கான பதிலில்தான் அண்டமும், குவாண்டமும் ஒன்றாக இணையும் செயல் இருக்கிறது. அண்டத்தில் பிரமாண்ட நிலையிலுள்ள நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவற்றுக்கும், குவாண்டம் நிலையில் மிகமிகச் சிறிய அளவிலிருக்கும் உபஅணுத்துகள்களுக்கும் (Subatomic Particles) இடையிலான தொடர்பு கருந்துளையின் மூலம் ஏற்படுகிறது. ‘அண்டமும் குவாண்டமும்’ என்னும் இந்தத் தொடரைக் கூட ஒரு கருந்துளையுடன் நான் ஆரம்பித்ததற்கு இதுவே காரணமாகவும் இருந்தது.

கருந்துளையின் எல்லையாக இருக்கும் ‘நிகழ்வு எல்லை’ வரை யாரும் செல்லலாம் என்று முன்னர் பார்த்திருந்தோம். அந்த எல்லையில் கால் வைக்கும் வரை நமக்கு எதுவும் நடக்கப் போவதில்லை. அந்த எல்லையைத் தாண்டிக் கால்வைக்கும் போது, மீண்டு வரமுடியாமல் கருந்துளையின் மையம் நோக்கி இழுக்கப்படுவோம். அதனாலேயே அந்த எல்லைப் புள்ளி, ‘திரும்பவே முடியாத புள்ளி’ (The Point of no return) என்று சொல்லப்படுகிறது. திரும்பி வரமுடியாத அளவுக்கு இழுக்கக் கூடிய ஆற்றலாக, கருந்துளையின் மையமான ‘ஒருமைப் புள்ளி’ இருக்கிறது. “கருந்துளை மிகச் சிறியதாக இருந்தாலும், அதற்குள் மிகப்பெரிய நட்சத்திரம் எப்படிப் புகுந்து கொள்கிறது?” என்ற கேள்வி நமக்குத் தோன்றியதல்லவா? கருந்துளை சிறிதாக இருந்தாலும் அதன் மையத்தின் ஈர்ப்பு விசையும், அடர்த்தியும் முடிவில்லாததாக இருக்கும். ஒரு மிகச்சிறிய கருந்துளையின் அருகே இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் செல்கிறீர்களென்று வைத்துக் கொள்ளுங்கள். நிகழ்வு எல்லையைத் தாண்டி உங்கள் வலதுகாலை வைக்கிறீர்கள். அப்போது நீங்கள் கற்பனையே செய்ய முடியாத ஈர்ப்பு விசையால் இழுக்கப்படுவீர்கள். முதலில் உங்கள் கால்பகுதியை அந்த ஈர்ப்புவிசை இழுக்க ஆரம்பிக்கும். நீங்கள் அந்த ஈர்ப்பு விசையின் வீரியத்தால் ஒரு மெல்லிய நூலிழை போல காலிலிருந்து தலைவரை நேராக்கப்படுவீர்கள். ஆறடி நீளமுள்ள உங்கள் ஒவ்வொரு பாகமும் அதீத ஈர்ப்புவிசையினால், அணுக்களாகச் சிதைந்து பின்னர் உபஅணுத்துகள்களாகச் சிதைக்கப்பட்டு, காலிலிருந்து தலைவரை நீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டப்பட்டு, பல கிலோமீட்டர்கள் நீளமான ஒரு மெல்லிய நூல் போல மையம் நோக்கி உள்ளே செல்வீர்கள். அதாவது மாவைக் குழைத்து அதை கைகளால் அழுத்தி அழுத்தி மெல்லிய ‘நூடுல்ஸ்’ இழை போல மாற்றுவோமல்லவா? அதுபோல, நீங்கள் மாற்றப்படுவீர்கள். மெல்லிய இழையென்றால், உங்களால் கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு மெல்லிய இழையாக நீட்டப்பட்டு மையம் நோக்கி இழுக்கப்படுவீர்கள். இது போலவே, ஒரு நட்சத்திரமும் மிக மெல்லிய பகுதியாக நீட்டப்பட்டு கருந்துளையினால் உறிஞ்சப்படும்.

உலகிலேயே மிகப்பெரிய கட்டடம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் கட்டடம் சீமெந்துக் கற்களினாலோ, செங்கற்களினாலோ உருவாக்கப்பட்டிருக்கலாம். செங்கற்களும், சீமெந்துக் கற்களும் அணுக்களால் உருவானவை என்பது உங்களுக்குத் தெரியும். அந்தக் கட்டடம் கட்டப்பட்ட கற்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால், அவற்றில் மொத்தமாக ட்ரில்லியன் மடங்கு ட்ரில்லியன் அணுக்கள் இருக்கின்றது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளுங்கள். அந்த ட்ரில்லியன் ட்ரில்லியன் அணுக்களின் பருமன்தான் அந்தக் கட்டடத்தின் பருமனாக இருக்கும். இப்போது, ஒரு அணுவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த அணுவைப் பத்துக் கிலோமீட்டர்கள் பெரிதானது என்று கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். பத்துக் கிலோமீட்டர்கள் பெரிதான அணுவினது அணுக்கரு ஒரு பந்தின் அளவில்தான் இருக்கும். அணுவுடன் ஒப்பிடும் போது அவ்வளவு சிறியது அணுக்கரு. அணுவின் கரு தவிர்ந்து மிகுதி எல்லாமே வெற்றிடம்தான். அதாவது, ஒரு அணுவை எடுத்துக் கொண்டால் அதில் 99.9999 வீதமான பகுதி வெற்றிடமாகத்தான் இருக்கும். எஞ்சிய பகுதியில்தான் அணுவின் அணுக்கரு இருக்கிறது. அந்த அணுக்கருவினில்தான் அணுவின் மொத்த எடையும், உபஅணுத்துகள்களும் இருக்கின்றன. இப்போது, அணுக்கருவை எடுத்துக் கொண்டால், அதனுள் 1% பகுதியில்தான் உபஅணுத்துகள்கள் அனைத்தும் இருக்கின்றன. எஞ்சிய 99% வெற்றிடமாகத்தான் இருக்கின்றது. அணுவும் வெற்றிடம். அணுக்கருவும் வெற்றிடம். இதைச் சரியாக நீங்கள் புரிந்து கொள்வீர்களாயின் நான் சொல்ல வருவது எல்லாமே புரிந்துவிடும்.

உலகிலேயே பெரிதான அந்தக் கட்டடத்தை மீண்டும் எடுத்துக் கொள்வோம். அதன் ட்ரில்லியன் ட்ரில்லியன் அணுக்களில் உள்ள அத்தனை அணுக்கருக்களையும் ஒன்று சேர்த்தால், ஒரு குண்டூசி முனையளவு பருமன் கூட அவற்றிற்கு இருக்காது. அந்த அணுக்கருக்கள் அனைத்தையும் பிளந்து, அவற்றினுள் உள்ள உபஅணுத்துகள்களை மட்டும் ஒன்று சேர்த்தால், கண்ணுக்கே தெரியாத மிகமிகமிகச் சிறிய புள்ளியின் பருமனுடன் அவை இருக்கும். உலகிலேயே பெரிய அந்தக் கட்டடம் உபஅணுத்துகள்களாகச் சிதைக்கப்பட்டால், கண்ணுக்கே தெரியாத ஒரு புள்ளியின் பருமனில்தான் இருக்கும். அந்தக் கட்டடம் கருந்துளையொன்றால் இழுக்கப்பட்டு, அதன் ஒருமை மையத்துடன் சேர்ந்தாலும், மையத்தின் பருமன் அதிகரிக்கவே மாட்டாது. ஒரு நட்சத்திரம் உபஅணுத்துகள்களாகச் சிதைந்தாலும் அவற்றின் மொத்தப் பருமன் கூடக் கண்ணுக்குத் தெரியாத புள்ளியின் அளவாகவே இருக்கும். நட்சத்திரங்களும், கோள்களும் கருந்துளை மையத்தில் ஒன்று சேர்ந்தும், அந்த ஒருமைப் புள்ளி மிகமிகமிகச் சிறிதாகவே இருப்பதன் காரணம் இதுதான். கருந்துளையின் மையப்புள்ளி மிகச்சிறியதாக இருந்தாலும், எல்லையில்லா அடர்த்தியையும், ஈர்ப்புவிசையயியும் கொண்டிருப்பதற்கான காரணமும் இதுதான். இப்படிப்பட்டதொரு நிலையில்தான், அண்டம் உருவாகக் காரணமான, ‘பிக்பாங்’ பெருவெடிப்பிற்கு முன்னர் இருந்த ஒருமைப் புள்ளியும் இருந்தது. அதனால்தான் அதைக் ‘குவார்க் கூழ்’ (Quarck soup) என்றார்கள்.

கருந்துளை மிகச் சிறிதாக இருந்து தனக்கு அருகே வருபவற்றை ஒவ்வொன்றாக விழுங்குவதால், தன் உருவத்தையும் பெரிதாக்கிக் கொள்கிறது. அதிக உணவை உண்பதால் நாம் பெருப்பது போல. கருந்துளைக்கு உணவாக இருப்பவை நட்சத்திரங்களும், கோள்களும், நெபுலாக்களும் ஆகும். நட்சத்திரமாக இருந்தாலென்ன, கோள்களாக இருந்தாலென்ன, நீங்களாக இருந்தாலென்ன, ஒரு நாய்க்குட்டியாக இருந்தாலென்ன அனைத்தும் அணுக்களின் கட்டமைப்பினாலேயே உருவாக்கப்பட்டவை. ஏதோ ஒரு ஒழுங்கற்ற ஒழுங்குடன் கூடிய ஒரு கட்டமைப்பின் மூலம் இவையெல்லாம் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் உருவத்தை நீங்கள் கண்ணாடியில் பார்த்திருப்பீர்கள். நீங்கள் பார்க்கும் உருவம் மேலோட்டமாகப் பார்க்கையில் அழகாக உங்களுக்குத் தெரிந்தாலும் (ஒவ்வொருவரும் அவரவர் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள்), அதில் ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கு இருப்பதைக் கவனிக்கலாம். நீங்கள் ‘செல்கள்’ என்னும் கலங்களால் அடுக்கப்பட்டு உருவாகப்பட்டவர். இந்தச் செல்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தால், நீங்கள் ஒரு சதுரமானவராகவோ, நீள்சதுரமானவராகவோதான் இருப்பீர்கள். ‘நான் சொல்வது புரியவில்லையா? சரி, இப்படிப் பாருங்கள்’. நீள்சதுர வடிவமான செங்கற்களை ஒரு ஒழுங்குடன் மேலே மேலே அடுக்கிக் கொண்டு வாருங்கள். அதாவது நீள, அகல, உயரங்களில் அடுக்கும் செங்கற்கள் ஒரே அளவாக இருக்க வேண்டும். அதைத்தான் ஒழுங்கு என்பார்கள். அப்படி அடுக்கும் போது, உங்களுக்குக் கிடைப்பது ஒரு நீள்சதுரமான உருவமாகத்தான் இருக்கும். ஆனால், அதே செங்கற்களை ஒழுங்கற்ற ஒரு ஒழுங்கில் அடுக்கிக் கொண்டு வந்தால், அழகான வீடு ஒன்று உருவாகும். ஒழுங்கற்ற ஒழுங்கு என்பது என்னவென்று இப்போது புரிகிறதா? இதுபோலத்தான், நீங்களும் செல்களால் ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கில் அடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். முகத்தில் இருக்கும் மூக்கு முன்னோக்கியும், காதுகள் இரண்டு பக்கங்களில் துருத்திக் கொண்டும், கைகள் தனியானதொரு பகுதியாக தோள்களிலிருந்து பிரிந்து வளர்ந்ததும் இந்த ஒழுங்கற்ற தண்மையினால்தான். ஆனாலும், வலது காது உருவாகும் போது, அதேபோல இடது காது உருவாகியதும், வலது கை உருவாகிய போது, அது போலவே இடது கை உருவாகியதும், மொத்தத்தில் உங்களுக்கு ஒரு சமச்சீரான உருவம் கிடைத்தது எல்லாமே கலங்களின் ஒரு ஒழுங்கான அமைப்பின் அடுக்கினால்தான். உங்களை நீங்கள் இனியொரு தடவை கண்ணாடியில் பார்க்கும் போது கவனியுங்கள், உங்கள் உருவத்தில் ஒரு ஒழுங்கும் இருக்கும், அது ஒழுங்கின்மையும் இருக்கும்.

உங்கள் உருவம் ஒழுங்குடனும், ஒழுங்கற்ற முறையிலும் அமைக்கப்பட வேண்டுமென்றால், அதற்கான தகவல்கள் (Informations) உங்கள் மரபணுக்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும். உங்கள் உருவம் என்றில்லை, மிருகங்கள், பறவைகள், கட்டடங்கள், பொருட்கள் எல்லாமே தகவல்களின் அடிப்படையிலேயே உருவாகியிருக்கின்றன. அதிகம் ஏன், நாம் வாழும் பூமி, சூரியன், கோள்கள், நட்சத்திரங்கள் எல்லாமே தகவல்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதைப் பற்றி விரிவாகக் கடந்த பகுதியில் பார்த்திருந்தோம். ஒன்று உருவாவதற்கு அடிப்படையாகத் தேவையானவை உபஅணுத்துகள்களும், அவை அமைக்கப்படத் தேவையான தகவல்களும்தான். இவை இரண்டும் எப்போதும் அண்டத்திலிருந்து அழிந்து போய்விடாது. அணுக்கள் மற்றும் உபஅணுத்துகள்களை எடுத்துக் கொண்டால், அவை ஒன்றிலிருந்து இன்னுமொன்றாக மாற்றப்படுமேயொழிய முற்றாக அழிக்கப்பட முடியாதவை. அது போலத் தகவல்களும் அழிக்க முடியாதவை. ஒரு பொருள் கருந்துளையினுள் நுழையும் போது, அது உபஅணுத்துகள்களாக சிதைக்கப்பட்டு மையம் நோக்கிச் சென்றாலும், அந்தப் பொருள் உருவாக்கப்பட்ட தகவல்கள் நிகழ்வு எல்லையின் மேற்பரப்பில் செய்திகளாகப் பதிவு செய்யப்படுகின்றன என்று நவீன அறிவியலில் சொல்கிறார்கள். ஒரு கருந்துளை உருவாகியது முதல் கொண்டு, அதனுள் செல்லும் அனைத்துப் பொட்களினது (பொருட்களா?) தகவல்களும், கணணியொன்றில் பதிவு செய்யப்படுவது போல, நிகழ்வு எல்லையில் பதிவு செய்யப்படுகிறது. இப்படிப் பதிவுசெய்யப்படும் தகவல்கள் அதிகரிக்க அதிகரிக்க, நிகழ்வு எல்லையின் அளவும் விரிவடைந்து பெரிதாகிக் கொண்டே போகும். இதனால் கருந்துளையின் அளவும் பெரிதாகிறது என்கிறார்கள். பதிவு செய்யப்பட்ட தகவல்கள் கருந்துளையினால் வெளிவிடப்படும் கதிர்வீச்சின் காரணமாக, ஒரு சினிமாப்படத்தைப் போல விண்வெளியின் மேற்பரப்பில் முப்பரிமாணத்தில் ஒளிபரப்புச் செய்யப்படுகின்றது. விண்வெளியின் மேற்பரப்பு இரண்டு பரிமாணங்களையுடையது (2D). அந்த இரண்டு பரிமாண மேற்பரப்பில் ஒளிபரப்பாகும் காட்சிகள் ஹோலோகிராம் (Hologram) போல, மூன்று பரிமாணக் காட்சிகளாகத் (3D) தெரிகின்றன. இப்படிப்பட்ட காட்சிகளாகத்தான் நமது பூமியும், அதில் வாழும் நாமும் ஒளிபரப்புச் செய்யப்படுகிறோம் என்று சொல்கிறார்கள். அதாவது விம்பங்களாகத் தெறிக்க்கப்படும் நாம், உண்மையாக வாழ்வதாகக் கற்பனை செய்து கொள்கிறோம் என்கிறார்கள். நான் இதை எழுதுவதாகவும், நீங்கள் வாசிப்பதாகவும் கூடக் கற்பனையே செய்கிறோம் என்கிறார்கள். அனைத்தும் நிஜமாக நடப்பதாகவே நாம் நினைத்துக் கொள்கிறோம். முன்னர் இருந்த பூமியும், அதில் வாழ்ந்த நாங்களும் எப்பொழுதோ கருந்துளையொன்றினால் விழுங்கப்பட்டுவிட்டோம். ஆனாலும் எங்களைப் பற்றிய தகவல்களும், பூமியைப் பற்றிய தகவல்களும் அந்தக் கருந்துளையின் நிகழ்வு எல்லையில் பதிந்து, இப்போது காட்சிகளாக ஒளிபரப்புச் செய்யப்படுகிறது என்கிறார்கள். ‘என்ன, தலை சுற்றுகிறதா?’ இதை வாசிக்கும் போது உங்களுக்குத் தலை சுற்றினாலும், அதுவும் ஒரு கற்பனயே! இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக் கொளும் மாயை. இந்து மதத்தின் மாயைத் தத்துவம் இதற்குள் பொருந்துவது தற்செயலானதோ தெரியவில்லை. அல்லது மாயைத் தத்துவம் என்ற ஒன்று இருக்கிறது என்பதையும் கற்பனைதான் பண்ணுகிறோமோ தெரியவில்லை. இப்படிப் பார்க்கும் போது எல்லாமே சுலபமாகிவிடும். உங்களுக்கு நெருங்கிய ஒருவர் இறந்தாலும், அதுவும் கற்பனையென்று அமைதியாக இருந்துவிடலாம். இறப்பும் பொய், பிறப்பும் பொய் என்றாகிவிடுகிறது. நவீன அறிவியல் நம்மை ஒரு வழிபண்ணிவிட்டுத்தான் ஓயும் போல.

இப்போது நீங்கள், “ஒருவன் கத்தியால் குத்தினால் வலிக்கிறது, ஒரு பெண்ணை/ஆணைப் பார்க்கும் போது பரவசமான உணர்வுகள் தோன்றுகிறது, பசிக்கிறது, நோய் வருகிறது. இந்த உணர்வுகள் எல்லாமே பொய்தானா? நன்றாகத்தான் கதையளக்கிறார்கள் இவர்கள்” என்று நினைப்பீர்கள். ‘காட்சி வேண்டுமானால் மாயையாய் இருக்கலாம். உணர்வுகள் எப்படி மாயையாக இருக்கும்?’ என்று நீங்கள் நினைப்பதில் தப்பு இல்லை. ஆனால், அதற்கும் அறிவியல் தகுந்த காரணத்தைச் சொல்கிறது.

நமக்கு நடைபெறும் சம்பவங்கள் எப்படிக் கற்பனையான ஒரு காட்சியாக இருக்க முடியும் என்பதற்கு அறிவியல் சொல்லும் காரணத்தையும், இரண்டு பரிமாணத்தில் ஒளிபரப்பாகும் காட்சி எப்படி முப்பரிமாண ஹோலோகிராமாகத் தெரிகிறது என்பதையும் அடுத்த பகுதியில் நாம் பார்க்கலாம்.

-ராஜ்சிவா-

10 thoughts on “கருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)

 1. 1. இரவில் வானில் நட்சத்திரங்கள் கீழே விழுவதை பார்கிறோமே அது என்ன?
  2. கருந்துளைக்கு ஆயுட்காலம் உண்டா?
  3. நம் பூமியும் நட்சத்திர வெடிப்பினால் உருவாகியிருந்தால், நாம் கருந்துளையை மையமாக வைத்து தான் சுற்றுகிறோமா?

 2. உயிருடன் இருக்கும் ஒருவர் தானே கற்பனை செய்ய‌ முடியும்.
  முன்னர் இருந்த பூமியும், அதில் வாழ்ந்த நாங்களும் எப்பொழுதோ கருந்துளையொன்றினால் விழுங்கப்பட்டுவிட்டோம் என்றால் எப்படி நம்மால் கற்பனை செய்ய முடியும்?
  குழப்பமாக இருக்கிறதே…

 3. அறிவியல் ஆங்கில பதங்களை அருமையாக தமிழில் வார்க்கிறீர்கள்! மகிழ்ச்சி .

 4. தெளிவாகத்தான் விளக்கியிருக்கிறீர்கள்..
  மொதோ பாய்ன்ட் ஓகே (அணுக்கருவை பற்றி)
  ஆனா இந்த ஒளிபரப்பு விஷயம்தான் எப்படி என்று புரியவில்லை..
  - எல்லாம் அழியும்போது information மட்டும் எப்படி தங்கும் அல்லது பிரதிபலிக்கும் ?
  - அப்போ அழியும் என்ற ஒரு பொருள் (கருந்துளைக்கு உள்ளே செல்லாதவரை) நிதர்சனம் தானே – அப்போ பூமி அழிந்துவிட்டது நாமெல்லாம் பிரதிபலிப்பு என்பதை எப்படி நம்புவது ? ஏன் பூமி உண்மையாய் இருக்ககூடாது.?
  - தகவல்கள் பிரதிபலிக்கிறது என்றால் அது சிதறக்கூடும் அல்லவா.. அதன் எல்லை எது ? சிதறடிக்கப்படும் என்றால் வேறு கோள்களிலும் ஜீவராசிகள் இருக்கும்… அப்போ மனிதன் கூட ?
  - பிரதிபலிப்பு / உணர்வு மூளை சம்பத்தப்பட்ட விஷயம் அது எப்படி அண்டத்துடன் ஒத்துபோகும்…

 5. முதலில் உங்கள் கருத்துகளுக்கு நன்றிகள். உங்கள் சந்தேகங்கள் அனைத்துக்கும் பதில் சொல்லும் விதத்தில் என் அடுத்த பதிவு இருக்கலாம். முடிந்த வரையில் அனைத்துக்கும் பதில் சொல்ல விழைகிறேன்.

 6. அற்புதமான பதிவு, இருமுறை பொறுமையாக படித்தால் நன்றாக விளங்குகிறது, ஆவலுடன் அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

 7. அருமையா போய்கிட்டு இருக்கு.. நிறுத்திடாதிங்க. இது மாதிரி பதிவுகள் அரிது.. கருந்துளை, குவாண்டம் பத்தி எல்லாம் எவ்வளவோ படிக்க முயன்றும் தமிழ்/ஆங்கிலம் ரெண்டிலுமே எனக்கு புரியும்படி சுலபமான விளக்கங்கள் குடுத்து யாரும் எழுதினது கிடையாது..எப்படியாவது நேரம் ஒதுக்கி எழுதுங்கள்..

 8. ஆவலுடன் அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>